Enable Javscript for better performance
11. மலரினும் மெல்லிது - 2- Dinamani

சுடச்சுட

  

   

  காதலின் தொடக்கம் காமம் என்றும் திருக்குறளின் மூன்றாவது பாலுக்கு காமத்துப்பால் என்று பெயர் என்றும், திருமணத்துக்குப் பிறகான காதல் உறவைப் பற்றித்தான் பேசப்போகிறேன் என்றும் சொன்னேன் அல்லவா? அதற்கு முன் காதலையும் காமத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு வரையறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இன்னும் சொல்லப்போனால், காதல் மாதிரியான வாழ்வின் எந்த உன்னதமான விஷயங்களையும் அனுபவித்துத்தான் புரிந்துகொள்ள முடியுமே தவிர, விளக்கங்கள் மூலம் தெரிந்துகொள்ளவே முடியாது.

  இன்ன நாள், இன்ன தேதி இவ்வளவு மழை பெய்யும் என்று போட்டிருக்கும் காலண்டரில் இருந்து ஒரு துளி மழையைப் பெறமுடியுமா?! குழந்தை வேண்டும் என்று அரச மரத்தைச் சுற்றிச்சுற்றி வந்தால் மட்டும் போதுமா?! வாழ்வின் அரிய, உன்னதமான, மிக அற்புதமான விஷயங்களும் இப்படித்தான். வாழ்ந்து பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றை வார்த்தைகளுக்குள் வைத்துப் புரிந்துகொள்ள முடியாது.

  நாம் அனைவருமே நம்மை உருவாக்கியவர்களின் காமத்தின் வெளிப்பாடுகள்தான், அல்லவா? காமம் என்ற பேராற்றலின் வெளிப்பாடுதானே காதல்? இதை யாராகிலும் மறுக்க முடியுமா? பூ விரிந்து மலர்வதற்கும், மயில் ஆடுவதற்கும், குயில் கூவுவதற்கும் காரணம் காதலல்லவா?

  அனுபவம் மிக்க ஒரு டாக்டரிடம் பல நோய்களைப் பற்றியும், அவை எப்படி உருவாகின்றன, எப்படி தீவிரமடைகின்றன என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அது தவறாகத்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்!

  ஆனால் ஆரோக்கியம் என்றால் என்ன, அதை எப்படிப் பாதுகாப்பது என்றெல்லாம் அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனெனில், அவர் நோய்களைப் பற்றி மட்டுமே புத்தகங்களிலும் சோதனைச் சாலைகளிலும் படித்துள்ளார். ஏன் ஆரோக்கியம் பற்றி அவர் எதுவுமே படிக்கவில்லை? ஏனெனில், படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. அது உள்ளேயிருந்து வெளிப்படுவது. காமமும், ஐ மீன், காதலும் அதுபோலத்தான். காதல் நயாகராவின் நதிமூல ஊற்று நமக்கு உள்ளே இருப்பது.

  காமத்தையும் காதலையும் எதிரிகளாகப் பார்ப்பதால் பிரச்னை நமக்குத்தான். பால் குடித்துக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தை தன் மார்பைக் கடித்துவிட்டது என்பதற்காக, குழந்தையைத் தூக்கி வீசியெறிந்து கொன்ற ஒருத்தி பற்றி சமீபத்தில் படித்தோமல்லவா?

  அப்படிப்பட்டவர்கள்தான் காதலையும் காமத்தையும் வேறுவேறாகப் பார்ப்பவர்கள்.

  நாம் எவ்வளவுதான் செக்ஸ் என்ற சொல்லையோ காமம் என்ற சொல்லையோ வெறுத்தாலும், அல்லது வெறுப்பதுபோல் நடித்தாலும் நம்முடைய கவனமெல்லாம் அதில்தான் எப்போதும் இருக்கிறது என்கிறார் ஓஷோ. அதற்கு ஒரு உதாரணமும் தருகிறார்.

  ஒரு விபத்து நடந்துவிட்டால் நாம் ஓடிச்சென்று பார்க்கிறோம். அங்கே அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு சிலர் இருக்கிறார்கள். நாம் அவர்களைப் பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும்? அவர்கள் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவரா என்றா? இல்லை. அவர்கள் ஆணா பெண்ணா என்றுதான் பார்ப்போம் என்கிறார் ஓஷோ! நம்மையும் அறியாமல் அந்த அடிப்படை உணர்வு நம்மை ஆக்கிரமித்துள்ளது என்கிறார். அந்த அடிப்படையான ஆக்கிரமிப்பு ஆற்றலைத்தான் ‘லிபிடோ’ என்று உளவியல் மேதை சிக்மண்ட் ஃப்ராய்ட் அழைத்தார். ‘லிபிடோ’வின் புராணிக வடிவம்தான் நம் மன்மதன்! மன்மத லீலை மயக்குது ஆளை பாடல் நினைவுக்கு வருகிறதா?!

  மனைவி தேவை என்று ஒருவன் ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தானாம். மறுநாளே அவனுக்குப் பல கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தனவா. எப்படித் தெரியுமா? ‘என் மனைவியை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று! அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் போலும்!

  மனைவி குளித்து முடித்துவிட்டு டவலை உடலில் சுற்றிக்கொண்டு கீழே வந்தாள். அவள் கீழே போனவுடன் அவளது கணவன் குளிக்கச் சென்றான். கீழே போன அவள் வாசல் மணியை யாரோ அழுத்தியதும் போய்த் திறந்தாள். பக்கத்து வீட்டு சேகர். (சும்மா கற்பனைப் பெயர். இந்தக் கதையே கற்பனைதான். ஏனெனில், டவலை உடலில் சுற்றிக்கொண்டு எந்த இந்தியப் பெண்ணும் போய்க் கதவைத் திறக்கமாட்டாள் தெரியும்தானே?) என்ன என்றாள். கையில் அவன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை வைத்திருந்தான்.

  ‘இந்த டவலை நீ அப்படியே கீழே போட்டுவிடுவதானால், நான் இந்த இரண்டாயிரம் ரூபாயையும் உனக்கே தருவேன்’ என்றான்! அவள் சற்று யோசித்துவிட்டு, டவலை உருவிக் கீழே போட்டாள்! அவள் நிர்வாணத்தை நன்றாக ரசித்துவிட்டு இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சென்றான் சேகர். மீண்டும் டவலைச் சுற்றிக்கொண்டு மேலே போன அவளிடம் அவள் கணவன் கேட்டான். யார் அது? பக்கத்து வீட்டு சேகர் என்றாள் அவள். அவனா, எனக்குத் அவன் தர வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தானா என்று கேட்டான் அப்பாவிக் கணவன்!

  காமம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்துவிடுவதாகும் என்று நம்பும் நாட்டில் நடந்ததாகச் சொல்லப்படும் கதை இது. ஆனால் நம்முடைய அணுகுமுறையும் அனுபவமும் வேறு. நம்முடைய என்றால் இந்தியர்களுடைய என்று அர்த்தம்.

  காதலுக்கு பிள்ளையார் சுழிதான் காமம். காமம் மூலமாக காதல் வந்ததும் அது இதயங்களை இணைத்துவிடும். காமத்தில் இருவர் ஒன்றுகூடும்போதுதான், தான் என்ற அகந்தை ஒரு சில கணங்களுக்கு அகன்று, இருமை நீங்கி ஒருமை எனும் தெய்வீக அனுபவம் உண்டாகிறது. அப்போது நாம் கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. நிகழ்காலம், அதிலும் நிகழ் கணம் என்ற ஒன்றில் மட்டுமே இருப்போம். அது ஒரு கண நேரம் நிகழும் ஞானானுபவம், கணநேர சமாதி என்று ஒரு ஞானி கூறுகிறார். உண்மையல்லவா? அதனால்தானே கஜுராஹோ கோயில் முழுக்க உடலுறவுச் சிற்பங்களால் நிறைந்துள்ளது?

  கோயிலுக்குள் இப்படிப்பட்ட சிற்பங்களா என்று யாரும் சங்கடப்பட வேண்டியதில்லை. காமமும் காதலும் தெய்வீகமானவை என்று சொல்லாமல் சொல்கின்றன அச்சிற்பங்கள். அவற்றை உருவாக்கி அங்கே நிறுவியவர்களுக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும்.

  ஆனால், காமத்திலும் காதலிலும் வன்முறையைப் புகுத்துபவர்கள் அடிப்படையையே புரிந்துகொள்ளாத மண்டூகங்கள். அந்தக் கணத்திலும் அகந்தைக் கொடியை ஏற்றிக்கொண்டிருப்பவர்கள். கதகதப்பு வேண்டுமென்பதற்காக எரிமலையின் வாய்க்குள் குதிப்பவர்கள். முகர்ந்து பார்க்க வேண்டிய மலர்களைத் தின்று பசி தீர்க்க முயல்பவர்கள். அத்தகையவர்களுக்கு காமமும் தெரியவில்லை, காதலும் தெரியவில்லை.

  ஒருமுறை, மகாத்மா காந்தி தன் மனைவி கஸ்தூரி பாயோடு இலங்கைக்குச் சென்றிருந்தார். கஸ்தூரி பாய், காந்தியின் மனைவி என்று தெரிந்துகொள்ளாத ஒருவர் காந்தியை அறிமுகப்படுத்தும்போது, மகாத்மா தன் அம்மாவோடு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னாராம்! மகாத்மா பேசும்போது, ‘தெரிந்தோ தெரியாமலோ அவர் ஒரு உண்மையைச் சொல்லிவிட்டார். கஸ்தூரி பாய் என் மனைவியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினாள். ஆனால் இப்போது எனக்கு அவள் ஒரு தாயாகத்தான் இருக்கிறாள்’ என்று சொன்னாராம்! காமத்தைத் தாண்டிய காதலின் பேச்சு அப்படித்தான் இருக்கும்.

  ஆனால் ஒரு குழந்தை பெற்றுவிட்டால் காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டதாக நாம் நினைக்கிறோம்.

  புது கார் ஒன்றை வாங்கி அதைப் பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நாம் ஓட்டியிருக்கலாம். ஒரு சாவியைப் போட்டு அப்படித் திருகினால் ‘ஸ்டார்ட்’ ஆகும் என்றும், இப்படித் திருகினால் ‘ஆஃப்’ ஆகும் என்றும் தெரிந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் வைத்து அந்தக் காரைப் பற்றி நமக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா? ஒரு ‘டயர் பஞ்ச்சர்’ ஆனால்கூட அதை எப்படிச் சரி செய்வது என்று அனுபவப்பட்டால்தானே தெரியும்? காதலும் காமமும் அப்படித்தான்.

  ஆனால் உண்மையில் காமம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? வள்ளுவப்பெருமான் அதற்காகவே 250 குறள்களை நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

  ஒரு பெண்ணை முதன் முதலாக ஒருவன் பார்க்கும்போது என்ன தோன்ற வேண்டும் தெரியுமா? அவள் தெய்வமோ, தெய்வப்பெண்ணோ என்று தோன்ற வேண்டும் என்று கூறுகிறார். ‘தகையணங்குறுத்தல்’ என்ற காமத்துப்பாலின் முதல் அதிகாரத்தின் முதல் பாடலின் முதல் சொல்லே அதுதான். ஒருவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அப்போது அவன் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?

  அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

  மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

  ‘அணங்குகொல்’ என்பதற்கு ‘அவள் தெய்வமோ’ அல்லது ‘தெய்வப்பெண்ணோ’ என்று பொருள் தரப்படுகிறது. மணக்குடவர் ‘தெய்வங்கொல்’ என்றும், பரிமேலழகர் ‘தெய்வ மகளோ’ என்றும், மு. வரதராசனார் ‘தெய்வப்பெண்ணோ’ என்றும், சாலமன் பாப்பையா, ‘அதோ பெரிய கம்மல் அணிந்திருப்பது தெய்வமா’ என்றும் விளக்குகின்றனர். கலைஞரைத் தவிர! ‘தெய்வம்’ என்ற சொல்லை கவனமாகத் தவிர்த்துவிட்டு ‘எனை வாட்டும் அழகோ’ என்று கலைஞர் விளக்குகிறார்! போகட்டும், அவரை மன்னித்துவிடலாம். ஆங்கில மொழிபெயர்ப்பில்கூட ‘Goddess!’ என்றுதான் இருக்கிறது.

  அதாவது, முதல் பார்வையிலேயே ஒரு தெய்வீக உணர்வு உருவாக வேண்டும் என்பதுதான் திருவள்ளுவரின் குறிப்பு. எவ்வளவு அற்புதமான விஷயம் இது!

  ஒரு பெண்ணின் பார்வையானது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதும் இந்தக் காலத்தில் நமக்கு மிகவும் தேவையாக உள்ளது. ஆணைப் பார்த்து பயப்படும் பார்வையாக அது இருக்கக் கூடாது. பார்வையிலேயே பெண்ணுக்கு ஒரு ‘ஹமாம் பாதுகாப்பு’ இருக்க வேண்டுமாம்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆமாம். ஆனால் இது சோப்பு விளம்பரமல்ல. எந்த விளம்பரமும் அல்ல. வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். ஒரு ஆணைப் பார்க்கும் பெண்ணின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் அது.

  நாலு தடவை திரும்பத் திரும்பப் பார்த்தால் இவள் மடிந்துவிடுவாள் என்ற நினைப்பை ஏற்படுத்தாத பார்வையாக அது இருக்க வேண்டும். அதையும் தாண்டி, தப்பாகப் பார்த்தால் தொலைத்துவிடுவேன், உயிரை எடுத்துவிடுவேன் என்று சொல்வதைப்போல இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

  நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

  தானைக்கொண் டன்ன துடைத்து

  அதாவது, ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிராக பார்த்துக்கொள்ளும்போது அவளது பார்வை அவனைத் தாக்குவதைப் போலவும், அது போதாதென்று ஒரு சேனையைக் கொண்டுவருவது போலவும் இருக்க வேண்டும் என்கிறார்! அந்தப் பார்வையில் அவ்வளவு வீரியம், அவ்வளவு வீரம் இருக்க வேண்டுமாம். இப்படிப் பார்த்தால் நம்ம பசங்க யாராவது ஜொள்விட நினைப்பார்களா?!

  இன்னும் ஒருபடி மேலே போய், ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது அவள் பார்வையானது அவனுக்கு யமனைப்போல, அதாவது உயிரையே பறிப்பதுபோல இருக்க வேண்டும் என்று வள்ளுவர் திரும்பத் திரும்ப கூறுகிறார்.

  பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

  பெண்டகையால் பேரமர்க் கட்டு

  எமன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. ஆனால் இப்பொழுது நேரிலேயே பார்த்துத் தெரிந்துகொண்டேன். அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது என்று இக்குறளுக்கு விளக்கம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட உயிரை உறிஞ்சும் பார்வை கொண்ட பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்துகொள்ள முடியுமா என்ன? முறம் கொண்டு புலியை விரட்டினாள் தமிழச்சி என்று படித்திருக்கிறோம் அல்லவா? அது உண்மைதான். முறம் கொண்டு புலியையும் விரட்டுவாள், பார்வையில் தெறிக்கும் அறம் கொண்டு காமக்கரடியையும் விரட்டுவாள்.

  மறு சோறு உண்டு...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai