Enable Javscript for better performance
23. குழம்பி-அகம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  23. குழம்பி-அகம்!

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published On : 24th January 2019 10:00 AM  |   Last Updated : 24th January 2019 10:00 AM  |  அ+அ அ-  |  

  jews_-_sivasami

   

  ‘அடேய் சிவசாமி, தூக்குப் போடறதுக்கு முன்னாலே, உன்னோட கடைசி ஆசை என்னன்னு என்னை புழல் ஜெயிலர் கேட்டா என்ன கேப்பேன்னு சொல்லு பாக்கலாம்?’

  ‘தெரியலே அண்ணா. சொன்னா தெரிஞ்சிக்கறேன்.’

  ‘சிவசாமி? என்ன ஆச்சுடா உனக்கு?! இதைக்கூட உன்னாலே கெஸ் பண்ண முடியலியா? சூடா, நுரை தளும்ப, அரை சக்கரையோட, அப்போதான் இறக்கின ஃபில்டர் டிகாஷன்லே போட்ட முழு டம்ளர் காபியை டபராவோட கொடுங்கோ. அதை நான் அணு, அணுவா ருசிச்சு, குடிச்சு முடிச்ச உடனே என உடம்பைத் தூக்கிலே போட்டு, அரிவாள்மணையிலே அவியலுக்கு காய் நறுக்கிறா மாதிரி நறுக்கி காக்காய்க்குப் போட்டுடுங்கோ. கவலை இல்லேன்னு சொல்லிடுவேன்.’

  ‘அண்ணா! மிஸ்டர் வேதாந்தத்திலே இந்த சினாரியோலே காபிக்கு பதில் தவலை வடை கேக்கிறதா தேவன் எழுதிட்டார் அண்ணா.’

  ‘இருந்துட்டுப் போகட்டுமேடா. தவலை வடை சாப்பிட்ட கையோடு காபி சாப்பிடணும் இல்லியா? அதான்.’

  பஞ்சாமியின் சிஸ்டத்தில் நுழைந்த காலைக் காபி அவர் உள்ளே கொழுந்துவிட்டு எரியும் ஒரு தீப்பந்தத்தை யாரோ கபாலத்திலிருந்து கணுக்கால் வரை எடுத்துச் சென்றதுபோல, அவரை உலுக்கி எழுப்பி ஜோதிமயமாக உட்கார வைத்தது.

  ‘அடேய், சிவசாமி. காபி போடறது ஒரு கலைடா. எல்லாராலேயும் செய்யமுடியாது. என்னோட செல்லம்மா பாட்டி போட்ட காபியை, பாலைக் குடுத்த பசு மாடு குடிச்சா, ‘அட, நம்ம பாலிலேருந்து இப்புடி ஒரு தேவாமிருதத்தைத் தயார் பண்ண முடியுமான்னு ஆச்சரியப்பட்டு அடுத்த நாள் காபிக்கு வந்து நிற்கும். தெரியுமா?’

  ‘அண்ணாவோட கற்பனை பிரமாதம். செகண்ட் டோஸ் காபியை இப்பவே கொண்டுவரட்டுமா?’

  ‘கொஞ்ச நாழி கழிச்சி சாப்பிடறேன்டா. அது சரி, என் செல்லம்மா பாட்டி மாதிரி, இல்லே உன்னை மாதிரி ஒரு மாஸ்டர், காபி போடறதைப் பாத்தா, அதே மாதிரி போட வருமாடா?’

  ‘வயலின் வாசிப்பவரைப் பாத்தா, ஜாங்கிரி சுத்தறவரைப் பாத்தா, ரங்கோலி போடறவரைப் பாத்தா, இளநி வெட்டறவரைப் பாத்தா, அதே மாதிரி செய்ய வருமா அண்ணா?’

  பஞ்சாமிக்கு சுருக்கென்றது. சிறிது நேரம் மோவாயைத் தடவி விட்டுக் கொண்டார்.

  ‘அடேய் சிவசாமி. இன்னிக்கு ஊருக்குப் போயிட்டு நாளைக்கு ராத்திரிதானே வரப்போறே? ஹோட்டல்லேருந்து காபியை வர வழைக்காம நானே காபி போட்டுக் குடிக்கிறேன் பாரு.’

  ‘அப்படியே செய்யுங்க அண்ணா. ‘உன்னால் முடியும் தம்பி’ன்னு புஸ்தகமெல்லாம் எழுதியிருக்காங்க. ‘உங்களால் முடியும் அண்ணா’ன்னு நான் எழுதிக் காமிக்கிறேன். அவ்வளவு திறமை இருக்கு உங்ககிட்டே.’

  ‘அப்படீங்கறே?’

  ‘ஆமாங்கறேன், அண்ணா.’

  *

  மறுநாள் காலை கண் விழித்த பஞ்சாமி, ‘அடேய் சிவசாமி’ என்று உரக்கக் கூப்பிட்டார். பம்மாமல் உடனே சிவசாமி தேய்த்த விளக்கிலேருந்து வரும் பூதமாகத் தோன்றிடுவான். ஆனால் அதிசயம். ஆளைக் காணோம். ‘நினைத்தபோது நீ வர வேண்டும்’ என்று உள்ளம் உருகிப் பாடிய டி.எம்.எஸ்.ஸின் பாட்டுதான் பஞ்சாமிக்கு நினைவுக்கு வந்தது. ‘சிவசாமி! சிவசாமி!! சிவசாமி!!!’ன்னு எழும்பூர் மெட்ரோபாலிடன் மாஜிஸ்டிரேட் கோர்ட் பியூனாகக் கூப்பிட்டுப் பார்த்தார். சிவசாமி ஆஜராகவில்லை.

  கனத்த இதயத்துடன் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சமையல் கட்டிற்குள் பஞ்சாமி நுழைந்தார். முந்தைய மாமாங்கத்துக்குப் பின் அடுத்த மாமாங்கத்துக்கு கும்பகோணம் போன விசிட்டர் மாதிரி விழித்தார். ‘என்னது நம்ம வீட்டு சமையல் உள்ளா இது?’

  வெளிச்சம் பரவ ஸ்விட்சைப் போட்டார். ஒரு கரப்பு இல்லை. ஒரு பல்லி இல்லை. ஈ, எறும்பு, தும்பு, தூசி, ஒட்டடை எதுவும் இல்லை? பின் என்ன சமையல்கட்டு இது? என்று கேலியுடன் கேட்டுக்கொண்டாலும், சிவசாமியின் பராமரிப்பு அவரை வியக்கவைத்தது.

  காபியைத் தயாரிக்க, சங்கல்பம் செய்துகொள்ளாமல், உபகரணங்கள், மூலப் பொருள்களைத் தேடினார். அமெரிக்காவில் டேரா போட்டிருக்கும் காமாட்சி இருந்தவரையில், காப்பிப் பொடி என்று எழுதிய டப்பாவில் கல் உப்பும், சர்க்கரை என்று எழுதிய எவர்சில்வர் சம்படத்தில் உளுத்தம் பருப்பும், புளி என்று எழுதிய அலுமினிய தூக்கில் இட்லி அரிசியும் இருக்கும். ஆனால், காமாட்சி புலம் பெயர்ந்து அமெரிக்கா போய், சிவசாமி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு, காப்பிப் பொடி டப்பாவில் காப்பிப் பொடியும், சர்க்கரை சம்படத்தில் சர்க்கரையும், இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையும் ஞானத்தங்கமாக இல்லாமல் இருந்தன. போனஸாக, எடுத்து ஆளத் தோதான ஸ்பூன்களும், கல்லுரலோடு உடன் உறையும் குழவியாகவும் இருந்து பரிமளித்தன.

  எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல், வால் பாத்திரத்தில் வெந்நீரைத் தயாரித்தார் என்று சொல்ல முடியாது என்பதற்கு, பஞ்சாமியின் கையில் பட்டுக்கொண்ட தீக்காயம் சாட்சி சொல்லிற்று. பித்தளை ஃபில்டர்களில் சீனியர், ஜூனியர் என்று நின்று கொண்டிருந்த இரண்டில், ஜூனியரை எடுத்து தோராயமாக ஆறு ஸ்பூன் காப்பிப் பவுடரைப் போட்டார். அது தளராக இருக்காமல் இருக்க வேண்டி, கை விரலால் மினி திமுசுக் கட்டையாக அமுக்கி கெட்டிக்கச் செய்து, வால் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை அதன் மேல் சுழற்சியுடன் விட்டார். ஃபில்டரை மூடிவிட்டு, ஆழி சூழ்ந்த இவ்வுலகத்திலேயே மிகவும் கொடுமையான செயலாகத் தோன்றும் ‘காத்திருத்தலை’ச் செயல்படுத்த, சமையலறையிலிருந்து வெளியேறி ஹாலுக்கு வந்து, அன்றைய செய்தித்தாள்களைக் கையில் எடுத்தார்.

  சபரிமலையில் பெண்கள், பத்து பெர்சன்ட் கோட்டா, நிர்மலா சீதாராமன் -ராகுல் சவால் - ஜவாப் போன்ற செய்திகளை விட்டுவிட்டு, அதிரடி, திணறல் அல்லது வறட்சி என்ற ஒற்றைச் சொல் தலைப்புச் செய்தியை கண்களால் ஒத்தி எடுத்து வரும்போது, தலை வலிக்க ஆரம்பித்தது. தலையில் சி.எம்.டி.ஏ. அனுமதி இல்லாமல் கட்டின கட்டடத்தை சம்மட்டியால் பலர் பேவ்மென்ட் பிரேக்கரால் உடைப்பதுபோல விண் விண் என்று வலி எடுக்க ஆரம்பித்தது. டைகர் பாம், ஜன்டு பாம், பங்கஜகஸ்தூரி போன்றவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தேய்க்க வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சினார்.

  ‘ச்சீ, கையில் அருமருந்தான காபி எனும் கனி இருக்கும்போது, களிம்பு எனும் காயைக் கவர்வதா என்று தன்னைத்தானே கடிந்துகொண்டு, காபி நினைவு திரும்பியவராக சமையல்கட்டுக்குள் பீடுநடை போட்டார்.

  அங்கே (அல்லது ஆங்கே), காபி எனும் அமுதத்தை வழங்கப் பொன் போன்று பளபளத்த பித்தளை ஃபில்டர் (சிறியது), சோபன அறையில் நாணிக் கோணி நிற்கும் புதுப்பெண் போல மின்னுவது பஞ்சாமியின் கண்களுக்குத் தோற்றமளித்தது. ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்ற பழமொழி சொல்லுமாப் போலே, வெந்நீர் போட்டபோது ஏற்பட்ட சிறுவிபத்தால், அதி முன்ஜாக்கிரதையுடன் சமையல் மேடை மேல் மடித்து வைத்திருந்த கைப்பிடித் துணியால் ஃபில்டரின் மேல் பாகத்தில் அணைத்துப் பிடித்து, அந்தப் பாத்திரத்தை அருகில் வைத்திருந்த டபராவில் இறக்கி நிறுத்தினார்.

  பஞ்சாமி திகைத்தார்? என்ன இது? அரை மணி நேரம் ஆயிடுத்தே, இத்தனை நேரம் டிகாஷன் அடிப் பாத்திரத்தில் இறங்கி இருக்க வேண்டாமா?

  பஞ்சாமி துணுக்குற்றார். பாத்திரத்தில் டிகாஷன் துளிக்கூட இல்லாததைக் கண்டு மிரண்டார். இதில் அந்நிய நாட்டுச் சதி ஏதேனும் இருக்குமோ? ஒளிஞ்சுக்கச் சொன்ன கூடையில் தேடி, ‘இட்டேச்சு’ என்ற குதுகலத்துடன் காண வேண்டிய குழந்தையைக் காணாத இளம் தாயாரைப்போலப் பரிதவித்தார்.

  ‘அண்ணா! என்ற அபயக் குரல் கேட்டது.’

  பதறிய பஞ்சாமி, நின்ற இடத்திலேயே இரண்டு அடி மூன்று அங்குலம் எம்பி மேலே போய், பின் தரையைத் தொட்டு, பாலே நடன சுந்தரியாக நின்ற இடத்திலேயே நாற்பது ஐந்து டிகிரி திரும்பி சிவசாமியைப் பார்த்து, வார்த்தை வராமல், கண்ணாடித் தொட்டியில் இருக்கும் மீனாக வாயைப் பத்து தடவை திறந்து திறந்து மூடினார்.

  கௌதம புத்தரின் அமைதியுடன், ‘உங்க காபி அண்ணா’ என்று சிவசாமி டபரா செட்டில் மணக்கும் காபியை நீட்டினான்.

  ‘சி..சி.. சிவ.. நீ.. இங்க.. எங்க.. கா.. கா..’ என்று வாய் குழறினார்.

  ‘அண்ணா முதல்லே காபியைக் குடியுங்கோ. அப்புறம் பேசலாம்.’

  கூடையில் தேடிய குழந்தை எதிர்பாராமல் பின்னாடியிலேருந்து ‘இடோ..’ன்னு கட்டிண்ட மாதிரி, பஞ்சாமி புளகாங்கிதம் அடைந்தார்.

  சூடான காபியை ஆற்றி மடக் மடக்கென்று, தொண்டைக் குழி ஏறி இறங்கக் குடித்து உயிர் திரும்பிய நிலையில், சிவசாமியை பஞ்சாமி வாஞ்சையுடன் பார்த்தார். ‘சிவசாமி, என்னடா இது? என்ன ஆச்சு.’ நான் போட்ட டிகாஷன் எங்கேடா? மின்னலாய் மறஞ்சுடுத்தா? கள்ளர்கள் கொண்டுபோயிட்டாங்களா?’

  ‘அண்ணா, நீங்க காபி குடிக்கும்போது ஃபில்டரை செக் பண்ணினேன். நீங்க பொடி போட்டது சரிதான். விட்ட தண்ணீர் அளவும் சரிதான். ஆனால், அடிபாகத்தில் துவாரங்கள் இருக்கும் சேம்பர்தான் மேலே இருக்கணும். மற்றது டிகாஷன் வாங்கி. அந்த சேம்பர் கீழே இருக்கணும். அப்போதான் டிகாஷன் கீழே இறங்கும். நீங்க மாத்தி வெச்சுட்டேள். என்னோட வேலை முடிஞ்சதாலே, மொத பஸ்ஸை பிடிச்சு வந்தேன். ‘நானே காபி போடப்போறேன்’னு நீங்க போட்ட சேலஞ்சிலே ஏதான ஏடாகூடம் ஆயிடுத்துன்னா அவஸ்தைப்படுவேளேன்னு, முன்னேற்பாடா பிளாஸ்க்கிலே காபி வாங்கிண்டு வந்தேன். நல்லதாப் போச்சு.’

  ‘டேய் சிவசாமி, ஜாங்கிரி சுத்தறதைப் பாத்தா ஜாங்கிரி சுத்த வராதுடா’ என்று, பஞ்சாமி கண்களாலேயே சிவசாமியிடம் சொன்னார்.

  ‘அண்ணா, டிபன் என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ’ என்றான் கடமையே கண்ணாக.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp