சுடச்சுட

  
  guru-disciple

   

  ‘‘நாலு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் சொல்லிக்கொடுத்த ஒரு மந்திரம்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது’’ என்றார் அவர். பக்கத்து ஊரில் இருந்து குருநாதரைப் பார்க்க அடிக்கடி ஆசிரமத்துக்கு வந்துபோகும் வெற்றிகரமான வணிகர் அவர்.

  அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்தான் சிஷ்யன்.

  தான் பட்ட கஷ்டங்களையும் பார்த்த சந்தோஷங்களையும் குருவிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் அவர்.

  வெளியேறும் வரை அவரையே பார்த்துக்கொண்டே இருந்த சிஷ்யன், குருவிடம் விலகாத ஆச்சரியத்துடன் கேட்டான்.

  ‘‘என்ன மந்திரம் அது குருவே? ஒரே மந்திரத்தால் தொடர்ந்து ஒரு மனிதன் மகிழ்ச்சிகரமாக இருக்க முடியுமா என்ன?’’ என்றான்.

  வாய்விட்டுச் சிரித்தார் குரு. சிஷ்யனை அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டார்.

  ‘&அவர் தான் அடைந்த சந்தோஷங்களை மட்டுமல்ல, சந்தித்த துயரங்களையும்தான் சொன்னார்.. கவனித்தாயா?’’ என்று கேட்டார் குரு.

  ‘‘ஆமாம் குருவே.. ஆனாலும் அவர் மகிழ்ச்சிகரமான மனிதராகவே இருக்கிறார். அதுதான் என் ஆச்சரியத்துக்கான காரணம்..’’ என்றான் சிஷ்யன்.

  மறுபடியும் மனம்விட்டுச் சிரித்தார் குருநாதர்.

  ‘‘மாயமுமில்லை.. ஒரு மந்திரமும் இல்லை! வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாக எடுத்துக்கொள். இரண்டுமே நிரந்தரமானதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இதைத்தான் அவருக்கு என் ஆலோசனையாகச் சொன்னேன். அதை அவர் முற்றிலும் நம்பினார். முழுதாகக் கடைப்பிடித்தார். தோல்வியைக் கண்டு துவளுவதும் இல்லை. வெற்றியைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதுமில்லை. அதனால் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்’’ என்றார் குரு.

  ‘‘புரிகிறது குருவே..’’ என்ற சிஷ்யனுக்கு புதிதாக ஒரு சந்தேகம்!

  ‘‘அதெப்படி குருவே.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் எப்படி நஞ்சாகும்?!’’ என்றான்.

  அவன் கேள்வியையும் அவனையும் ரசித்தார் குரு.

  ‘‘நேற்று நம்மைச் சந்திக்கவந்த விவசாயி கொடுத்துச்சென்ற பழங்களில் பனம்பழம் ஒன்று இருப்பதைக் கவனித்தேன். இறைவன் உருவத்துக்கு முன்பாக அது வைக்கப்பட்டிருக்கும். பனம்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வா’’ என்றார். எடுத்துக்கொண்டு வந்தான் சிஷ்யன்.

  ‘‘பனம் பழம் என்ன சுவை என்று உனக்குத் தெரியுமா?’’ என்று அவனிடம் கேட்டார் குரு.

  ‘‘மிக மிக இனிப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் குருவே.. ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை..’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘இப்போது சாப்பிட்டுப் பார்..’’ என்றார் குரு. தன் கையில் இருந்த பனம்பழத்தை ருசிப்பதற்கு ஆவலானானான் சிஷ்யன். அவன் முகத்தையே உற்றுப் பார்த்தபடி இருந்தார் குரு.

  தோலைப் பிதுக்கி, நார்நாராக இருந்த பனம்பழத்தைக் கடிக்க வாயெடுத்தான் சிஷ்யன்.

  பழத்தில் அவன் பல் பட்டதும் நாக்கில் தேள் கொட்டப்பட்டவனாக கையை விலக்கினான். முகத்தைச் சுளுக்கினான். புன்னகைத்தார் குரு.

  ‘‘என்ன ஆனது?’’ என்றார்.

  ‘‘இவ்வளவு கசப்பை நான் சுவைத்ததே இல்லை..’’ எனக் கத்தினான் சிஷ்யன்.

  ‘‘இனிப்பின் உச்சம் கசப்புத்தான் என்பதற்கு இறைவன் நமக்கு இயற்கையில் காட்டியிருக்கும் அடையாளம் இந்தப் பழம். அவ்வளவு அதிகபட்சமான இனிப்பு கொண்டது இது. அதனால்தான் கசப்பாகத் தெரிகிறது. இதே பழத்தை நெருப்பில் சுட்டோ, நீரில் வேகவைத்தோ இனிப்பைக் குறைத்தே உண்பார்கள். அப்போது கசப்பு தெரியாது..’’ என்றார் குரு.

  ‘‘ஆமாம் குருவே.. இப்போது ஒப்புக்கொள்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!’’ என்றான் சிஷ்யன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai