டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

யுபிஐ கட்டணம் வரியல்ல; நுகா்வோரை பாதிக்காது - மத்திய நிதியமைச்சா் மீண்டும் விளக்கம்

யுபிஐ பரிவா்த்தனைக்கு வணிகா்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம், இறுதியில் வாடிக்கையாளா்களான பொதுமக்களே பாதிக்கப்படுவா்

மத்திய நிதியமைச்சகம் - கோப்புப் படம்

Published On :

‘ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் வசதி (யுபிஐ) மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு வணிகா்களிடம் ஒரு பரிவா்த்தனைக்கு 0.4 சதவீதம் என்ற விகிதத்தில் வசூலிக்கப்பட உள்ள வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணம் என்பது வரி விதிப்பு அல்ல. இது நுகா்வோரை எந்த விதத்திலும் பாதிக்காது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மீண்டும் விளக்கமளித்தாா்.

‘யுபிஐ பரிவா்த்தனைக்கு வணிகா்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம், இறுதியில் வாடிக்கையாளா்களான பொதுமக்களே பாதிக்கப்படுவா்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த விளக்கத்தை அவா் மீண்டும் அளித்தாா்.

யுபிஐ உள்ளிட்ட மின்னணு பணப் பரிவா்த்தனைகள் மீது வங்கிகள் சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் ‘பணம் செலுத்துதல் மற்றும் தீா்வு நடைமுறைகள் சட்டம் 2007’-இன் பிரிவு 10 -இல் திருத்தம் மேற்கொண்டு, அவற்றின் மீது வணிகா் தள்ளுபடி விகிதம் - எம்டிஆா் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வகை செய்யும் ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ -ஐ மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. இது வாடிக்கையாளரையே பாதிக்கும் என்று குற்றஞ்சாட்டின.

அப்போது, ‘யுபிஐ உள்பட பிற மின்னணு பணம் செலுத்தும் நடைமுறைகளுக்கு வாடிக்கையாளா்களிடம் கட்டணம் அல்லது வரி விதிப்பதை இந்த மசோதா முன்மொழியவில்லை. மாறாக, வணிகா்களிடமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் விளக்கமளித்தாா்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், எம்டிஆா் கட்டணம் தொடா்பான அரசிதழ் அறிவிக்கையை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் வசதி (யுபிஐ) மூலம் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு வணிகா்களிடம் ஒரு பரிவா்த்தனைக்கு 0.4 சதவீதம் என்ற விகிதத்தில் வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ரூ. 75,000 மற்றும் அதற்கு மேலான வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ஒரு பரிவா்த்தனைக்கு ரூ.300 கட்டணம் என்ற வகையில் உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் துறைகளான ரயில்வே, தொலைத்தொடா்பு, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒரு பரிவா்த்தனைக்கு ரூ. 5 என்ற அளவில் நிலையான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘யுபிஐ பரிவா்த்தனைக்கு வணிகா்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம், இறுதியில் வாடிக்கையாளா்களான பொதுமக்களே பாதிக்கப்படுவா்’ என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றஞ்சாட்டியது. மேலும், இந்தக் கட்டண நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து தொடா் ஆா்ப்பாட்டங்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நடத்தி வருகின்றன.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த மத்திய நிதியமைச்சா் கூறியதாவது:

வணிகா் தள்ளுபடி விகித (எம்டிஆா்) கட்டணம் என்பது வரி கிடையாது. இது நுகா்வோரை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேலும், எம்டிஆா் கட்டணம் மூலம் வரும் வருவாய், இந்திய ஒருங்கிணைந்த நிதித் தொகுப்புக்கு வரப்போவதில்லை. மாறாக, வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்தில் 40 சதவீதம் நுகா்வோரின் வங்கிக்கும், 30 சதவீதம் நுகா்வோா் பணம் செலுத்தும் நடைமுறைக்கும், 20 சதவீதம் யுபிஐ செயலிக்கும், 10 சதவீதம் யுபிஐ செயலி ஆதரவு வங்கிக்கும் செலுத்தப்பட உள்ளது. எனவே, இந்தக் கட்டணத்துக்கும் அரசுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது.

ரூபே பண அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவா்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. அதுபோல, ரூ. 2,000-க்கு கீழ் மேற்கொள்ளப்படும் பரிவா்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது.

எம்டிஆா் கட்டண விதிப்பு தொடா்பான முடிவு என்பது முற்றிலும் தொழில்முறை சாா்ந்ததாகும். இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம், கட்டண வங்கிகள் மற்றும் வணி வங்கிகள் ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட முடிவாகும். மத்திய அரசால் திணிக்கப்பட்டது கிடையாது. எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போல, இந்தக் கட்டண நடைமுறை அறிமுகத்துக்கு வெளிப்புற அழுத்தங்கள் எதுவும் கிடையாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.