Enable Javscript for better performance
43. எஹ்ரட் டயட்- Dinamani

சுடச்சுட

  

  43. எஹ்ரட் டயட் - 2

  By நாகூர் ரூமி  |   Published on : 06th March 2017 08:55 AM  |   அ+அ அ-   |    |  

   

  நோய் என்பது கழிவுகளை வெளியேற்ற உடல் எடுத்துக்கொள்ளும் முயற்சியாகும் - எஹ்ரட்

   

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்தவர் என்று எஹ்ரட்டைக் கூறலாம். அதுதான் மேலே உள்ள அவரது மேற்கோள். மருந்தில்லா சிகிச்சையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை அதுதான். நோய் என்று நாம் நினைப்பது எதுவுமே நோயல்ல. நம் உடலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு உடலே கொடுத்துக்கொண்டிருக்கும் தீர்வுகள் அல்லது சிகிச்சைகள்தான் அவை. அவற்றைத் தொந்தரவுகளாக நாம் நினைக்கிறோம். அத்தொந்தரவுகளை அமுக்க - கவனிக்கவும், தீர்க்க அல்ல - மாத்திரை மருந்துகளைக் கொண்டு முயற்சிக்கிறோம். ஒரு பிரச்னைக்கான தீர்வையே பிரச்னையாக நினைப்பதுதான் நம்முடைய பிரச்னையே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சீனர்களின் அக்குபஞ்சர் வைத்திய முறை கழிவுக்கோட்பாட்டில்தான் இயங்கிவந்தது என்றாலும், மேற்கத்திய உலகில் இதை முதன்முதலாக ஆராய்ந்து கண்டவர் என்ற பெருமை எஹ்ரட்டையே சாரும்.

  டாக்டர் எஹ்ரட்

  இப்போது இந்த அறிவும் விழிப்புணர்வும் 20, 21-ம் நூற்றாண்டுகளுக்குச் சொந்தமானது. ஃபசுலுர் ரஹ்மான், தீபக் சோப்ரா, ஹெக்டே, சிவராமன், மு.அ.அப்பன் போன்ற இந்திய மற்றும் உலக அளவில் புகழ் பெற்றுள்ள டாக்டர்களும், பாஸ்கர், உமர் போன்ற ஹீலர்களும் சொன்னது, சொல்லிக்கொண்டிருப்பது இதுதான். ஆனால், இன்று இவர்கள் அற்புதமாக விளக்குகின்ற இதே விஷயத்தை கிட்டத்தட்ட 90 விழுக்காடு அப்படியே மிகச் சரியாகச் சொல்லிச் சென்றவர் என்ற பெருமை எஹ்ரட்டையே சாரும் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் சொன்ன விதம், அவர் உருவாக்கிய சொற்கள் வேண்டுமானால் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் அவரும் உண்மையைக் கண்டு கொண்டவர்களில் ஒருவர். எனவேதான் மருந்தில்லா சிகிச்சை முறையை நாம் எஹ்ரட்டிலிருந்து தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது. எஹ்ரட்டிலிருந்து தொடங்கலாம். ஆனால் எஹ்ரட்டில் முடிந்துவிடக் கூடாது. அதற்கும் காரணங்கள் உண்டு. பார்க்கத்தானே போகிறோம்.

  தன்னுடைய முற்றிலும் புதிய சிகிச்சை முறைகளால் தனக்கு ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பை முற்றிலுமாகக் குணப்படுத்திவிட்டதாக எஹ்ரட் கூறினார். அதை நிரூபிக்கும்விதமாக அவர் சில சாதனைகளை உலகுக்கு செய்து காட்டினார். என்ன சாதனைகள்?

  • 800 மைல் சைக்கிளிலேயே பயணம் சென்றார் என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த சைக்கிள் மாரத்தானை முடிக்க அவருக்கு இரண்டு வாரங்கள் ஆனது.
  • 16 மணி நேரம் தொடர்ந்து நடந்த பிறகு, கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்துகாட்டினார். சிறுநீரக அழற்சி உள்ளவர்களால் அப்படியெல்லாம் செய்திருக்கவே முடியாது. முழங்கால் முட்டியை வளைத்துக் காட்டினார். கைகளை நன்றாக நீட்டிக் காட்டினார். இதையெல்லாம் அவர் ஒரு சில நிமிடங்களில் 360 முறைகள் செய்து காட்டினார்.
  • சில விளையாட்டு வீரர்களோடு சேர்ந்து அவர்கள் செய்ததையெல்லாம் அவர்களைவிட சிறப்பாகச் செய்து காட்டினார்.
  • தினமும் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் 120 டிகிரி சூரிய ஒளியில் குளித்தார். இப்படியெல்லாம் செய்ததன் மூலமாக, அவரோடு சைக்கிளில் சென்ற இன்னொரு நண்பரின் திக்குவாய் பிரச்னை தீர்ந்தது.
  • பொதுமக்கள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் முன்னிலையில் தொடர்ந்து விரதமிருந்து காட்டினார். ஒரு அறையில் அவரை வைத்துப் பூட்டினார்கள். அவருக்கு வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட்டது. அந்நிலையில் அவர் தொடர்ந்து 21 நாட்கள், பின் 24 நாட்கள், பின் 32 நாட்கள், பின் 49 நாட்கள் என்று கொலோன் என்ற நகரில் விரத சாதனை செய்துகாட்டினார். அவ்விரதங்களெல்லாம் முடிய 14 மாதங்களாயின!

  எப்படி விரதம் இருக்க வேண்டும், எதை, எப்படிச் சாப்பிட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விரிவுரைகள் கொடுக்கத் தொடங்கினார்.

  எஹ்ரட்டின் ஆரோக்கிய சூத்திரம்

  ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் ஒரு ஃபார்முலா உள்ளது. அதைக் கடைப்பிடித்தால் யாரும் ஆரோக்கியமாக வாழலாம் என்று ஒரு சூத்திரத்தை எஹ்ரட் உருவாக்கினார். அது என்ன?

  V = P – O என்பதான் அது.

  V என்பது Vitality எனப்படும் வீரியத்தைக் குறிக்கும். P என்பது Power எனப்படும் ஆற்றலைக் குறிக்கும். O என்பது Obstruction எனப்படும் தடையைக் குறிக்கும். தமிழில் இப்படிச் சொல்லலாம்:

  வீ = ஆ – த. அதாவது வீரியம் = ஆற்றல் – தடைகள்.

  இது எஹ்ரட்டின் Vitalism Principle என்று அறியப்பட்டது. இதைப் புரிந்துகொள்வது நமக்கு மிக முக்கியமானது. ஏனெனில், இது ஒரு அருமையான ஆரோக்கிய சூத்திரமாகும். இதைப் பின்பற்றினால், யாரும் எந்த நோயும் இல்லாமல் / வராமல், ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே, இதுபற்றிக் கொஞ்சம் பார்க்கலாமா?

  ஆற்றல் இருந்தால்தான் மனிதர்கள் உயிருடன் இருக்க முடியும். உங்களுக்கான உறுதியும் திறனும் ஆற்றலில் இலிருந்துதான் கிடைக்கிறது. ஆனால், தடைகள் எனப்படுபவை மிக மோசமானவை. அவை கழிவுகளாக, அந்நியப் பொருள்களாக, நச்சு ரத்தமாக, சளியாக – இன்னும் எல்லாவிதமான அசுத்தங்களாகவும் நம் உடலில் தேங்குகின்றன. அவை தங்குதடையற்ற ரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. நம் உடலின் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. மனித உடல் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. எனவே ‘ஆ’வைவிட ‘த’ அதிகமானால் மனித உடலெனும் யந்திரம் நின்றுவிடும்.

  அப்படியானால் என்ன செய்வது? கழிவுகள் உடலில் தங்காமல், தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? சத்தான உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டுமா? இல்லை என்று அடித்துக் கூறுகிறார் எஹ்ரட்! தனது "Mucusless Diet Healing System" என்பது ஒவ்வொரு நோய்க்குமான வேறுபட்ட உணவுவகைப் பட்டியல் தரும் சத்துணவுத் திட்டமல்ல என்று சொல்கிறார் எஹ்ரட்.

  அப்படியானால், அவரது குணமாக்கும் திட்டம்தான் என்ன? மெள்ள மெள்ள நம் உணவுப் பழக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்தி, கழிவுகள் தங்காத உணவை மட்டும் உண்ணும் பழக்கத்தை உண்டாக்கும் ஒரு திட்டமாகும். லட்சிய உணவுத் திட்டம் என்று அதை எஹ்ரட் வர்ணிக்கிறார்.

  அப்படி என்னதான் உணவு அது? ஒன்றுமில்லை, பழங்கள், பழங்கள், பழங்கள். கொஞ்சம் காய்கறி. அதுவும் குறிப்பாக, பசுமையான இலைகளைக் கொண்ட காய்கறிகள். அவ்வப்போது குறுகிய கால மற்றும் நீண்ட கால விரதங்கள். இவைதான்.

  இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மட்டுமே ம்யூகஸ் இல்லாத, ம்யூகஸை உருவாக்காத உணவு என்று எஹ்ரட் கூறுகிறார். பழங்களை மட்டும் தின்று வாழ முடியுமா? முடியும், ஆனால் முடியாது என்பதுதான் உண்மை.

  சமைக்காத உணவு வகைகளை, பழங்களை, காய்கறிகளை மட்டும் உண்டு வாழ்தல் இக்காலத்தில் சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், சமையலுக்கு முற்றிலும் எதிரானவராக எஹ்ரட் இருந்தார். இயற்கை வைத்தியரான நம் மு.அ. அப்பனும் இதையே சிபாரிசு செய்கிறார். ஆனால், அவர் கொஞ்சம் இறங்கிவந்து, மூன்று வேளையும் பழங்களை உண்ண முடியாவிட்டல், இரண்டு வேளை உண்ணுங்கள்; அதுவும் முடியாவிட்டால் ஒருவேளையாவது உண்ணுங்கள்; அதுவும் முடியாவிட்டால், உங்கள் வழக்கமான உணவையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் சாப்பிடும் முன் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, பின்பு உங்கள் பிரிய உணவுக்குச் செல்லுங்கள் என்று கூறுகிறார்.

  டாக்டர் மு.அ. அப்பன்

  அப்பன் சொல்வது ரொம்ப அறிவார்ந்த அறிவுரையாகும். ஒருவேளை மட்டும், காலையிலோ அல்லது இரவிலோ பழங்களை மட்டும் சாப்பிடுவது சாத்தியமே. நெருப்பின் பயன் அறியப்படுவதற்கு முந்தைய காலத்துக்கு இப்போது நாம் செல்வது சாத்தியமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஏனெனில், சமையல் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. ஆனாலும் பழங்கள் பற்றியும், விரதம் பற்றியும், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் எஹ்ரட் சொல்வது சத்தியமான வார்த்தைகள். அவற்றை விபரமாக அறிந்துகொள்வது நமக்கு மிகவும் நல்லது.

  ட்ரான்சிஷன் டயட்

  ஒரேயடியாக பழங்களுக்கும், கொட்டைகள் மற்றும் காய்கறிகளுக்கும் மாற முடியாதவர்கள் படிப்படியாகப் போகலாம் என்று கொஞ்சம் கருணை காட்டுகிறார் எஹ்ரட். கொஞ்சம் கொஞ்சமாக உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் விரைவில் எல்லா நோய்களில் இருந்தும் குணமடைய ஏதுவாகும் என்றும் கூறுகிறார். மட்டன், சிக்கனிலிருந்து சட்டென்று பழங்களுக்கு மாறாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை ‘ட்ரான்சிஷன் டயட்’ (இடைக்கால உணவு) என்று அவர் கூறுகிறார். இருபது ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு அவர் இந்த முடிவுக்கு வருகிறார்.

  எல்லா நோய்களையும் தீர்க்க முடியும் என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமானதே. ஆனால், அதற்கு எஹ்ரட் ஒரு தீர்க்கமான பதிலைத் தருகிறார். எல்லா நோயுமே மலச்சிக்கல்தான் என்று ஒரே போடு போடுகிறார். இதைப் புரிந்துகொள்வது மிகமிக முக்கியமானது.

  அக்குபஞ்சர் மாணவர்களுடன் ஹீலர் உமர்

  மலச்சிக்கல் பலச்சிக்கல் என்று ஒரு தமிழ்ப்படத்தில் சூரியா பேசும் வசனம் நினைவுக்கு வருகிறதா? அந்த அர்த்தத்தில் அவர் சொல்லவில்லை. மலச்சிக்கல் என்றால் மலம் வெளியே வராமல் இறுகிப்போன நிலையைக் குறிக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், எஹ்ரட் அதை மட்டும் சொல்லவில்லை. உணவுக் குழாய்களில், உணவு செல்லும் பாதையில் ஏற்படும் தடையைத்தான் அவர் மலச்சிக்கல் என்று சொல்கிறார். அது மலமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது சளியாக, வேதிப்பொருளாக, சிறுநீராக, செரிக்காத உணவாக, புழுவாக, சர்க்கரையாக - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாக் கழிவுகளையும் அவர் ம்யூகஸ் என்று சொல்வதுபோல மலம் என்றும் குறிப்பிடுகிறார். மலச்சிக்கல் என்பதை கழிவு வெளியேற்றச் சிக்கல் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

  முட்டி வலியாக இருந்தாலும், முதுகு வலியாக இருந்தாலும், அரிப்பாக இருந்தாலும், தடிப்பாக இருந்தாலும், பிய்த்துக்கொண்டு போனாலும், போகமலே அடைத்துப்போயிருந்தாலும், மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தாலும், நாக்கு வறண்டுபோயிருந்தாலும், காது வலி, பல் வலி, தலை வலி, காய்ச்சல், இருமல் - இப்படி மருத்துவத் துறையால் பெயர் வைக்கப்பட்ட அல்லது இன்னும் வைக்கப்படாத எந்த நோயாக இருந்தாலும், எல்லாமே கழிவுகள் வெளியேறாமல் இருப்பதன் விளைவுகள்தான். அதைத்தான் ‘கான்ஸ்டிபேஷன்’ என்று எஹ்ரட் கூறுகிறார். கழிவுகளை ‘ம்யூகஸ்’ என்று சொல்வதுபோல, கழிவுகள் தேங்கியிருப்பதை ‘கான்ஸ்டிபேஷன்’ என்று கூறுகிறார். எனவே, அந்தச் சொல்லுக்கு விரிவானதொரு அர்த்தத்தில் எஹ்ரட் பயன்படுத்துகிறார்.

  பொழுது மலச்சிக்கல் இல்லாமல் விடிகிறதா?

  மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா?

  என்ற வைரமுத்து கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன!

  பரிசோதனைச் சாலைகளில் செய்யப்படும் எல்லா டெஸ்ட்டுகளும் தவறானவை என்றும் அடித்துக் கூறுகிறார். அவை எப்படி தவறானவை என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். பத்து வேடங்களில் கமலஹாசன் ஒருவரே நடிப்பது மாதிரி, கழிவுகளின் தேக்கம்தான் பல்லாயிரக்கணக்கான நோய்களாக உருமாற்றமும் பெயர் மாற்றமும் பெறுகின்றன.

  இந்த உண்மையைக் கண்டு சொன்னதற்காக, எஹ்ரட்டுக்கு இவ்வுலகம் ரொம்பவும் கடன்பட்டிருக்கிறது. மனித உடலுக்குள் வளைந்து வளைந்து செல்லும் எல்லாக் குழாய்களிலும் ஏற்படும் அடைப்புதான் கான்ஸ்டிபேஷன் என்று அவர் விளக்குகிறார். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கழிவுகள் தேங்கி மேலே செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுமானால், அது ‘லோக்கல் கான்ஸ்டிபேஷன்’. குறிப்பாக நாக்கு, வயிறு மற்றும் செரிமானமான உணவின் செல்தடம் ஆகியவைதான் அடிக்கடி தேக்கம் ஏற்படும் இடங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

  பிரச்னைகள் ஏதுமற்ற, ஆரோக்கியமான ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பத்து பவுண்டு மலம் (கிட்டத்தட்ட நாலறை கிலோ) எப்போதுமே தேங்கி இருக்கும்; அது ரத்தத்துக்கும் ஒட்டுமொத்த உடலுக்கும் நச்சுத்தன்மை கொடுத்துவிடும் என்று அவர் கூறுவது சிந்திக்கத்தக்கது. அட கடவுளே! நம்முடைய எடையில் நாலறை கிலோவை கழித்துவிட்டுத்தான் இனி பார்க்க வேண்டும்! அந்த நாலறை கிலோவை மட்டும் பார்க்கவே கூடாது!

  சராசரி மனிதனுக்கு கழிவுகள் பற்றியும் தெரியாது, அவை எப்படி வெளியேறுகின்றன, எப்படித் தேங்குகின்றன, அப்படித் தேங்கியதையெல்லாம் எப்படி வெளியேற்றி சுத்தப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அதனால்தான், அந்த வேலையை உடலே பார்த்துக்கொள்கிறது.

  (என்றாலும் விஷயம் தெரிந்தபிறகு நாம் ஏதாவது செய்வதுதான் நல்லது. அதனால்தான், சுத்த சைவராக இருந்த மகாத்மாகூட அவ்வப்போது ‘எனிமா’ கொடுத்துக்கொண்டார். அவர் மட்டுமா கொடுத்துக்கொண்டார்? உடன் இருந்த பெண்களுக்கும் அவரே அதைச் செய்துவிட்டார். மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங், மகாத்மா பற்றிய கட்டுரையில் இந்நிகழ்ச்சியை குறிப்பிட்டுவிட்டு, lucky old man என்று வேறு சொல்கிறார்! எனிமாதான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. செக்கில் ஆட்டிய சுத்தமான விளக்கெண்ணெய்யை வாங்கி வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறையோ, அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மூன்று தேக்கரண்டி எடுத்துக்கொண்டால் போதும். மற்றதை அது பார்த்துக்கொள்ளும்! நான் செய்து பார்த்த, ரொம்ப வெற்றிகரமான சுத்தப்படுத்தும் செயலாகும் இது! நன்றி ஹீலர் பாஸ்கர்)!
   

  ஹீலர் பாஸ்கருடன் தொடர் ஆசிரியர் நாகூர் ரூமி

  ஆனால், உடல் தன் கடமையைத் தவறாமல் செய்யும்போது, அதைத் தொந்தரவு என்று கருதி, உடலுக்கு உதவுவதாக நினைத்து, மருந்து மாத்திரைகளை உட்கொண்டு நாம் உடலின் வேலையை தாற்காலிகமாக நிறுத்திவிடுகிறோம். எனவே, குணப்படுத்த வேண்டியது நோயை அல்ல; உடலைத்தான் என்கிறார் எஹ்ரட். ஏனெனில், குழந்தைப் பருவத்திலிருந்தே நம் உடலில் கழிவுகள் தேங்கிக்கிடக்கின்றன. ஆனால், அதுபற்றி நமக்கு எதுவுமே தெரியாது.

  பல மாமாங்கங்களாக நாம் செய்த தவறுகளினால் தேங்கிக்கிடக்கும் கழிவுகளை ஒருசில நாட்களில் நீக்கிவிட முடியாது. பிறந்தது முதல் உடலுக்கு நீங்கள் செய்த துரோகத்துக்குத் தகுந்த பரிகாரம் செய்தாக வேண்டும். ஏனெனில், பிறந்ததிலிருந்தே நம் பெருங்குடலை நாம் காலியாக விட்டதே இல்லை. இந்த உலகில் உள்ள ஒருவருக்குக்கூட லட்சிய உடல், அதாவது கழிவுகள் தேங்காத உடல் என்று ஒன்றுமில்லை என்கிறார் எஹ்ரட். சத்தியமான சொற்கள்!

  மனித உடலானது நெகிழும் தன்மை கொண்ட ஒரு குழாய் அமைப்பாகும். நமது நவநாகரிகக் குப்பை உணவுகள், மெக்டொனால்டுகள், கேஃஎப்சி பக்கெட்டுகள் எல்லாம் செரிப்பதுமில்லை, அக்கழிவுகள் வெளியேறுவதும் இல்லை. எனவே, நமது உடலின் குழாய் அமைப்பு முழுவதுமே மெள்ள மெள்ள மலச்சிக்கலுக்கு ஆட்படுகிறது. குறிப்பாக, பிரச்னை இருப்பதாக உணரப்படும் பகுதியிலும் செரிமானத்துக்கான தடத்திலும்.

  நோய்கள் உண்டாவதற்கான அடிப்படை இதுதான். கட்டிதட்டிப்போன இந்தக் கழிவை இளக்குவதற்கு, அறிவார்ந்த முறையில் அதை முழுமையாக வெளியேற்றுவதற்கு தன்னுடைய ‘ம்யூகஸ்லெஸ் டயட் சிஸ்டம்’ மட்டுமே உதவ முடியும் என்று கூறினார் எஹ்ரட்.

  எஹ்ரட்டிடம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்தார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எடுத்துக்கொண்ட ஆங்கில மாத்திரைகளின் கழிவுகள் சளியோடு சேர்ந்து வெளியேற்றப்பட்டன! அப்படியானால் சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்று அட்டவணை போட்டு நாம் அன்றாடம் விழுங்கும் மாத்திரைகளின் கழிவு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுகூட வெளியேறாமல் தேங்கிக்கிடக்கிறது என்ற எஹ்ரட்டின் கண்டுபிடிப்பு அதிர்ச்சியூட்டக்கூடியதாகும்.

  அப்படி நாள்பட்ட, ம்ஹும், மாமாங்கம் ஆன கழிவுகளை நம் சிறுநீரகங்களின் மூலமாக வெளியேற்றும் வேலையைச் செய்யும்போது, நம் இதயமும் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. அதன் விளைவாக மயக்கம், நடுக்கம், அதிகப்படியான இதயத்துடிப்பு, இன்னும் விநோதமான உணர்வுகள் எல்லாம் ஏற்படும் என்று கூறுகிறார் எஹ்ரட்.

  என்னவென்று புரியாமல் நாம் நம் குடும்ப டாக்டரை அழைத்துக் காட்டுவோம். அவர் பரிசோதித்துவிட்டு, ‘‘உங்களுக்கு இதய நோய்’’ என்று சொல்லி, பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட மாத்திரைகள்தான் அந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது புரியாமல், “சரியாகச் சாப்பிடவில்லை” என்று கண்டுபிடித்துச் சொல்வார் என்று கேலி செய்கிறார் எஹ்ரட்.

  இன்னும் பார்க்க இருக்கிறோம்…

  kattana sevai