Enable Javscript for better performance
14. தம்மபதம்- Dinamani

சுடச்சுட

  
  buddha

   

  வண்டியை இழுத்துச் செல்லும் மாட்டின் கால்களைப் பின்தொடர்ந்தே சக்கரங்கள் செல்லும். - தம்மபதம் 

  மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் என்ற நூலை பாலி மொழியிலிருந்து மேக்ஸ் முல்லர் மொழிபெயர்த்தார். அவர் அதுமட்டுமா செய்தார். சம்ஸ்கிருதத்திலிருந்து வேதங்கள், உபநிஷதங்கள் என்று இந்திய ஆன்மிக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். மூலமொழி கற்றுக்கொண்டுதான்! ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு குணம், அந்த்த் தளராத தீவிர முயற்சிதான்.

  தம்மபத முதல் அத்தியாயத்தில் உள்ள முதல் பொன்மொழிதான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. வண்டியை இழுப்பதென்னவோ மாடுதான். ஆனால், சத்தம் போடுவதோ சக்கரங்கள் என்றும் இதைச் சொல்லுவார்கள்! அதிலும் ஓர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அரசியல் விமரிசனமாகக்கூட அதை எடுத்துக்கொள்ளலாம்!

  அந்த முதல் பொன்மொழிக்கு சில விளக்கங்கள் உள்ளன. மாடு என்பது நம் சிந்தனையை, எண்ணங்களைக் குறிக்கிறது. வண்டி என்பது நம் வாழ்வை, நமக்கு ஏற்பட்ட, ஏற்படப்போகும் அனுபவங்களைக் குறிக்கிறது.

  நேற்றுவரை நாம் எப்படி சிந்தித்தோம் என்பதுதான், இன்றைக்கு நாம் இப்படி இருப்பதற்குக் காரணம். அப்படியானால், இன்று நாம் சிந்திக்கும் முறையை மாற்றினால், நாளை எனப்படும் நம் வருங்காலமும் மாறும். இதுதான், பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய குறிப்பு.

  என் குருநாதர் ஹஸ்ரத் மாமா இதுபற்றி எங்களிடம் சொல்லும்போது, முன்னதை ஒரு மனிதன் புரிந்துகொண்டால், அது அவனுடையை first golden time என்றும், பின்னதைப் புரிந்துகொண்டால் அது second golden time-ஆக இருக்கும் என்றும் கூறினார்கள்.

  தம்மபதத்தை வேறு வார்த்தைகளில் என் ஞானகுரு சொல்லவில்லை. தம்மபதம் என்றல்ல, எல்லா பதங்களும் ஒரே உண்மையைத்தான் வேறுவேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கின்றன. உண்மையைப் புரிந்துகொண்டவர்களின் பேச்சு அப்படித்தான் இருக்கும்.

  இன்று நாம் பிச்சைக்காரனாக இருப்பதற்கு, நோயாளியாக இருப்பதற்கு, தோல்வி அடைந்துகொண்டே இருப்பதற்கெல்லாம், நேற்றுவரை நாம் சிந்தித்துவந்த முறைதான் காரணம். இதைப் புரிந்துகொண்டு, இன்றைய நம் எண்ணத்தை அல்லது அது ஓடும் திசையை மாற்றினால், நம் நாளைய வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்பதுதான் குறிப்பு

  குறிப்பு, குறிப்பு என்று நான் சொல்வதற்குக் காரணம் உள்ளது. தம்மபதம் எதையும் விளக்கிச் சொல்லாது. திருக்குறள் மாதிரி குட்டியாக ஒரு செய்தியைச் சொல்லும். ஆனால் புரிந்துகொண்டால், அது ஒரு காவியமாக நம் வாழ்க்கையையே மாற்றவல்லதாக இருக்கும். ‘கால் நகையால், வாய் நகை போய், கழுத்து நகை இழந்த கதை’  என்று, சிலப்பதிகாரத்தை ரத்தினச் சுருக்கமாக கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்ன மாதிரி!

  ‘சரியான திசையில் செலுத்தப்பட்ட சிந்தனையானது, நம் அம்மா அப்பாவைவிட அதிகமாக நமக்கு நன்மைகளைச் செய்யவல்லது’ என்றும் ஒரு பொன்மொழி கூறுகிறது! அப்படியானால், சரியான திசையில் சிந்தனையைச் செலுத்துவது எப்படி?

  ஒருவன், ஒருநாள் வெகுவேகமாக தன் குதிரையில் பறந்துகொண்டிருந்தான். அவ்வளவு வேகமாக அவன் போவதைப் பார்த்து, சாலையில் நின்றுகொண்டிருந்த இன்னொருவன், ‘எங்கே போகிறாய் இவ்வளவு வேகமாக’ என்று கேட்டான். அதற்கு குதிரையில் இருந்தவன், ‘எனக்கெப்படித் தெரியும்? குதிரையல்லவா என்னை இழுத்துக்கொண்டு போகிறது! அதையே கேட்டுக்கொள்’ என்றானாம்! இது ஒரு ஜென் கதைதான். சிந்தனையை நாம் பயன்படுத்த வேண்டும். அது நம்மைப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதுதான் கதையின் செய்தி.

  அதற்கு முதலில், நம் சிந்தனை எந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்படியானால், நம் எண்ணங்களை நாமே உளவு பார்க்க வேண்டும்! ஆமாம். அப்போதுதான் அவை எங்கெல்லாம் போகின்றன என்று கண்டுபிடிக்க முடியும். இப்படி ஒரு முயற்சியை நாம் செய்வோமானால், நம் சிந்தனை பெரும்பாலும் இருட்டான சந்துபொந்துகள் வழியே சென்றுகொண்டிருப்பதைக் காண முடியும்.

  அது என்ன இருட்டான சந்துபொந்துகள்? எதிர்மறையான எண்ணங்களையே நான் இப்படிக் குறிப்பிடுகிறேன். படிக்காத பாமரனாக இருந்தாலும், மெத்தப்படித்த அறிஞர்களாக இருந்தாலும், எல்லோருடைய எண்ணமும் அப்படித்தான் ஓடுகிறது. சரி, அப்படியானால் எதிர்மறையான சிந்தனை என்பது என்ன?

  இது ஒரு கேள்வியா? இதுகூடத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். கேட்காவிட்டாலும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும். நமக்கும் அடுத்தவர்களுக்கும் தீமை ஏற்படுத்துகின்ற எல்லா எண்ணங்களும் எதிர்மறையானவை. இப்போதைக்கு இப்படி வைத்துக்கொள்ளலாம்.

  ஆனால், இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும். நம் எண்ணத்துக்கு சக்தி இருப்பது உண்மைதான். ஆனால், நமக்கு வந்துபோகின்ற எல்லா எண்ணங்களுக்கும் சக்தி கிடையாது. ‘நீ நாசமாப் போக’, ’வெளங்காம போக’ என்று பலர் சபிப்பதைக் கேட்டிருக்கலாம். ஆனால், அந்த மாதிரியான எண்ணங்களுக்கெல்லாம் உண்மையிலேயே சக்தி இருக்குமானால், இந்த உலகம் அரை மணி நேரத்தில் அழிந்துபோயிருக்கும்!

  மேகங்களைப்போல், நம் மன வானில் வந்துபோகும் எல்லா எண்ணங்களாலும் மழையைப் பெய்விக்க முடியாது. அவை தோன்றித்தோன்றி மறைந்துவிடும். அவ்வளவுதான். ஏன், அவை வேண்டிய அளவு தீவிரமடையவில்லை. எல்லாப் பாலிலும் நெய் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது ஒரு செயல்முறைக்குப் பிறகான விளைவு. அந்தச் செயல்முறைக்கு உட்படுத்தாவிட்டால், எந்தப் பாலிலிருந்தும் நெய் கிடைக்காது. தெரியும்தானே? நம்முடைய நினைப்பும் இப்படிப்பட்டதுதான்.

  வண்டி ஓட வேண்டுமென்றால், முதலில் மாடு நடக்க வேண்டும். நம்முடைய எண்ணம் தீவிரப்படுவது என்றால் அதுதான். மாடு நடக்கவில்லை என்றால், தார்க்குச்சியை வைத்துப் பின்னால் குத்த வேண்டும். அதேபோல், ஒரு எண்ணம் தீவிரமடைய, அதைப்பற்றித் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும். குறிப்பிட்ட நிலையில் அமர்ந்து, குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் திரும்பத் திரும்ப அதைச் செய்தால், அந்த எண்ணம் தீவிரமடைவது தெரியும்.

  ஒரு பொருளை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். ஆனால், அது பத்தாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். உங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், வாங்க வேண்டிய அவசியம் உள்ளது. கவனிக்கவும், அவசியம் உள்ளது. அல்லது அதை வாங்க வேண்டும் என்ற பற்றி எரியும் ஆசை உள்ளது. இரண்டும் ஒன்றுதான். பற்றி எரிகின்ற ஆசை ஒரு அவசியத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், நான் மேலே சொன்னதுபோல, திரும்பத் திரும்ப நினைக்கும்போது ஒரு அற்புதம் நிகழும்.

  முதலில் பெரிய பணமாகத் தோன்றிய பத்தாயிரம், திரும்பத் திரும்ப அதைப்பற்றி நினைக்க நினைக்க சிறுத்துக்கொண்டே போகும். வாங்கிவிட முடியும் என்று தோன்றும். அதற்கான வழிகளும் புலப்பட ஆரம்பிக்கும். எண்ணம் தீவிரமடைந்துவிட்டதற்காக அறிகுறி அதுதான். இல்லையெனில், மாறனிடம் மாட்டிக்கொண்டு அந்த எண்ணம் தவிக்கும். அதுவும் எப்படித் தெரியுமா? நீரிலிருந்து எடுத்து தரையில் போடப்பட்ட மீன் துடிப்பது மாதிரியாம்!

  நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ, அதற்கெல்லாம் காரணம், ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட திசையில் திரும்பத் திரும்ப நினைத்ததுதான் என்று கூறுகிறது, இரண்டாவது தம்மபத பொன்மொழி. நெருப்பால் நெருப்பை அணைக்க முடியாது. அதேபோல், வெறுப்பால் வெறுப்பை வெல்ல முடியாது. நெருப்பை நீர் அணைப்பதுபோல், நெருப்பை நீரால்தான்  அணைக்க முடியும். அதேபோல், அன்பால்தான் வெறுப்பை வெல்ல முடியும்.

  ‘எல்லோரும் ஒருநாள் போய்த்தான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டால், எல்லா சண்டைகளும் முடிவுக்கு வந்துவிடும்’ என்கிறது இன்னொரு பொன்மொழி. 

  எவ்வளவு அற்புதமான விஷயம் பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது! இதை உணர்ந்துகொண்டால், இவ்வுலகில் தீவிரவாதம் இருக்குமா? உங்களை சோதிப்பதற்காகவே, உங்களில் யாருடைய செயல்கள் அழகுடையதாக இருக்கின்றன என்று அறிந்துகொள்வதற்காகவே, நாம் இறப்பையும் வாழ்வையும் படைத்தோம் என்று திருக்குர்’ஆனின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது.

  ‘இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டவன், உணவிலும் உணர்வுகளிலும் கட்டுப்பாடு இல்லாதவனெல்லாம் சாத்தானால் வீழ்த்தப்படுவான் என்கிறது இன்னொரு பொன்மொழி. சாத்தான் என்ற சொல்லுக்குப் பதிலாக, மாறன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேக்ஸ்முல்லர் அப்படித்தான் மொழிபெயர்த்துள்ளார். மன்மதனை மாறன் என்றும் நாம் சொல்வோம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாதவர்களுக்கு அந்தப் பெயரும் பொருந்தும்தானே?!

  ‘சரியாக வேயப்படாத கூரைக்குள் மழை பொழிவதுபோல், கட்டுப்பாடற்ற மனத்துக்குள் உணர்ச்சி வெள்ளம் பாயும்’ என்கிறது இன்னொரு பொன்மொழி. ஒரு சின்னக் குழந்தையை குழந்தையாகப் பார்க்கவிடாமல், அதை ஒரு பெண்ணின் உடலாக மட்டுமே பார்க்க வைப்பது எது? கட்டுப்பாடற்ற உணர்ச்சிதானே? அதனால்தானே பாலியல் வன்முறை என்ற புதியசொல் அல்லது சொற்றொடர் அடிக்கடி நம் காதில் விழுகிறது!

  எனக்கு ஆச்சரியமூட்டிய சில பொன்மொழிகளும் உண்டு. அவை இம்மை, மறுமை பற்றிப் பேசுகின்றன. நன்மை செய்பவன் நன்மையையும், தீமை செய்பவன் தீமையையும், இம்மையிலும் மறுமையிலும் நிச்சயம் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றன சில பொன்மொழிகள்! திருக்குர்’ஆனும் திருநபியின் வாக்குகளு,ம் இம்மை மறுமை பற்றிப் பல இடங்களில் பேசுவது நினைவுக்கு வருகிறது. இஸ்லாம் மட்டுமல்ல, எல்லா மதங்களுமே இறப்புக்குப் பிறகான வாழ்க்கை பற்றிப் பேசத்தான் செய்கின்றன.

  புத்தர் தான் வாழ்ந்த காலத்தில் எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை. புத்த மதத்தை நிர்மாணித்தவர் என்று வலைத்தளங்களில் போடப்பட்டிருப்பது துரதிருஷ்டமே. ஆனாலும், மதங்களில் சொல்லப்பட்டிருக்கும் முக்கியமான விஷயமான இம்மை, மறுமை பற்றி அவர் பேசியிருப்பது ஆச்சரியமே.

  ‘தனக்கு இணையானவனோ, தன்னைவிடச் சிறந்தவனோ இல்லையெனில், தனியாகப் பயணிப்பதே மேல். ஏனெனில், முட்டாளோடு பயணம் செய்யக் கூடாது என்று ஒரு பொன்மொழி கூறுகிறது. சரி, யார் இந்த முட்டாள்? அதற்கும் புத்தர் விளக்கம் கொடுக்கிறார்:

  ‘இவர்கள் என்னுடைய மகன்கள். இவை என்னுடைய செல்வம் என்று நினைப்பவர்களே முட்டாள்கள் என்று கூறுகிறார்! ஏன்? அவனே அவனுக்குச் சொந்தமில்லை. இதில் குழந்தைகள், செல்வம், சொத்து, மனைவி எல்லாம் தனக்குச் சொந்தம் என்று நினைப்பதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை’ என்று கூறுகிறார். ‘உங்கள் குழந்தைகள் உங்களவர்கள் அல்ல, உங்கள் மூலமாக வந்தவர்கள்’ என்று கலீல் ஜிப்ரான் கூறியது நினைவுக்கு வருகிறது!  எதுவுமே சொந்தமில்லை, எல்லாமே தாற்காலிகமானது என்ற உண்மையப் புரிந்துகொண்டவர்களே அறிவாளிகள் என்று புத்தர் கூறுகிறார்.

  ‘உண்மையை அறிந்துகொண்ட ஞானிகள், எதற்கும் அசைந்துகொடுப்பதில்லை. அது புகழ்ச்சியாயினும் சரி, இகழ்ச்சியாயினும் சரி. காற்றுக்கு அசையாத பாறையைப் போன்றவர்கள் அவர்கள்’ என்கிறது ஒரு பொன்மொழி. ‘மலையாடுமா காற்றடித்தால்’ என்று கேட்கும் மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.

  ஒருநாள், புத்தர் தன் சீடரிடம் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அருகில் ஓடிய ஆற்றில் நீர் எடுத்துவர அவன் சென்றான். ஆனால், அங்கே சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு மாடு வேறு, ஆழமற்ற அந்த ஆற்றின் குறுக்கே சென்றுகொண்டிருந்தது. இக்காரணங்களினால், தண்ணீர் கலங்கி சேறாக இருந்தது. அந்தத் தண்ணீரைக் கொடுக்க மனமில்லாமல் சீடன் திரும்பிச் சென்றான். காரணத்தை புத்தரிடம் சொன்னான். பின்னர் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்த ஆற்றுக்குச் சென்றான். எல்லோம் போனபிறகு, எல்லாம் அடங்கி சேறெல்லாம் கீழேபோய், ஆற்றின் தண்ணீர் தூய்மையாக அப்போது இருந்தது. அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான். அவரும் அதைக் குடித்தார். பின்னர் கேட்டார்.

  ‘அந்த தண்ணீரைச் சுத்தம் செய்ய நீ என்ன செய்தாய்?’

  ‘நான் ஒன்றும் செய்யவில்லை. கொஞ்ச நேரத்தில் அதுவே சுத்தமாகிவிட்டது’.

  ‘உன் மனதும் அப்படித்தான். அழுக்குகளை நீக்க நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அழுக்கென்று புரிந்துகொண்டு அமைதியாக இருந்தால் போதும். அதுவே சுத்தமாகிக்கொள்ளும்’.

  மறுசோறு உண்டு..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai