சுடச்சுட

  
  guru-disciple

   

  அன்று சிஷ்யனுக்கு கொஞ்சம் கடுமையான பயிற்சி கொடுக்க முடிவு செய்தார் குருநாதர்.

  ‘‘இன்று உணவு தயாரிக்கும் பணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார். சமையல் பணிகளில் மூழ்கிப்போனார்.

  ஏதோ ஒரு அனுபவம் தனக்குக் கிடைக்கப்போகிறதென சிஷ்யன் அனுமானித்துக்கொண்டான். நூல்களைப் படிக்கும் வேலையில் ஈடுபட்டான்.

  உணவு நேரம் வந்தது. சாப்பிட வருமாறு அவனை அழைத்தார் குரு. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்தமர்ந்தான்.

  நான்கு தட்டுகளை வைத்திருந்தார் குரு. நான்கிலும் உணவு பரிமாறப்பட்டிருந்தது. எதை எடுப்பது எனத் தெரியாமல் குழப்பமாக குருவை நோக்கினான் சிஷ்யன்.

  ‘‘எதை வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம்..’’ என்றார் குரு.

  ஒவ்வொரு தட்டையும் கவனமாகப் பார்த்தான் சிஷ்யன். ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் எனக் கவனித்தான்.

  முதல் தட்டு, அவன் வழக்கமாக உணவு சாப்பிடும் சாதாரண அலுமினியத் தட்டுதான். அதில் அவன் வழக்கமாகச் சாப்பிடும் உணவு இருந்தது.

  இரண்டாவவதாக இருந்ததும் அலுமினியத் தட்டுதான். ஆனால், அதில் தடபுடல் விருந்துக்குரிய உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

  மூன்றாவதாக இருந்தது ஒரு வெள்ளித் தட்டு. அதில் வழக்கமான உணவு மட்டுமே இருந்தது.

  நான்காவதாக இருந்தது தகதகக்கும் தங்கத்தட்டு. அதில், தடபுடல் உணவு வகைகள் பறிமாறப்பட்டிருந்தன.

  சரிதான், இன்று நமக்கான பாடம் இந்தத் தட்டுகளில்தான் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான் சிஷ்யன். ஓரிரு விநாடிகள் யோசித்தான்.

  முடிவுக்கு வந்தவனாக, முதல் தட்டை எடுத்து உணவை உண்ண ஆரம்பித்தான். அவன் அந்தத் தட்டைக் கையில் எடுக்கும்வரை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த குரு, நிம்மதிப் பெருமூச்சுடன் நகர்ந்து சென்றார். அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தார். முடித்ததும், அவனுடன் உரையாடத் தொடங்கினார்.

  ‘‘நல்ல வேளை.. நீ தப்பித்தாய்! எச்சரிக்கை கொடுக்கும் வேலையை எனக்குக் கொடுக்கவில்லை..’’ என்றார் குரு.

  ‘‘என்னது.. தப்பித்தேனா?! என்ன சொல்கிறீர்கள் குருநாதா?’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘நான்கு தட்டுகளில் இரண்டில் விஷம் கலக்கப்பட்டிருந்தது..’’

  சட்டென சிலையானான் சிஷ்யன்.

  ‘‘பதட்டம் வேண்டாம். நீ எடுத்துக்கொண்ட உணவில் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’

  ‘‘இதென்ன குருநாதா.. மிகவும் கடுமையான சோதனையாக இருக்கிறதே..’’ என்று கேட்டான் சிஷ்யன்.

  அவனுக்கு விளக்கம் கூறத் தொடங்கினார் குரு..

  ‘‘முதல் தட்டில் இருந்தது நீ வழக்கமாகச் சாப்பிடும் உணவு. வழக்கமான அலுமினியத் தட்டுதான் அது. இரண்டாவதாக இருந்த அலுமினியத் தட்டில் விருந்துக்குரிய வகையில் சிறப்பான உணவு வகைகள் வைத்திருந்தேன். இந்த இரண்டு தட்டுகளிலும் விஷமேதும் கலக்கப்படவில்லை..’’.

  இரண்டாவது தட்டை எடுத்திருக்கலாமோ என நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.

  ‘‘மூன்றாவதாக இருந்த வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த வழக்கமான உணவில் விஷமும் இருந்தது. அதையடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தட்டிலும் விஷம் கலந்த விருந்துதான் காத்திருந்தது..’’.

  தங்கத்தையும் வெள்ளியையும் கண்டு பரவசப்படாத தனக்கு, தானே ஒரு சபாஷ் சொல்லிக்கொண்டான் சிஷ்யன்.

  ‘‘இப்படித்தான்.. நல்லதும் கெட்டதும் நம் முன் எப்போதும் அணிவகுத்து நிற்கும். எதைத் தேர்ந்தெடுப்பதென்பது நமக்கான சவால்தான்..’’ என்று குரு சொல்ல, மீதமிருக்கும் மூன்று தட்டுகளையும் உற்றுப் பார்த்தபடியே இருந்தான் சிஷ்யன்.

  ‘‘தேவைக்கு அதிகமாக விரும்பும் ஆசை உனக்கு இருந்திருந்தால் வெள்ளித்தட்டை எடுத்திருப்பாய். அதுவே பேராசையாக இருந்திருந்தால் தங்கத்தட்டைத்தான் எடுத்திருப்பாய்..’’ என்றார் குரு.

  ‘‘நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேனா குருவே?’’

  ஆர்வத்துடன் கேட்ட சிஷ்யனுக்கு, பதில் சொன்னார் குரு.. ‘‘அப்படியும் சொல்லமுடியாது. தப்பிவிட்டாய் என்றுதான் சொல்லமுடியும். வழக்கம்போலவே எல்லாம் தொடரட்டும் என்றிருந்தால், வாழ்க்கை காட்டும் புதிய அனுபவங்களின் சுவையை அறியாமலேயே போய்விடும்..’’.

  ‘‘நான் இரண்டாவதாக இருந்த தட்டை எடுத்திருக்கலாம் என்றுதானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?’’ என்றான் சிஷ்யன்.

  ‘‘ஆம். புதிய முயற்சியில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் தாகம் உனக்கிருந்திருந்தால், நீ அதைத்தான் செய்திருப்பாய். அதில் இருந்த அருமையான உணவை அனுபவிக்கும் வாய்ப்பினை நீ இழந்துவிட்டாய். பேராசையோ, தேவைக்கு அதிகமாகச் சேர்க்கத் துடிக்கும் ஆசையோ தேவையில்லைதான். அதற்காக, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து அறிய சோம்பேறித்தனம் கொண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் புறம் தள்ளுவது புத்திசாலித்தனமில்லை. உன் புலன்கள் அனைத்தையும் நீ பயன்படுத்தவே இல்லை. பயன்படுத்தி இருந்தால், இரண்டாவது தட்டிலும் விஷம் இல்லை என்பதை உன் நாசி உனக்கு உணர்த்தியிருக்கும்’’ என்றார் குரு.

  ‘‘புரிந்தது குருவே’’ என்றவனிடம், இரண்டாவதாக வைக்கப்பட்டிருந்த உணவை எடுத்து, பத்திரமாக மூடிவைக்கச் சொன்னார்.

  ‘‘அதுதான் உனக்கான இரவு உணவு. அதுவரை கெடாது. அப்படித்தான் சமைத்திருக்கிறேன்’’ என்றார்.

  ‘‘நீங்கள் சாப்பிடவில்லையே குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

  ‘‘பாடம் நடத்துவதற்காகத்தான் என்றாலும், இரண்டு தட்டு உணவினை விஷம் கலந்து வீணடித்துவிட்டேன். அதற்கான தண்டனையாக இரண்டு வேளை உணவு எனக்கில்லை..’’ எனப் புன்னகை மாறாத முகத்துடன் கூறினார் குரு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai