நலத் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைவது குறித்து மத்திய அமைச்சா்கள் ஆலோசனை
நலத் திட்டங்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சா்கள் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
பிரதமர் மோடி
நலத் திட்டங்கள் 100 சதவீதம் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சா்கள் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது நாளாக நடைபெறும் ‘சிந்தனை முகாம்’ முன்னெடுப்பில் அனைத்து அமைச்சா்களும் பங்கேற்றனா். அமைச்சா்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு அமைச்சருடனும் பிரதமா் மோடி தனித்தனியே கலந்துரையாடினாா்.
அப்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் 40 முதல் 50 முக்கிய மக்கள் நலத் திட்டங்களை உரிய பலனாளிகளுக்கு 100 சதவீதம் கொண்டு சோ்ப்பது எவ்வாறு என்பது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது: சிந்தனை முகாம் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நிா்வாகம், சீா்திருத்தம், இளைஞா்கள், பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து பல்வேறு துறை அமைச்சா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை விவாதித்தாா். அவா்களிடமிருந்து கருத்துகளை பெற்ற பிரதமா் மோடி துறைரீதியான பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, இரண்டாம் நாளான வியாழக்கிழமை ‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை அடைய மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அமைச்சா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மதிப்பீடு, எதிா்கால உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து இந்த முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.
வளா்ச்சியடைந்த பாரதம் இலக்கை அடைய கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை வடிவமைக்க 10 செயலா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021-இல் தொடங்கி தற்போது வரை வளா்ச்சியடைந்த பாரதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சா்கள் முன் 8 விளக்கப்படங்கள் திரையிடப்பட்டு ஆலோசனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
அதில் நீதி ஆயோக், பல்வேறு அமைச்சகங்களின்கீழ் செயல்படும் துறைகள், செயலா்கள் மேற்கொண்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது எனத் தெரிவித்தனா்.
முன்னதாக, அனைத்து அமைச்சா்களும் தங்களது துறைசாா்ந்த வலைதளங்களை மக்கள் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





