Enable Javscript for better performance
85. இன்பத்தின் அளவுகோல்- Dinamani

சுடச்சுட

  
  guru-disciple

   

  ‘‘இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையின் இரண்டு கண்கள். இரண்டுமே மனிதனுக்கு முக்கியமானவை..” என்றார் குரு. எதிரே உட்கார்ந்து பாடம் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

  வியர்க்க விறுவிறுக்க ஆசிரமத்துக்குள் நுழைந்தார் ஒரு மனிதர். அவ்வப்போது ஆசிரமத்துக்கு வந்து செல்பவர்தான் அவர்.

  “ஏன் இப்படி விழுந்தடித்துக்கொண்டு வருகிறீர்கள்? சற்று அமருங்கள். ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.." என்று கூறி அவரை வரவேற்றார் குரு.

  விருந்தினரை உபசரிக்கும் நோக்கத்துடன் எழுந்து சென்று, அவர் பருக நீர் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான் சிஷ்யன். ஓரிரு நிமிடங்கள் மௌனம் நிலவியது. அமைதியைக் கலைத்தார் குருநாதர்.

  ‘‘என்ன விஷயம்? ஏன் இப்படி வழக்கத்துக்கு மாறான வேதனையுடன் வந்திருக்கிறீர்கள்?’’ எனக் கேட்டார் வந்திருந்த நபரிடம்.

  ஏறக்குறைய அழுதுவிடும் மனநிலையில் இருந்தார் அவர். கவலை கப்பிய முகத்துடன் பேசினார்.

  ‘‘கடந்த மாதம் என் தொழிலில் பெரிய சரிவை சந்தித்தேன். போன வாரம் என் குடும்பத்தில் என்னைத் தவிர அனைவரும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டனர். நேற்று காலையில் நெருங்கிய நண்பர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். இன்று காலையில்கூட இன்னொரு துயரத்தை சந்தித்தேன். வியாபாரத்தில் ஒரு நஷ்டம். தொடர்ந்து இப்படி எனக்கு அடுக்கடுக்கான துன்பங்களையே கொடுத்துக்கொண்டிருக்கிறான் இறைவன். அடுத்து என்ன துன்பத்தைக் கொடுக்கப்போகிறானோ என நினைக்கும்போதே பதைபதைப்பாக இருக்கிறது. மன அமைதி வேண்டித்தான் உங்களிடம் ஓடிவந்தேன்’’ என்றார் அந்த நபர்.

  ‘‘மிகச்சரியான நேரத்தில்தான் வந்திருக்கிறீர்கள். இன்று நாங்கள் பேச ஆரம்பித்திருக்கும் விஷயம் இதைப்பற்றித்தான். நீங்களும் எங்களுடன் கலந்துகொள்ளுங்கள்..’’ என்றார் குருநாதர்.

  சிஷ்யனின் அருகே நெருங்கி உட்கார்ந்தார் அந்த நபர். இப்போது குருவின் எதிரே இரண்டு சீடர்கள்.

  ‘‘சமீபகாலமாக உங்களுக்கு நேர்ந்த துன்பங்கள் குறித்து பட்டியலிட்டுவிட்டீர்கள். அதேசமயம், சமீபத்தில் நீங்கள் சந்திக்க நேர்ந்த இன்பமயமான சம்பவங்களைப் பற்றியும் கூறுங்களேன்..’’ என்று அவரிடம் கேட்டார் குருநாதர்.

  கண்களை இருக மூடி, நெற்றியை சுருக்கி யோசிக்க ஆரம்பித்தார் அந்த நபர்.

  ‘‘நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்..” என்று அவகாசம் அளித்தார் குரு.

  கண்களைத் திறந்த அந்த நபர் பேச ஆரம்பித்தார்.

  ‘‘ஓரிரு வாரங்களுக்கு முன்பு எனது அங்காடி இருக்கும் தெருவில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. சுற்றிலும் பல கடைகள் எரிந்து சாம்பலாயின. அனைவருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் தெய்வாதீனமாக என் கடையில் நெருப்பு பற்றிக்கொள்ளவில்லை. துளியும் சேதாரம் எனக்கு ஏற்படவில்லை’’ என்றார்.

  மறுபடியும் தொடர்ந்தார்.. ‘‘என் குடும்பத்தில் அனைவருக்கும் ஏற்பட்ட உடல்நலக்குறைவு என்னைப் பற்றிக்கொள்ளாததில் எனக்கு சந்தோஷமே. அதனால்தான் அவர்களை கவனித்து சீக்கிரம் குணமடையச் செய்ய உதவி செய்ய என்னால் முடிந்தது..’’ என்றார்.

  ஓரிரு விநாடிகளுக்குப்பின் அவரே மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.. ‘‘நேற்று என் மகன் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சொன்னான். அவன் பயிலும் பாடசாலையில் நடந்த தேர்வுகளில் அவனே முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்திருக்கிறான்’’ என்றார்.

  மலர்ச்சியான முகத்துடன் மறுபடியும் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். அவர் தான் சந்தித்த இன்பகரமான அடுத்த தகவலை பகிர்ந்துகொள்ளத் தொடங்கும் முன்னதாக குறுக்கிட்டார் குருநாதர்.

  ‘‘பார்த்தீர்களா.. துன்பங்களையும் இன்பங்களையும் சரி சமமாகவே உங்களுக்கு கொடுத்திருக்கிறான் இறைவன். ஆனால் இன்பங்களை புறம் தள்ளி, துன்பங்களை மட்டுமே பெரிதுபடுத்தி மனப்பதட்டம் அடைகிறீர்களே.. இது நியாயமா?!’’ எனக் கேட்டார்.

  ‘‘ஆம் குருவே.. துன்பங்களால் கிடைக்கும் வலி பெரிதாகத் தெரிகிறது. அதன் காரணமாக இன்பங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது’’ என்று கூறினார் அந்த நபர்.

  குரு தன் பாடத்தை தொடர்ந்தார்.

  ‘‘இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையின் இரண்டு கண்கள். துன்பங்கள்தான் இன்பங்களுக்கான அளவுகோல்கள். துன்பங்களே இல்லாத வாழ்க்கை அலைகள் இல்லாத கடலில் படகைச் செலுத்துவதுபோலத்தான் இருக்கும். சவால்கள் இல்லாத வாழ்க்கைப் பயணமாகவே அமையும். அதில் சுவாரசியம் எதுவும் கிடைக்காது. நிழலின் அருமையை சரியாக உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் வெயிலில் கொஞ்ச நேரம் பயணிக்க வேண்டும். அப்படித்தான் இதுவும். துன்பங்களை தொடர்ந்து அனுபவிக்கக் கிடைக்கும் இன்பம்தான் அளப்பரியது. அதுவே ருசிக்கும்..’’ என்றார்.

  தனக்கு நேர்ந்த துன்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு இன்பங்களை மட்டும் நினைத்துக்கொண்டிருந்ததால் அகமும் முகமும் மகிழ அமைதியாக உட்கார்ந்திருந்தார் அந்த நபர்.

  பதற்றத்துடன் வந்த அவர், பரவசத்துடன் இருப்பதைக்கண்டு சிஷ்யனும் மனம் மகிழ்ந்தான். மிச்சத்தையும் பேசி முடித்தார் குருநாதர்.

  ‘‘இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இரும்பை கடினமாக ஆக்குவதற்காக நாம் என்ன செய்கிறோம் தெரியும்தானே! முதலில் அதை நெருப்பில் காட்டுவோம். பின்னர் அடுத்த நொடியே தண்ணீரில் அமிழ்த்துவோம். மறுபடியும் நெருப்பில் காட்டுவோம். அதனைத் தொடர்ந்து மீண்டும் தண்ணீரில் அமிழ்த்துவோம். இப்படி நெருப்பிலும் நீரிலும் மாறிமாறி இரும்பை நனைப்பதன் மூலம், இடையிடையே அதனை சம்மட்டியால் அடித்து நமக்குத் தேவையான வடிவத்தில் உருவாக்கிக்கொள்கிறோம். இதைத்தான் இறைவனும் செய்கிறான். துன்பங்களையும் இன்பங்களையும் மாறிமாறி நமக்குக் கொடுப்பதால் எந்த சவால்களையும் நாம் எதிர்கொள்ளும் சூழலை நமக்கு உருவாக்கிக்கொடுக்கிறான். கட்டியாக இருக்கும் இரும்பு மற்றவர்களுக்கு பயன்படும் கருவிகளாக மாறுவதுபோல் மனிதர்களும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவிக்கப் பழகிவிடுகிறார்கள். நமக்கு நேரும் துன்பங்களை இன்முகத்துடன் வரவேற்போம். அவைதான் நாளைய இன்பங்களை நமக்கு கொண்டுவந்து சேர்க்கும் முன்னேற்பாடுகள்..’’ என்றார்.

  துன்பத்தை சகிக்கமுடியாமல் ஓடிவந்த அந்த நபருக்கு வாழ்க்கை இப்போது இன்பமயமாகத் தெரிந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai