சுடச்சுட

  
  guru-disciple

   

  மிகவும் பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டிய பணி ஒன்றினை சிஷ்யனுக்குக் கொடுத்திருந்தார் குருநாதர். தான் வெளியே சென்று வருவதாகவும், அதற்குள் அந்தப் பணியை முடித்து வைக்குமாறும் அறிவுறுத்தி இருந்தார்.

  குரு, வெளியேறியதும் கடமையில் கண்ணானான் சிஷ்யன். என்னதான் ஆனாலும் சின்னப்பையன், சின்னப்பையன்தானே! ஆசிரமத்தின் ஜன்னலில் வந்து உட்கார்ந்த அழகான பறவையின் வனப்புக்கு சட்டென மயங்கினான் அவன்.

  அருகே சென்றான். அந்தப் பறவை அவனைக் கண்டு துணுக்குற்று, பறந்தோடியது. திரும்ப வந்து பணியைத் தொடர்ந்தான் சிஷ்யன். திரும்பவும் வந்து ஜன்னலில் உட்கார்ந்துகொண்டு அழகு காட்டியது அந்தப் பறவை.

  அவன் நெருங்க.. அது பறக்க.. அவன் திரும்ப.. அது மறுபடியும் வந்தமற.. இப்படியே விளையாட்டில் கழிந்தன சில பொழுதுகள். வேலையை முடித்தபாடில்லை. குரு ஆசிரமத்துக்குத் திரும்பி விட்டார்.

  கொடுத்த பணியை முடிக்காமல் இருந்த சிஷ்யன் மீது குருவுக்குக் கோபம் வந்தது. சற்றுக் கடுமையான வார்த்தைகளால் அவனைக் கடிந்து கொண்டார்.

  முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் சிஷ்யன். அதன்பின்னர் குருவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை அவன். தானுண்டு தன் வேலையுண்டு என ஒதுங்கி, ஒரு மூலையிலேயே இருந்தான்.

  நெடு நேரமாகியும் அவன் சகஜ நிலைக்குத் திரும்பாததைக் குறிப்பால் அறிந்தார் குரு. அவனை அருகில் அழைத்தார். குனிந்த தலையை நிமிர்த்தாமல் அருகே வந்து நின்றான் சிஷ்யன்.

  "சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்கு பிற உயிர்களைக் குடிக்கும் அளவுக்கு கொடிய பற்கள் உண்டு. ஆனால், அவை இரையைக் கவ்விக் கொலை செய்யும் அதே பற்களால்தான் தன் குட்டிகளின் கழுத்தைக் கடித்துத் தூக்கிச் செல்லும். குட்டிகளைக் கவ்வும் தாயின் கொடிய பற்களால், குட்டிகள் ஒருபோதும் சேதாரமடைவதில்லை. இந்த உலக நியதி உனக்குப் புரியுமானால், நான் உன்னைக் கடிந்து கொண்டதனால் ஏற்பட்ட வருத்தம் உன் மனதிலிருந்து மறையும்" என்றார் குரு.

  கோழி மிதித்துக் குஞ்சுகள் சாவதில்லை என்ற உண்மையும் கூடுதலாகப் புரிந்தது சிஷ்யனுக்கு.

  தாயுமானவனாகத் தெரிந்த குருவின் பாதங்களில் விழப் போனான். அவனைத் தடுத்து, அணைத்துக் கொண்டார் குருநாதர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai