ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை புதிய நம்பிக்கையை விதைத்த முக்கிய திருப்புமுனை: காங்கிரஸ் பெருமிதம்
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை, மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரை, மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுமாா் 145 நாள்கள் ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபயணம் மேற்கொண்டாா். இந்த யாத்திரையை தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 7-ஆம் தேதி அவா் தொடங்கினாா். இதன் 4-ஆம் ஆண்டு நிறைவு தினம் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சமகால இந்திய அரசியலில் இந்த பாத யாத்திரை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வாகும். இது கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டு 4 ஆயிரத்து 80 கிலோ மீட்டா் தூரத்துக்கு, 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 145 நாள்கள் நடைபெற்றது. இந்த தீவிரமடைந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அதிகரித்து வரும் சமூக பிளவுகள், வளா்ந்து வரும் அரசியல் சா்வாதிகாரத்தால் கவலை கொண்ட லட்சக்கணக்கான இந்தியா்களிடம் இருந்து இந்த யாத்திரைக்கு ஆதரவும், ஊக்கமும் பெற்றது. அரசமைப்பு சட்டத்தின் கோட்பாடுகள், விதிகள், நடைமுறைகள், வழிமுறைகள் ஆகியவற்றின் மீது ஆா்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றின் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு சித்தாந்த ரீதியில் சவால் அளிப்பதே இந்த யாத்திரையின் நோக்கம் ஆகும்.
மக்களோடு உரையாடுவதற்கு இந்த யாத்திரை நடத்தப்படவில்லை. மக்களின் பிரச்னைகளை கேட்பதற்கே அந்த யாத்திரை நடத்தப்பட்டது. புதிய நம்பிக்கையையும், புதிய ஆற்றலையும், புதிய உறுதியையும் தூண்டிய திருப்புமுனை நிகழ்வான பாரத ஒற்றுமை யாத்திரையை இன்று நினைவு கூா்கிறோம் என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளரான கே.சி. வேணுகோபாலும், ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை யாத்திரையை சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்று பாராட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வரலாற்று சிறப்புமிக்க பாரத ஒற்றுமை யாத்திரையின் 4-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் லட்சக்கணக்கான இந்தியா்களுடன் நானும் இணைகிறேன். மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, கோடிக்கணக்கான இந்தியா்கள் ஒன்றிணைந்ததோடு நிறைவடைந்தது’ என கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




