9. பானைக்கதை

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்புக்கான தனிப்பட்ட நோக்கம் ஒன்று இருக்கும். அதை அவனாகவே கண்டறிய வேண்டும்.
9. பானைக்கதை

கோடைக்காலமாயிற்றே.. நீர்ச்சத்தைக் குறையாமல் வைத்திருக்க அதிகமாகவே நீர் பருகவேண்டி இருக்கிறது.

ஆசிரமத்தில் ஒரே ஒரு மண் பானையில் குடிநீர் பிடித்துவைத்துக் கட்டுபடியாகவில்லை. புதிதாக இன்னொரு பானையும் வாங்கிப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்தார் குரு.

குருவும் சிஷ்யனும் பானை வாங்கக் கிளம்பினார்கள். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் குருவும் சிஷ்யனோடு செல்வதுண்டு. அவரோடு வெளியே செல்வதென்றால் சிஷ்யனும் குஷியாகிவிடுவான்.

சற்றுத் தொலைவில் இருந்த குயவன் ஒருவனின் வீட்டுக்கு இருவரும் சென்றார்கள். பானைகள் செய்யும் பணியில் மும்முரமாக இருந்தான் குயவன். அவர்களை சற்று காத்திருக்குமாறு கோரினான்.

வார்த்தெடுக்கப்பட்ட பானைகள் உறுதிப்படுவதற்காக வெயில் காய்ந்துகொண்டிருந்தன.

‘‘பிறவிப்பயனை அடைவதற்காகக் காத்திருக்கின்றன அந்தப் பானைகள்’’ என்றார் குரு.

சிஷ்யனுக்கு வியப்பு மேலிட்டது. ‘‘மண் பானைகளுக்கும் பிறவிப்பயன் உண்டா குருவே?’’ என்று கேட்டான்.

‘‘ஆம். அவை பிறந்ததன் நோக்கம்.. உரியவர் கைகளை அடைந்து உலகத்துக்குப் பயன் கொடுப்பதுதான்’’ என்றார் குரு.

‘‘மனிதப் பிறப்பின் நோக்கமும் இதைப் போலத்தானா?’’ என்றான் சிஷ்யன்.

அவனாகவே ஞானத்தைத் தேடி வருவது குருவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால்தான் இப்படி வெளியிடங்களுக்கு அவனை அழைத்து வருகிறார் அவர்.

‘‘பானை உயிரற்ற பொருள். அதன் பிறப்புக்கான நோக்கம் ஒன்று மட்டுமே. ஆனால், மனிதனுக்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. அவற்றைச் செய்து முடிப்பதே அவனது பிறவிப்பயன்’’ என்றார் குரு.

இது அவன் கேள்வி ஞானம் பெறுவதற்கான நேரம் என்பது சிஷ்யனுக்கு நன்கு தெரியும். அதனால் அமைதியாகவே இருந்தான். குருவே பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘களிமண்ணாக இருக்கும்போதே அதில் பானையாக உருமாறுவதற்கான தகுதியும் ஒளிந்திருக்கிறது. குயவனின் கைப்பட்டதும், கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்று, இறுதியாக பானை வடிவம் அடைகிறது. அப்படித்தான் மனிதனும். அவன் கருவில் இருக்கும்போதே அவன் பிறப்புக்கான நோக்கங்களும் பிறந்துவிடுகின்றன. வளர வளர, அவனது தேடலின் வேகத்துக்கு ஏற்ப, ஞானம் பெறுவதற்கான சந்தர்ப்பங்களை அவன் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறான். சந்திப்பதை சிந்தித்தால்.. சிந்திப்பதை செயலாக்கினால்.. அவன் பிறவிப் பயனை அடைகிறான்’’ என்றார்.

‘‘மனிதனின் பிறவிப்பயனுக்கான நோக்கங்கள் என்னென்ன குருவே?’’ என்று தன் அடுத்த கேள்வியை எடுத்துவைத்தான் சிஷ்யன்.

‘‘சொல்கிறேன் கேள்’’ என்றார் குரு. சொன்னார்.. ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்புக்கான தனிப்பட்ட நோக்கம் ஒன்று இருக்கும். அதை அவனாகவே கண்டறிய வேண்டும். அதை அவனது ஞானத்தேடலால் மட்டுமே அறியலாம். அதைத்தவிர, பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இன்னொரு நோக்கம் இந்தப் பானைகளைப்போல பிறருக்குப் பயன் கொடுப்பதுதான்’’.

‘‘பொது நோக்கத்தைப் பொறுத்தவரையில் பானையும் மனிதனும் ஒன்று.. அப்படித்தானே குருவே?’’ என்றான் சிஷ்யன்.

குருவின் பதில் எளிமையாக விளக்கியது. ‘‘ஆம். முழு வடிவம் பெற்றதனால் மட்டுமே பானை, தன் வாழ்வின் முழுப் பயனையும் அடைந்துவிட்டதெனப் பொருளாகாது. அதன் முயற்சி ஏதுமின்றி குயவனே அதை உருவாக்கிவிடுகிறான். அது குயவனின் இருப்பிடத்தை விட்டு வெளியேறியாக வேண்டும். பயன்படுத்துவோரின் கைகளை அடைந்தாக வேண்டும். நீர் பிடிக்க, நீர் சேமிக்க, உணவு சமைக்க, உணவைப் பாதுகாக்க இப்படி பல்வேறு பலன்களையும் அது இந்த உலகத்துக்குக் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான் அதன் பிறப்புக்கான அர்த்தம் பூர்த்தியாகும். மனிதனும் அப்படித்தான். வயதாக ஆக, அவன் வளர்வதும் நடந்துகொண்டே இருக்கும். ஆளும் வளர்ந்து, அறிவையும் வளர்த்துக்கொண்டு, அந்த அறிவின் மூலம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதுதான் ஒவ்வொரு மனிதனுக்குமான பொது நோக்கம்’’ என்றார் குரு.

அடுக்கிவைக்கப்பட்டிருந்த பானைகள் அதை ஆமோதிப்பதுபோல அழகு காட்டின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com