சாவித்ரி - 15. காயகல்பம்!

தமிழ் நாட்டில் ஆற்றங்கரைகள் கிடையாதா என்ன? ரீமேக் செய்பவர்களுக்கு ஓர் அடிவயிற்று அச்சம். மூலப்படத்தில் உள்ளது போலவே காட்சிகள்,

தமிழ் நாட்டில் ஆற்றங்கரைகள் கிடையாதா என்ன? ரீமேக் செய்பவர்களுக்கு ஓர் அடிவயிற்று அச்சம். மூலப்படத்தில் உள்ளது போலவே காட்சிகள், காஸ்ட்யூம்கள், வசனம், செட், இசை, லொகேஷன், தலைக்கான விக் அத்தனையும் இருந்தாக வேண்டும்.

அதில் ஏதும் ஒன்று மாறினால் கூடத் தங்கள் படம் கோவிந்தாவாகி விடும் என்கிற காப்ரா. சாவித்ரி கோலிவுட் பயந்தாங்கொள்ளி. கோதாவரி பாய்ந்தோடும் அமலாபுரத்தில், அவுட்டோர் யூனிட் சகிதம் ஹீரோ சிவாஜியோடு களம் இறங்கினார்.

இருபது நாள்களில் முதல் ஷெட்யூலை முடிக்கத் திட்டம்.

இயற்கைப் பேரிடரும் ஒரிஜினல் - ரீமேக் இரண்டிலும் உள்ளேன் அம்மா! என ஒத்துழைத்தது. இரண்டு அவுட்டோரிலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அஞ்சி நின்றவர் சாவித்ரி. அந்நிகழ்வு அவரது வார்த்தைகளில்:

‘கோதாவரி கரை. ராஜமகேந்திரபுரம். ஓடத்தில் ஏ.நாகேஸ்வர ராவுடன் மூகமனசுலு படத்துக்கான  ஷூட்டிங். ‘நான் படகின் விளிம்பில் என்னை நோக்கிப் பாடும்  ஹீரோவைப் பார்த்தவாறு வர வேண்டும். சட்டென்று திரும்புகையில் தவறி நதியில் விழுந்து விட்டேன். நல்ல ஆழம். சுழல் வேகம் கூடிக் கொண்டே இருந்தது.

நான் இல்லாததை அறியாமல் ஏ.என்.ஆர். பாடலைத் தொடர்ந்தார். போட் என்னை மறந்து நகர்ந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்தவாறு அதன்  பிடியைத் தேடி நீரில் அலைந்தேன். என் கூக்குரல்  படகோட்டியின் காதுகளில் விழவே இல்லை.

நல்ல சமயம். ஏ.என்.ஆர். என் அலறலைக் கேட்டு விட்டார். அவர் ஸ்டாப்... ஸ்டாப் எனக் கத்தியும்  படகோட்டி நிறுத்தவில்லை. நீச்சல் தெரியும் என்பதால்  வேகமாக நீந்தி, எப்படியோ ஓடத்தின் நுனியை கெட்டியாகப் பிடித்து விட்டேன். ஏ.என்.ஆர். கை கொடுத்துக் காப்பாற்றினார்.

அதுக்கு மேலே அன்னிக்கு ஷூட்டிங் நடக்கல. பேக் அப்  ஆயிடுச்சு.

பிராப்தம் லொகேஷன் கோதாவரி ஓடும் பாதையில் காக்கிநாடாவுக்கும் அமலாபுரத்துக்கும் நடுவில் உள்ள ஒரு தீவில் அமைந்தது. போட் மூலமே அங்கு போய் வர முடியும். சிவாஜி அண்ணனும் மற்ற ஆர்ட்டிஸ்டும் தங்குவதற்காக ஸ்மால் ஹட்ஸ் போட்டோம். நாங்க போன நேரம் சூறைக்காற்றும், பேய் மழையும் வந்துவிட்டது. சிவாஜி உட்பட எல்லாரும் சூறாவளியில் சிக்கிக்கிட்டோம்.

ஓடக்காரர் இந்த காத்து மழையில அக்கரையில் கொண்டு சேர்க்க முடியாதுன்னு தீர்மானமா சொல்லிட்டார். படகை எடுக்கவே மறுத்தார். நான் ரொம்பவும் கெஞ்சி கேட்டேன்.

தயவு செஞ்சு கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. சிவாஜி மழையில தொப்பைக்கட்டையா நனைஞ்சு நிற்கிறார். வேற வழி கிடையாதுன்னு. ஆயிரம் ப்ளீஸ் போட்டேன். ஒரு வழியா மறுகரைக்கு வந்து சேர்ந்தோம்.

படகை விட்டு இறங்கினதும் சிவாஜி அண்ணன் என்னைக் கண்டித்தார். இந்த மாதிரியான நேரத்துல ஆற்றைக் கடந்து வந்தது ரொம்பவும் ஆபத்தானதுன்னு.’  

பணக்கட்டுகளில் மெத்தை தைத்துப் போட்டுக் கொள்ளும் அளவுக்கு செல்வ சீமாட்டி சாவித்ரி!   உயர் மின்சார பல்புகளின்  தகிக்கும் அனலில் அழுது கண்ணீர் விட்டு, கேமரா முன்பு கஷ்டப்பட்டு கதறி  சம்பாதித்த காசை கோதாவரி நதியில் வாரி இறைத்தார்.

1970  கோடையில் 12 ஆயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் ‘ பிராப்தம்’ நின்று விட்டது.

பராசக்தி முதலே நடிகர் திலகம் ஆண்டுக்கு ஒரு டஜன் படங்களில் நடிக்கிற பிசியான மகா கலைஞர். சாவித்ரி காலமான பிறகும், ரஜினி - கமல் உச்சாணிக் கொம்பில் இருந்த 1983ல்,  சிவாஜியின்  ஒரு டஜன் சினிமாக்கள் வெளிவந்தன.

கணேசனின்  அற்புத நடிப்புக்கு இணையாக  உடன்  பயணித்த ஒரே நடிகை சாவித்ரி. அண்ணனின்  உச்ச நட்சத்திர அந்தஸ்தை உணர்ந்திருந்தும், அவரது பரிபூரணமான ஒத்துழைப்பு  தனக்குக் குறைவில்லாமல் கிடைக்கும் என மனமார நம்பி ஏமாந்தார். அவஸ்தைகளின் யாத்திரையில் அவதிப்பட்டார்.

‘ஏராளமான படங்களைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வது ஏன்?’

 என்கிற கேள்விக்கு 1971ல் நடிகர் திலகம் தன்னிலை விளக்கம் அளித்தார்.

‘நாட்டில் நடக்கிற பல நல்ல காரியங்களுக்குச் செலவிட நேருவதால், நான் வாங்குகிற ஊதியம் போதவில்லை. ஆகவே பல படங்களில் நடிக்க வேண்டி வருகிறது.

எத்தனையோ நண்பர்கள் தங்கள் படங்களில் நடிக்குமாறு கேட்கும் போது எவரை வேண்டாம் என்று ஒதுக்குவது?

ஒரே கலைக்குடும்பமாக உள்ளதால் சிலரைப் புறக்கணிப்பதோ,  பட எண்ணிக்கையைக் குறைக்கவோ  முடிவது இல்லை. அதனால் நிரந்தரமாக நிறைய சினிமாக்களில் நடிக்கும் சந்தர்ப்பம் உண்டாகிறது.’

ஒட்டு மொத்தமாக தென்னக சினிமா ஜெ.வுக்கு மாறிய காலகட்டம். (1965 - 1973.) ஜெயலலிதாவை வசூல் கஜானாவாக, கலைச் செல்வியாக, ஐஸ்வர்ய தேவதையாக, அழகின் ஆலயமாக  விநியோகஸ்தர்களும் இளைஞர்களும்  கொண்டாடினர்.

நடிகர் திலகமும் ஜெயலலிதாவை

‘வந்த இடம் நல்ல இடம்

வர வேண்டும் காதல் மகராணி!’

என்று வாழ்த்தி வரவேற்று, அவரது சொந்த கம்பெனி போன்ற ராம்குமார் பிலிம்ஸ் தயாரித்த, ‘கலாட்டா கல்யாணம்’ சினிமாவில் லாபக் கணக்கை வரவு வைத்தார்.

ஜெ.வின் கால்ஷீட்டைப் பெறுவது புலிப்பாலைக் கொண்டு வருவது போல் இருந்தது. அத்தனை உயரிய  உச்ச நட்சத்திரப் பெருமிதத்தை வாரி வழங்கினர் தென்னக மக்கள்.  

‘அம்முவிடம் தேதிகளை கேட்டு ஒழுங்குபடுத்திய பின்பு என்னிடம் வாருங்கள்...’ என்று தன் பட அதிபர்களுக்கு உத்தரவிட்டார் சிவாஜி கணேசன்.

கணேசனும் - கலைச்செல்வியும் இணைந்து நடிக்கும் சினிமாக்கள் டஜன் கணக்கில்  தயார் ஆயின. அவர்கள் ஜோடியாக  நடித்தவை பெரும்பாலும் வண்ணச்சித்திரங்களாக அமைந்தன. சிவாஜி கணேசனின் கவனம் அத்தகைய இளமை ததும்பும் படங்களில் லயித்தது.

பி. மாதவன், முக்தா சீனிவாசன், கே. பாலாஜி, போன்றோர் படங்களில் நடிப்பதற்கு கணேசன் கூடுதல் முன்னுரிமை வழங்கிய நேரம்.

நேற்று பூ - சாவித்ரி - நடிகையர் திலகமாக, தனது தோழியாக, உடன் பிறவா சகோதரியாக, படத் தயாரிப்பாளர், டைரக்டர், கதாநாயகியாக இருந்தும் ஏனோ, கணேசன் பிராப்தம் படத்துக்குப் போதிய முக்கியத்துவம் தரவில்லை.

முடிந்த வரையில் கழற்றிக் கொள்ள விரும்பினார். சாவித்ரியுடனான சிநேக பந்தம் நடிகர் திலகத்தை  கட்டிப்போட்டது.

அதைக்  குறித்து வசனகர்த்தா ஆரூர்தாஸ்  எழுதியுள்ளவை:

பிராப்தம் தெலுங்கு மூலத்தைப் பார்த்த பின்னர்  நடந்த உரையாடல்:

‘சிவாஜி - ஆரூரான் இந்தப் படம் மூகமனசுலு ஆந்திரால எப்படிப் போச்சு?

ஆரூர்தாஸ்-  ரொம்ப நல்லாப் போச்சு. ஆனா தமிழ்ல அந்த மாதிரி போகும்னு நான் சொல்ல மாட்டேன். இதை  அதன் டைரக்டர் ஏ. சுப்பாராவ் ரொம்ப ஜாக்கிரதையா கையாண்டிருக்காரு. அவரு ஒரு நல்ல  இயக்குநர். அந்த அளவு சாவித்ரி...

சிவாஜி- நான் என்ன நினைச்சேனோ நீ அதை அப்படியே சொல்லிட்ட. சாவித்ரி ரொம்ப ரிஸ்க் எடுக்குது. இப்போ அது ஏன் சொந்தப்படம் எடுக்கணும்?

அப்படியே எடுத்தாலும் அதுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல குடும்பக் கதையா பார்த்து எடுக்கலாமே. அதான் நீ இருக்கியே.  ஒங்கிட்ட அந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது தானே?

என்ன பெரிய டைரக்ஷன் வேண்டிக் கிடக்கு ?

நம்ம குடும்பத்துப் பொண்ணு. நம்மால ஒண்ணும் மறுத்துச் சொல்ல முடியல. பேசாம ஏ. சுப்பாராவையே டைரக்டரா போடச் சொல்லு. நீ சொன்னா சாவித்ரி கேட்கும்.  ஜெமினி கணேசனையும் விட்டுச் சொல்ல சொல்லு.’

----------------------

ஆரூர்தாஸ் -  ‘அண்ணி! நீ ரெண்டு ரிஸ்க் எடுக்கறே. ஒண்ணு சொந்தத் தயாரிப்பு. இன்னொன்னு டைரக்ஷன். இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கறதுக்கான அவசியம் உனக்கென்ன வந்தது?

குழந்தை உள்ளம் மாதிரி இது சின்ன ப்ராஜெக்ட் இல்லே. சிவாஜியை வெச்சு எடுக்கற படம். காஸ்ட் ஆஃப் ப்ரொடக்ஷன் அதிகமாகும். அவுட்டோர் ஓர்க் நிறைய இருக்கு. அது மட்டுமில்ல மூகமனசுலு மறு ஜென்மத்தைப் பத்தின ஒரு குழப்பமான கதை.

சாவித்ரி - பரவாயில்லை. மூகமனசுலுவைத்தான் நான் எடுக்கப் போறேன். தெலுங்கு மாதிரி தமிழும் நல்லா வரும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க தமிழ் ஸ்கிரிப்டுல தெலுங்கை விட இன்னும் நல்லா இம்ப்ரூவ் பண்ணி கொடுத்தீங்கன்னா, அதை நான் கரெக்டா ஃபாலோ பண்ணிக்குவேன். படம் நல்லா வரும். சிவாஜியும் நானும் இருக்குறதுனால நல்லா பிசினஸ் ஆகும்.

ஆரூர்தாஸ்- சரி. அப்படின்னா, இன்னொரு முக்கியமான பாயிண்ட். நீ ஏன் வீணா ரெண்டு வகையில ஸ்ட்ரெயின் பண்ணிக்குற?  சுப்பாராவையே டைரக்ட் செய்ய சொல்லேன். ஏன்னா ஆக்டிங், ப்ரொடக்ஷன், டைரக்ஷன் இவ்வளவு லோடு உனக்கு தேவையா? நல்லா யோசிச்சி பாரு.

சாவித்ரி - நல்லா  சிந்திச்சிப் பார்த்துதான் முடிவெடுத்தேன். நானே டைரக்ட் பண்ணப் போறேன்னு சுப்பாராவ் கிட்ட சொல்லி அவரு ஆசீர்வாதத்தையும் வாங்கிட்டேன். எல்லாம் முடிஞ்சி போச்சி. இனிமேல் திங்க் பண்ண எதுவும் இல்ல.

ஆரூர்தாஸ்- கடைசியா  உனக்கு ஒண்ணு சொல்றேன். இந்தப் படத்துனால உனக்கும் ஜெமினி அண்ணனுக்கும் எந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கும்  வராம நீ பார்த்துக்கணும். எனக்கு வேண்டியது அது ஒண்ணுதான்.

சாவித்ரி - பிராப்தம் சம்பந்தமா தன்னை ஒண்ணும் கேக்க வேணாம்னு அவர் கண்டிச்சி சொல்லிட்டாரே. அதுக்கப்புறம் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் வர்றதுக்கு என்ன இருக்கு?’

‘அப்படி சாவித்ரி சொன்னதே கணவன் - மனைவி இருவருக்குள்ளும் உண்டான கருத்து வேறுபாட்டின் முதல் கட்டம் என்பதை நான் எளிதில் புரிந்து கொண்டேன்.’ -ஆரூர் தாஸ்.

சிவாஜி அண்ணனின்  அறிவுரை, ஆரூர்தாஸின் வேண்டுகோள்  எதையும் கேட்கும் நிலையில் சாவித்ரி அன்று இல்லை.

தமிழிலும், தெலுங்கிலும் தன்  சொந்தக் காலில் நின்று,  ஏராளமான வெற்றிச் சித்திரங்களை வழங்கிய ஒரே  ஒருவர் நடிகையர் திலகம். அவரது படுதோல்விப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கேமராவுக்கு முன்னால் சாதித்ததைப் போலத் திரைக்குப் பின்னாலும், இயக்குநர் இமயமாக ஜெயித்துக் காட்ட முடியும் என்கிறத் தன்னம்பிக்கையின் உச்சம்!

இன்றைய பாஷையில் சொன்னால்

‘தல, சாவித்ரி ஓவரா சீன் போடுது தல! எப்ப ரெண்டும் புட்டுக்குமோ தெர்ல!’

பிராப்தம் மட்டுமா ஜெமினி - சாவித்ரி உறவில் விரிசல் ஏற்படக் காரணம்?  ஜெமினியின் தீரா காதல்களும் அதற்குக்  கை கொடுத்தன. 

தாம்பரம் கிருத்தவ கல்லூரியில் படிக்கும் போதே கல்யாண மாப்பிள்ளையானவர் ஜெமினி. அதை அவர் சக மாணவர்களிடையே மறைத்து விட்டார்.  பாப்ஜியின் தகப்பனார், மருமகனை டாக்டருக்குப் படிக்கவைக்கிறேன் என்று வாக்குறுதி தந்ததால், திருமணம் நிச்சயமானது. அப்படிப்பட்ட மாமனார்  முறுக்கு, சீடை, தேன்குழல் முதலான பட்சணங்களோடு கிருத்துவ கல்லூரிக்கு வந்தார். அவர் மூலம் தான் திருமணமானவன் என்பது தெரிந்தால், பேச்சுலர் இமேஜ் போய் விடும் என  அவசர அவசரமாக அவரை வெளியேற்றினார் ஜெமினி. 

பாதகாணிக்கை படத்தில் ஒலித்த, ‘பெண்ணுக்கு இளமை எதுவரை  பிள்ளைகள் இரண்டு பெறும் வரை’ என்ற கண்ணதாசன் வரிகளுக்கு நிஜ வடிவம் தந்தவர் ஜெமினி.

புஷ்பவல்லிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் சாவித்ரிக்கு வலை வீசி, அங்கும் இரண்டு வாரிசுகள்.

ஐம்பதை  நெருங்கியும் ஜெமினியின் வசீகரத் தோற்றத்தில் இளமை ஊஞ்சலாடியது. ‘சாந்தி நிலையம்’ வண்ணச் சித்திரம் அதற்கு சாட்சி. காமிரா மேதை மார்க்கஸ் பார்ட்லேவின்  ஒளிப்பதிவில்  ‘இயற்கை எனும் இளைய கன்னி’ பாடலில் ஜெமினி ‘ சிரஞ்சீவி சுந்தர புருஷன்!’

‘சாந்தி நிலையம் படத்துக்காக ஜெமினி காயகல்பம் உண்டாரா?’ என்று குமுதம் தன் விமர்சனத்தில்  குஷியாக குலவையிட்டது.

புஷ்பவல்லி, சாவித்ரி ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவதாக, ஓர்  ஆந்திர அழகியை ஜெமினியுடன் இணைத்து கிசுகிசுக்கள் பெருகின. அவர் -

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கணக்காக ஜெமினி உள்பட, இந்திய யுவன்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்த  கவர்ச்சி சுனாமி! ‘ காதலிக்க நேரமில்லை’ புகழ் ராஜஸ்ரீ.

அதில், ‘அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்!’ பாடல் காட்சி இன்றைக்கும் சிருங்கார சுவையூட்டும்.

அதுவரையில் ஹபிபுல்லா சாலையில் சாவித்ரியின் நேத்ர தரிசனத்துக்காகத் தவம் கிடந்தனர் தெலுங்கு ரசிகர்கள். பின்பு திசை மறந்து, ருசி மாறி கோடம்பாக்கம் மேம்பாலத்துக்குச் சமீபமாக  போரூர் சோமசுந்தர முதலித் தெருவில் அவர்களது பஸ் நின்றது.

திருப்பதியில்  மொட்டை போட்ட கையோடு, ராஜஸ்ரீயின்  இல்லத்தை முற்றுகையிட்டனர்.

‘தனக்கு ஒரு சிலை செய்தால் என்ன?’ எனப் பிரபல வார இதழில்  ஜனங்களிடம் அபிப்ராயம் கேட்டார் ராஜஸ்ரீ. அன்றைய இளசுகளுக்கு அவர் மீது அப்படியோர் அநியாய அபிமானம்!

‘ஆந்திராவிலிருந்து வரும் மக்கள் என்னைப் பார்க்க வருவது அதிகமாகி விட்டது. காலையில் அவர்களுக்கு தரிசனம் கொடுத்து விட்டுத்தான் மீதி விவகாரம்.

ஏன் என்னைப் போலவே ஒரு சிலை செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு நாள் ஆயில் பாத் எடுத்துக் கொண்டிருந்தேன். அது தெரியாமல் என் சகோதரி நான் இல்லை எனச் சொல்ல,

‘எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறோம். ஏன் வீட்டில் வைத்துக் கொண்டே ஷூட்டிங்கில் இருக்கிறார் என்று பொய் சொல்கிறீர்கள்...?’ என கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். - ராஜஸ்ரீ.’

முதன் முதலில் ‘பூவா தலையா’  வெற்றிப் படம்  மூலம், ராஜஸ்ரீயுடனான மோகக்  கணக்கைத் தொடங்கினார்  ஜெமினி. 

அதில் கவிஞர் வாலியின் உபயத்தில் ‘ மதுரையில் பிறந்த மீன் கொடியை’ பாடலில், ராஜஸ்ரீயை தமிழகமாக வர்ணித்துப் பாடி நடித்துப் புளகாங்கிதம் அடைந்தார்  காதல் மன்னன்.

அவரது படங்களில் தொடர்ந்து ராஜஸ்ரீ இடம் பெற்றார். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருவரும் இணைந்து இலங்கைக்குச் சென்றனர்.

கொடைக்கானலில் தனது ரெட்லின்ச் பங்களாவில், ராஜஸ்ரீயுடன் ஜெமினி கணேசன் உல்லாச சல்லாபம்,   புது மாப்பிள்ளையாகி ராஜஸ்ரீயை கல்யாணமே செய்து கொண்டார் என்றெல்லாம் பரபரப்பாக கோலிவுட்டில் வதந்திகள் உலா வந்தன. அப்போது நடந்தவை மன்மதனுக்கே வெளிச்சம்!  

‘யாராக இருந்தாலும் ஒரு மனிதன் அறுபது வயதுக்கு மேல் இருப்பது வீண் தான். அறுபதோ ஐம்பதோ, வயதைப் பற்றி ஒன்றுமே இல்லை. ஒரு மனிதனுக்கு செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயணற்றது. ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால்  எத்தனை வயது ஆனாலும் இளமையாக வாழலாம்- ஜெமினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com