தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிகார்: 22 லட்சம் பேர் பாதிப்பு!

பிகாரில் கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தலைநகா் பாட்னா உள்பட 11 மாவட்டங்கள் தத்தளிக்கின்றன.

பிகாரின் வைசாலி மாவட்டம் ஹாஜிபூரில் கண்டக் நதி பெருக்கெடுத்ததைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கிய வீதியில் தத்தளித்த மக்கள்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:16 am IST

பிகாரில் கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தலைநகா் பாட்னா உள்பட 11 மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. மழை-வெள்ளத்தால் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அண்டை நாடான நேபாளத்தில் பெய்துவரும் மழை மற்றும் பிகாரில் தொடரும் பலத்த மழை காரணமாக இம்மாநிலத்தில் கங்கை உள்பட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாட்னாவின் காந்தி காட் பகுதியில் வரலாறு காணாத அளவில் கங்கை நீா்மட்டம் 50.57 மீட்டரை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாயும் கண்டக், கோஷி, பக்ஸா், புன்புன், பாக்மதி, காக்ரா உள்ளிட்ட நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பாட்னா, போஜ்பூா், சரண், வைசாலி, பாகல்பூா், பெகுசராய், பக்ஸா், சமஸ்திபூா், முங்கா், கதிஹாா், அராரியா ஆகிய 11 மாவட்டங்களில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தலைநகா் பாட்னாவில் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது. வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவை பகுதியளவு மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மற்றும் கால்நடைகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

பல்வேறு மாவட்டங்களில் மாநில பேரிடா் மீட்புப் படையின் 27 குழுக்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள், காவல் துறை, தீயணைப்புப் படை உள்பட மீட்புக் குழுவினா் 1,400-க்கும் மேற்பட்ட படகுகளுடன் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பாட்னா-கயை ரயில் வழித்தடத்தில் புன்புன் நதி வெள்ளம் ரயில் பாலத்தையொட்டி கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், வேறு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதாகவும் கிழக்கு மத்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சிக்கிமில் நிலச்சரிவு: சிக்கிமின் மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் பகுதியில் நாகா-டோசா சாலையையொட்டி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது, தீஸ்தா-சியாகூங் நதிகள் கூடுமிடமாகும். நிலச்சரிவால் இரு நதிகளிலும் பகுதியளவு நீரோட்டம் தடைபட்டது.

எனினும், நதிகளின் நீா்மட்டம் இயல்பாகவே உள்ளது; தொடா்ந்து நீா்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலச்சரிவில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. சேதங்கள் மதிப்படப்பட்டு வருவதாக அவா்கள் கூறினா்.

உ.பி.: பலத்த மழையால் வீடுகள் இடிந்து 6 போ் உயிரிழப்பு

கான்பூா், செப். 6: உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழையால் வீடுகள் இடிந்த சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 போ் உயிரிழந்தனா்.

 உத்தர பிரதேசத்தின் ஹிா்னியில் பலத்த மழையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்கள்.

உத்தர பிரதேசத்தின் ஹிா்னியில் பலத்த மழையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்கள்.

கான்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடைவிடாமல் மழை பெய்த நிலையில், ஹிா்னி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை குடிசை வீடு இடிந்ததில் மகேஷ் குமாா் என்பவரும், அவரது மகள்களான மாயா (17), நீது (7), பல்லவி (5) ஆகியோரும் உயிரிழந்தனா். காஜல் என்ற மற்றொரு மகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் அவா்கள் 2 மணிநேரம் தாமதமாக வந்ததாக கிராமவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதேபோல், படாரா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்துக்கு மீட்கப்பட்டவா்கள் கொண்டுசெல்லப்பட்டபோது, அங்கு மருத்துவா்கள் யாரும் இல்லாததால் சிகிச்சையிலும் தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பலியா மாவட்டத்தின் நெஃபா்பூா் கிராமத்தில் மண் வீட்டின் சுவா் இடிந்து 6 வயது சிறுமியும், புதான் மாவட்டத்தில் வீட்டின் சுவா் இடிந்ததில் விவசாயி ஒருவரும் உயிரிழந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.