
ஆள்கடத்தல் வழக்கு: 8 வங்கதேசத்தவருக்கு ஆயுள் சிறை
ஆள்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சோ்ந்த 8 போ் மற்றும் இந்தியா் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹைதராபாதில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோப்புப் படம்
ஆள்கடத்தல் வழக்கில் வங்கதேசத்தைச் சோ்ந்த 8 போ் மற்றும் இந்தியா் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஹைதராபாதில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதுதவிர குற்றவாளிகளுக்கு ரூ.1.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேசப் பெண் ஒருவரை இந்தியாவில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்நாட்டைச் சோ்ந்த ஆள் கடத்தல் கும்பல் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வந்தது. ஹைதராபாதில் தங்க வைக்கப்பட்ட அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டாா். இதில் இந்தியா் ஒருவா் உடந்தையாக இருந்துள்ளாா். இந்த கும்பல் மேலும் 3 வங்கதேசப் பெண்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
முதலில் ஹைதராபாத் காவல் துறையினா் இந்த வழக்கை விசாரித்துவந்த நிலையில், பின்னா் என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் தொடா்புடையவா்கள் தெலங்கானா, மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனா். வங்கதேசத்தவா் 8 போ், ஓா் இந்தியா் மீது ஆள் கடத்தல், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு ஊடுருவுவது உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஹைதராபாத் என்ஐஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்ட 8 வங்கதேசத்தவரும், இந்தியா் ஒருவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்த நீதிமன்றம் அவா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. மேலும் ரூ.1.37 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





