Enable Javscript for better performance
அத்தியாயம் - 41- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் - 41

  By விஞ்ஞானி வெ. பொன்ராஜ்  |   Published on : 05th November 2019 11:40 AM  |   அ+அ அ-   |    |  

  borewell

   

  ஆழ்துளைக் கிணறல்ல.. மழைநீர் சேமிப்புக் கிணறு!

  ஒவ்வொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு நம் நாட்டில் உயிர்ப் பலிகள் கொடுக்கப்பட்டால்தான் - அதையும் ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பினால்தான் - நடக்கும் என்ற நிலை ஏற்படுவது உண்மையிலேயே ஒரு வருத்தத்துக்கு உரிய நிலைமை. ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், ஆழ்துளைக் கிணறுகள் விஷயத்தில், சிறப்பு சட்டம் இயற்றவும், அதைக் கண்டிப்புடன் அமுல்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

  இந்த உத்தரவின் அடிப்படையில், பஞ்சாயத்துகளில் கிணறுகள் தோண்டுவதை ஒழுங்குபடுத்தும் விதிகளை, 2015-ல் தமிழக அரசு ஏற்படுத்தியது. ஆனால், இந்த விதிகளை அமல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியதுதான், தற்போது, திருச்சி அருகே சிறுவன் சுஜித் விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணம். திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித், 25 அக்டோபர் 2019-ல் தவறி விழுந்தான். உயிருடன் சிறுவனை மீட்பதற்கு, அரசும், அமைச்சர்களும், அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் எவ்வளவோ கடுமையாக முயற்சிகள் செய்தும், பலன் அளிக்கவில்லை. கடைசியில், 29 அக்டோபர் அதிகாலை சடலமாக மீட்கப்பட்டான்.

  நம் நாட்டில் பேரிடர், வெள்ளம், புயல், சுனாமி, தீ விபத்து அல்லது எதாவது சிக்கலான விபத்து என்று வந்துவிட்டால் அந்தச் சூழ்நிலையில் அந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பதற்கும் பொறுப்புள்ள நிறுவனங்கள், அரசு இயந்திரங்கள் இப்போதும் இன்றைய உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, வாங்கி அவற்றை இயக்க பயிற்சி பெற்றிருக்கவில்லை. விபத்து நடந்தால் அதை எப்படிச் சமாளிப்பது, அப்போது எடுக்கப்படும் சரியான நடவடிக்கைகள் எவை, அதற்கு மக்கள் எவ்வாறு ஒத்துழைப்பது, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்வது, நிபுணர்களையும், தன்னார்வலர்களையும், புது தொழில்நுட்ப யுக்தி கண்டுபிடிப்பாளர்களையும் அவர்களது உதவிகளையும், ஆலோசனைகளையும் எப்படிப் பயன்படுத்துவது, ஊடகங்கள் எப்படி காட்சிப்படுத்துவது என இவை அனைத்திலும் நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன என்பதை அடுத்தடுத்து நடக்கும் விபத்துகள், சம்பவங்கள் நமக்கு பாடங்களாக, படிப்பினைகளாக தொடர்ந்து வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றன. ஆனால் அந்தப் பாடங்களை நாம் படித்து நம்மை அடுத்து அப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து நம்மைக் காப்பதற்கு நமது அரசு நிறுவனங்கள் தயாராக இல்லை என்ற நிலையை இனிமேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நிலையை உடனடியாக மாற்றியாக வேண்டும்.

  3.84 லட்சம் கி.மீ. மேலே நிலவுக்குச் செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்கு இந்தியாவால் முடியும். ஆனால் 100 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையைக் காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லையா என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஏனென்றால், விண்வெளிக்கு ராக்கெட் செலுத்துவதற்கும், பாதுகாப்புக்கு ஏவுகணை செய்வதற்கும், அணு மின்சார நிலையத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், விபத்து ஏற்பட்டால் காப்பதற்கும் என்று தனித் தனி துறைகள், நிறுவனங்கள் பொறுப்புடன் இயங்குகின்றன. அது ஒழுங்காக தனக்கு இட்ட பணிகளைச் செய்கிறது. ராக்கெட்டும், ஏவுகணையும் மேலே செல்கின்றன; பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் போன்றவற்றில் விபத்து ஏற்பட்டால் அதைச் சரி செய்வதற்கு எந்தத் துறை இருக்கிறது? அரசுதான் விழிப்புணர்வோடு இதற்கான பிரச்னைகளை முன்கூட்டியே கணித்து, பாதுகாப்பு, பேரிடர் மீட்புப் பணிகளுக்கான நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புது கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து உருவாக்க வேண்டும்.

  குறிப்பாக, ஆழ்துளைக் கிணற்றின் மூலம் ஏற்படும் விபத்துகளைப் பொருத்தவரை வருமுன் காப்பது என்பது நம் நாட்டில் பழக்கமாக இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்பும், அதை மக்களும் கடைப்பிடிப்பதில்லை; அரசும் அதை தீவிரமாகச் செயல்படுத்துவதில்லை. சரி, வந்தபின் எப்படி சமாளிப்பது? சுஜித்தின் ஆழ்துளைக் கிணறு மரணம் என்பது ஒரு புது சம்பவம் அல்ல. தமிழகத்தில் வருடம்தோறும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் வருடம்தோறும் 150 முதல் 200 பேர் வரை ஆள்துளைக் கிணறுகள் மூலமாக குழந்தைகளின் மரணங்கள் சம்பவிக்கின்றன. இதில் அதிக சதவிகித மரணங்கள் குஜராத் - 17%, தமிழ்நாடு - 17%, ஹரியானா - 18%, ராஜஸ்தான் - 12% ஆகிய மாநிலங்களில் நடக்கின்றன. இதில் 92% பத்து வயதுக்குக் கீழே இருக்கக்கூடிய குழந்தைகள்தான் அதிகமாகப் பலியாகிறார்கள். இதில் 10 சதவிகிதம் குழந்தைகள்தான் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

  இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறும்போது, குழந்தைகள் மிக ஆழத்தில் சிக்கியிருந்தால் மீட்பது மிகவும் கடினம். ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் இணையாக செங்குத்தாக குழி அமைத்து குழந்தை சிக்கிய ஆழத்துக்குக் கீழே படுக்கை வசத்தில் குழி தோண்டி சென்று அந்தக் குழந்தையை மீட்பது வழக்கமான நடைமுறை. இந்த முறை பெரும்பாலும் பயனளிப்பது இல்லை; ஏனென்றால், இதைச் செய்வதற்கு பல்வேறு சூழல்களால் காலதாமதம் ஆகும். காலதாமதமானால் பெரும்பாலும் உயிரோடு மீட்பதில் சிரமம் இருக்கிறது என்பதால்தான், இதற்கு மாற்று வழிகளை புது கண்டுபிடிப்பாளர்கள் சிந்தித்து உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

  தமிழ்நாட்டில் மதுரை மணிகண்டன், அவரைப் போன்று திருச்சி, நாமக்கல், சென்னை போன்ற இடங்களில் பல்வேறு புது கண்டுபிடிப்பாளர்கள் புது தொழில்நுட்பங்களை உருவாக்கி சில இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் இவர்களது முயற்சி, உபகரணம் பலனளிக்கவில்லை. ஏனென்றால் இவர்கள் தங்களது சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட எந்திரங்களை மேம்படுத்த அரசு ஏதாவது உதவி செய்திருந்தால் இவர்கள் பல்வேறு மீட்பு உபகரணங்களை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு உருவாக்கியிருப்பார்கள். இருக்கும் உபகரணங்கள் சரியில்லை என்று அதை, இதை மாற்றி, பரிசோதனை செய்து பார்க்காமல், அந்த பொன்னான நேரத்தைப் பயன்படுத்தி அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருப்பார்கள். அது நடக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது.

  அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இப்படிப்பட்ட உபகரணங்களை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வக மாதிரியை உருவாக்கியிருக்கின்றன. அதை செயல்முறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு முதலீடு வேண்டும். அதை அரசும், பல்கலைக் கழங்களும் செய்ய வேண்டும்.

  ஆனால் 10-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி, அதன்மூலம் பல்வேறு சம்பவங்களில் குழந்தைகளை உயிரோடு மீட்பதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு உதவிகரமாக இருந்தவர்கள்தாம், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த கிருஷ்ண குமார் சர்மாவும் அவரது துணைவியார் சுலோசனா சர்மாவும். இருவரின் 11 ஆண்டுகால ஆராய்சிக்குப் பின்பாக பல தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து எப்படி மீட்பது என்ற பயிற்சியை 36 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், 12 மாநில பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

  இத்தகைய மாற்று வழிகள் இன்றைய கேமரா தொழில்நுட்பம், தெர்மல் கேமரா சென்சார் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம், மிக சுலபமான மீட்பு உபகரணங்கள் J, L, Umbrela, Baloon, Gunny Bag, POP போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் செய்யப்பட்ட உபகரணங்களை குறுகிய இடைவெளியில் சிக்கிய குழந்தைக்குக் கீழ் கொண்டுசென்று மீட்பு உபகரணங்களின் தன்மைக்கேற்ப விரிவுபடுத்தி அப்படியே குழந்தையை மேலே இழுத்துவரக்கூடிய தொழில்நுட்பங்கள் இன்றைக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அது குறித்த பயிற்சிகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதை சாதாரணமாக கூகுளில் தேடினாலே கிடைக்கும்போது, சென்னையில் பேரிடர் மீட்பு குழுவுக்குத் தெரியாது; பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாது என்றால், இவர்களை வைத்து எப்படி பேரிடரைச் சமாளிப்பது என்பது மிகப்பெரிய கேள்வி.

  உயிரைக் காப்பாற்றும் பொன்னான நேரம் என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அந்த நேரத்தில் மீட்புப் பயிற்சி பெற்றவர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், அந்த ஆபத்தை ஆராய்ந்து சரியாகக் கணித்து, அந்தச் சூழலில் களத்தின் நிலவரம் என்ன, அதில் எப்படிப்பட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், எந்த வகையான மீட்பு உபகரணம் அந்த சூழலில் பொருத்தமாக இருக்கும் என்பதைச் சுதந்திரமாக சிந்திப்பதற்குரிய சூழலை ஆட்சியாளர்களும், மக்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விபத்து நடந்தால் மக்களும், காவல் துறையும் அந்த இடத்தை சூழ்ந்துகொண்டு பார்க்கும் ஆர்வத்தில் இடைஞ்சல் செய்து, அமைச்சர்கள் உடனே வந்து அதிகாரிகளையும், மீட்புக் குழுவினரையும் சுயமாகச் சிந்தித்து செயல்பட நாம் வழி விடவில்லை என்றால், அதன் பலன் தோல்வியில்தான் முடியும் என்ற படிப்பினையை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து தன்னுயிரை இழந்த சுஜித்தின் மரணம் நமக்குத் தருகிறது.

  இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது, தேசிய பேரிடர் மீட்பு குழுவிடமும், தமிழக அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை; தொழில்நுட்பமும் இல்லை. நவீன தொழில்நுட்பங்களுடன் மீட்புப் பணிக்குத் தயாராக இல்லை என்றால், மக்களின் உயிருக்கு ஆபத்துதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியாவது மத்திய, மாநில அரசுகள் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களை அழைத்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தால் குழந்தைகளை மீட்பதற்கு இந்தியாவில் இருக்கும் மீட்பு உபகரணங்களை ஆராய வேண்டும்.

  அவற்றை மேம்படுத்தி பேரிடர் மீட்பிற்குப் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்பாளர்களோடு இணைந்து உலகத் தொழில்நுட்பத் தரத்தோடு மேம்படுத்தி, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான முதலீடுகளை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களை தொடந்து கண்காணித்து எவ்வித பேரிடராக இருந்தாலும், அது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து, தீ விபத்து, வெள்ளம், சுனாமி மற்றும் விஷவாயு, அணுமின் நிலைய விபத்து போன்ற பேரிடர்கள் எப்போது வந்தாலும் அவற்றைச் சமாளிப்பதற்கு உரிய தயார் நிலையில் இருக்கிறார்களா என்பதை வருடம்தோறும் உறுதிப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல், இப்படிப்பட்ட பேரிடர் வந்தால் மக்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்ற பயிற்சியை வருடம்தோறும் புதுப் புது யுக்திகள், புது உபகரணங்களைக் கொண்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்சி கொடுக்க வேண்டும்.

  இனி வருமுன் காப்பது எப்படி?

  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை பின்பற்றினால் இது போன்ற விபத்துகளைத் தடுக்கமுடியும். ஆழ்துளைக் கிணறுகள் குடிதண்ணீருக்காகவும், விவசாய நீர்ப்பாசனத்துக்கும் போடப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டால், ஆழ்துளைக் கிணறுகள் செயலற்றதாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் ஆழ்துளைக் கிணறுகள் 600 அடி, 1000 அடி போட்ட பின்பும் தண்ணீரே வராத ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு மேல் செலவு செய்து போடப்படும் ஆழ்துளைக் கிணறுகள், தண்ணீர் இல்லை என்றால், சொத்தை விற்று, நகைகளை விற்று, கடன் வாங்கி அதிலும் தண்ணீர் வராததால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் ஏராளம்.. ஏராளம்.

  இன்றைக்கு, ஆழ்துளைக் கிணறுகளை ஆங்காங்கே நெகிழி மூடிகளை வைத்து, இல்லையென்றால் வெறுமனே கல்லையும் மண்ணையும் வைத்து மூடக்கூடிய நடவடிக்கைகளை மக்கள் தொடங்கியிருக்கிறார்கள். ஆழ்துளைக் கிணறுகளை வெறுமனே மூடுவது என்பது பலனளிக்காது. உயிரிழந்த குழந்தை சுஜித்தின் பெற்றோர்களும் ஏழு வருடங்களுக்கு முன்பாக அந்த ஆழ்துளைக் கிணற்றை மண்ணாலும் கல்லாலும் மூடினார்கள். ஆனால் காலப்போக்கில் அது மழையால் தூர்ந்து, அந்தக் குழி மீண்டும் ஏற்பட்டு சுஜித் மரணத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

  எனவே, எங்கெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் 3 லோடு கான்கிரீட் கொண்டு இப்பொழுது மூடியதுபோல் மூடினால் பெரிய அளவுக்குப் பலன் எதுவும் இருக்காது. கான்கிரீட் கொண்டு உபயோகமற்ற ஆழ்துளைக் கிணறுகளையும் மூடினால் ஒவ்வொரு ஆழ்துளைக் கிணறுக்கும் ரூ.1 முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும்.

  அதைச் செய்வதற்கு மக்களிடமும், விவசாயிகளிடம் பணம் இல்லை. விவசாயிகள் தங்களது வறுமையில் மக்களுக்குக் கொடுத்த கொடை, பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள். அதை மழை நீர் சேமிப்புக் கிணறுகளாக மாற்றுவது, மக்களின் மற்றும் அரசின் பொறுப்பு. மீண்டும் அவர்களைப் பணம் செலவழித்து மூடச் சொல்வது, கொடைக்கு அபராதம் விதிப்பதுபோல் ஆகிவிடும்.

  அதையே 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்ட நிர்வாகம் செய்ததுபோல, மழை நீர் செறிவூட்டும் கிணறாக மாற்றினால் குறைந்த செலவில் மாற்றி அமைத்துவிட முடியும். எனவே, உபயோகப்படாமல் இருக்கும் ஒவ்வொரு ஆழ்துளைக் கிணறும் மழைநீர் சேகரிப்புக் கிணறாக மாற்ற வேண்டும். அது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். நாடு வளம் பெறும்.

  எனவே, பயன்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மழை நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றுவோம். ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் மரணம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். நிலத்தடி நீரை 1 வருடத்தில் நிரந்தரமாக உயர்த்திய மாநிலம் என்ற பெயரையும் எடுப்போம். இதை உடனடியாகச் செய்வோம் என்று உறுதி எடுப்போம்.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp