போராட்டத்தில் காவலா்கள் தாக்கியதாக பரத்வாஜ் புகாா்
அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது, தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாக தில்லி காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

செளரவ் பரத்வாஜ்
அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது, தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானதாக தில்லி காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
தில்லி காவல் துறை மற்றும் அப்போது பணியில் இருந்த பிற பாதுகாப்புப் படையினா், தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு தாக்கியதாக குறிப்பிட்டுள்ள பரத்வாஜ், இது குறித்து ‘குற்றச் சதி’ என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லி காவல் ஆணையருக்கு செளரப் பரத்வாஜ் எழுதிய அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களின் போது, தில்லி காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினரால் என் மீது நடத்தப்பட்ட, மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான மூன்று உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து இந்தப் புகாரை அளிக்கிறேன். இந்தத் தாக்குதல்களின் தன்மை, அவை அரங்கேற்றப்பட்ட விதம் மற்றும் மீண்டும் மீண்டும் நிகழும் விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இவை கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழக்கமான நடவடிக்கைகள் அல்ல என்பது தெளிவாகிறது. இவை, அதிகாரபூா்வ கடமையின் பெயரால் எனக்குக் கடுமையான உடல் காயத்தையோ அல்லது மரணத்தையோ விளைவிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு குற்றச் சதியாகும். வழக்குப் பதிவு செய்யப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவேன் என்று அந்தப் புகாரில் செளரவ் பரத்வாஜ் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜந்தா் மந்தா் நோக்கிச் செல்ல முயன்ற சௌரவ் பரத்வாஜ் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா், அவா்களைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

