சுடச்சுட

  
  guru-disciple

   

  விரக்தியோடு குருவின் எதிரே வந்து நின்றான் இளைஞன் ஒருவன். ‘‘இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை குருவே’’ என்றான்.

  ‘‘ஏன், என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார் குரு.

  ‘‘நான் எதைச் செய்தாலும் அது மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை. நான் அவர்களுக்கு நல்லது செயதாலும், என்னை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார்கள். எனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்வதெனத் தெரியவில்லை. எப்போது நல்ல நேரம் வரும் எனக் கூறுங்கள் ஸ்வாமி..’’ என்று கூறி, வணங்கினான் அவன்.

  அவனை ஆசிர்வதித்துவிட்டு, தொலைவில் இருந்த சிஷ்யனை அருகே வரும்படி அழைத்தார் குரு.

  ஆசிரமத்துக்கு வந்திருந்த இளைஞனை ஏறிட்டார். ‘‘உனக்கு மிகவும் பிடித்த கனி எது? பிடிக்கவே பிடிக்காத கனி எது?’’ என்று கேட்டார்.

  ‘‘பிடித்தது.. மாங்கனி. தினமும் சாப்பிடக் கிடைத்தாலும் சந்தோஷமாகச் சாப்பிடுவேன். பிடிக்காதது.. வாழைப்பழம். கோடி ரூபாய் கொடுத்தாலும் அதைச் சாப்பிட விரும்பமாட்டேன்’’ என்றான் அவன்.

  அதையடுத்து, சிஷ்யனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டார் குரு. ‘‘உனக்கு மிகவும் பிடித்த கனி எது? பிடிக்கவே பிடிக்காத கனி எது?’’.

  ‘‘பிடித்தது.. வாழைப்பழம். பிடிக்காதது.. மாங்கனி’’ என்று பதிலளித்தான் சிஷ்யன்.

  புன்னகையுடன் இளைஞனைப் பார்த்தார் குரு. ‘‘உன் நேரத்துக்கும் உன்னை மற்றவர்கள் வெறுப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்து புரிகிறதா?’’.

  ‘‘புரியவில்லை ஸ்வாமி’’ என்றான் அவன்.

  ‘‘உனக்குப் புரிகிறதா?’’ என சிஷ்யனைப் பார்த்துக் கேட்டார் குரு.

  ‘‘ஆம் குருவே’’ என்றவன் தொடர்ந்தான். ‘‘அவருக்கு மிகவும் பிடித்த மாங்கனி, எனக்குப் பிடிக்காது. எனக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம், அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. என்னை மகிழ்விப்பதாக எண்ணிக்கொண்டு அவர் மாங்கனிகளைக் கொடுத்தால், அது எனக்கு வெறுப்பையே கொடுக்கும்’’.

  ‘‘பார்த்தாயா விபரீதத்தை. இதுதான் உன் பிரச்னை..’’ என்றார் குரு வந்திருந்த இளைஞனை நோக்கி.

  ‘‘உனக்குப் பிடித்த பொருளோ விஷயமோ செயலோ முடிவுகளோ, மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற அவசியமில்லை. விறுப்பும் வெறுப்பும், நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை. உனக்கு இனிப்பு பிடிக்கும் என்றால், அதை ஒரு சர்க்கரை நோயாளிக்குச் சாப்பிடக் கொடுப்பதால் அவருக்கு என்ன பயன் இருக்கக்கூடும்? மாறாக, அவருக்கு உன் மீது வெறுப்பும் ஏற்படலாம் அல்லவா?’’

  கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் இளைஞன். குரு தன் அறிவுரையைத் தொடர்ந்தார்..

  ‘‘மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு, தொந்தரவு செய்துவிடுகிறாய் நீ. எதையும் உனது கோணத்திலிருந்தே அணுகும் மனம் கொண்டிருக்கிறாய். அடுத்தவர்களது கோணத்திலிருந்து பார்த்து, அவர்கள் எதிர்பார்ப்பதைச் செய்யும் மனப்பக்குவம் இருந்தால், யாரும் உன்னை வெறுக்கமாட்டார்கள்’’.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai