
தில்லி கலவர வழக்கு: மீரான் ஹைதரின் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு!
மீரான் ஹைதருக்குத் திருமணத்தை முன்னிட்டு ஜாமீன் நிபந்தனைகளில் விலக்கு அளிப்பதைப் பற்றி.

உச்ச நீதிமன்றம் - file photo
2020-ஆம் ஆண்டு தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீரான் ஹைதருக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, மீரான் ஹைதருக்கு அக்டோபர் 17-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் மற்றும் அக்டோபர் 24 ஆகிய தேதிகளில் அவர் ஆஜராகி வருகையைப் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிப்பதாகத் தெரிவித்தது.
அதேவேளையில், சமூக ஊடகங்களில் எதையும் பதிவிடக்கூடாது, எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்வோ, கூட்டங்கள், பேரணிகள், சந்திப்புகளில் கலந்துகொள்ளவோ கூடாது உள்ளிட்ட பிற ஜாமீன் நிபந்தனைகள் அனைத்தும் வழக்கு முடியும் வரை மாற்றமின்றி தொடரும் என்று நீதிமன்றம் கூறியது.
மீரான் ஹைதர் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, மீரான் ஹைதர் வாரத்திற்கு இருமுறை, அதாவது திங்கள், வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணிக்குள் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2020 தில்லி கலவர வழக்கில் மீரான் ஹைதர் மற்றும் சமூக ஆர்வலர்களான குல்ஃபிஷா பாத்திமா, ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கியது.
அப்போது, வழங்கப்பட்ட சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று வலியுறுத்தியதோடு, 11 நிபந்தனைகளையும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







