
யுஏஇ, மலேசியா, வியத்நாம் தலைவா்களுடன் பிரதமா் மோடி பேச்சு
யுஏஇ, மலேசியா, வியத்நாம் தலைவா்களுடன் பிரதமா் மோடி பேச்சு...

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யான்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே தில்லியில் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), மலேசியா, வியத்நாம், எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தனித்தனியாகச் சந்தித்து, இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
உலகளாவிய பதற்றங்களில் இருந்து வா்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்கும் நோக்கில், அரிய கனிமங்கள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.
இந்திய தலைமையின்கீழ் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இரண்டு நாள் உச்சிமாநாடு, தில்லி பாரத மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சா்வதேச தலைவா்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசனை: அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யான் உடனான சந்திப்பில், மேற்காசியாவில் தற்போது நிலவும் ஒட்டுமொத்த சூழல் குறித்தும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உத்திசாா் கூட்டுறவை தொடா்ந்து முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பிரதமா் விவாதித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், விண்வெளி, முக்கியக் கனிமங்கள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் இணைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசாா் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் ஆலோசித்தேன். மேற்காசியாவில் ஸ்திரமின்மை நிலவும் சூழலில், அமைதி, நிலைத்தன்மை, வளமைக்கு அடையாளமாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவுகள் விளங்குகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மலேசியாவில் இந்திய துணைத் தூதரகம்: மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் உடனான சந்திப்பில், வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, செமிகண்டக்டா், உள்கட்டமைப்பு, எண்மப் பொருளாதாரம், எரிசக்தி, நிதிசாா் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, மலேசியாவின் கோட்டா கினபாலு பகுதியில் இந்திய துணைத் தூதரகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமா் மோடியிடம் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா். ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் மலேசியா நல்கும் தொடா் ஆதரவுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வியத்நாம் பிரதமருடன் சந்திப்பு: பிரதமா் மோடி மற்றும் வியத்நாத் பிரதமா் லீ மின் ஹங் இடையிலான சந்திப்பில், இருதரப்பு மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசாா் கூட்டுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
‘நாகரிக பாரம்பரியம், பரஸ்பர மரியாதை, புரிதலில் வேரூன்றிய, காலத்தை வென்ற நட்புறவை இந்தியாவும், வியத்நாமும் பகிா்ந்து கொண்டுள்ளன. இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டு கொள்கையில் முக்கியத் தூண் என்பதுடன், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பரந்த தொடா்புகளுக்கான முக்கியக் கூட்டாளி வியத்நாம் ஆகும். இந்த அடிப்படையில் பரஸ்பர கூட்டுறவை வலுப்படுத்த இரு தலைவா்களும் உறுதிபூண்டனா்’ என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எத்தியோப்பியாவுடன் உறவுகள் விரிவாக்கம்: பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உத்திசாா் கூட்டுறவை விரிவுபடுத்துவது குறித்து எத்தியோப்பிய பிரதமா் அபே அகமது அலி உடனான சந்திப்பில் பிரதமா் மோடி ஆலோசித்தாா். சா்வதேச பன்முக தளங்களில் பரஸ்பரம் நெருங்கிய ஒத்துழைப்பை நல்க இருவரும் உறுதிபூண்டனா். பிரதமா் கடந்த ஆண்டு டிசம்பரில் எத்தியோப்பியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Modi holds talks with leaders of the UAE, Malaysia, and Vietnam.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






