Enable Javscript for better performance
குவியத்தின் எதிரிகள்: 1. புகார்- Dinamani

சுடச்சுட

  

   

  ‘‘போன வாரம் இடைவிடாம 16 மணி நேரம் வேலை பாத்திருக்கேன். இன்னிக்கு பாஸ் ‘வேலை இன்னும் முடியலை’ன்னு திட்டறாரு. ஷில்ப்பாகிட்ட புது ப்ராஜெக்ட் கொடுக்கறவனுக்கு, அட்லான்டா ப்ராஜெக்டை முடிச்சுக்கொடுத்தவ யாருன்னு தெரியலையா? கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும், வழிவானுங்க” - இவை சகஜமாக ஒரு மென்பொருள் கம்பெனியின் காபி டேபிளில் பேசப்படும் சொற்கள்.

  சிலவற்றில் உண்மை இருக்கக்கூடும். ஆனால், மனிதவளத் துறையில் கேட்டால் லேசாகச் சிரிப்பார்கள். அவர்களில் பலருக்குத் தெரிந்த ஒரு சொற்றொடர், “அனைவரும், தன்னைத் தவிர மற்ற யாரும் கம்பெனிக்குத் தேவையில்லாதவர்கள் என்று கருதுகிறார்கள்” (Everyone thinks the other person is a white elephant).

  “நான் பல தியாகங்கள் செய்கிறேன். ஆனால், மற்றவர்கள் ஒன்றும் செய்யாது முன்னேறிச் செல்கின்றனர்”.

  இதனை Self evaluation error என்கிறார் தோப்லி என்ற அறிஞர். நம் திறமை குறித்த சுயஉறுதி அவசியம். ஆனால், மேலே சொன்னது சரியான காரணங்கள் இல்லாத, வெறும் தற்புகழ்ச்சி சிந்தனைகளே. சுயஉறுதியின் வளர்ச்சி, வலி நிறைந்த பாதைகளில் செல்லத் திடம் கொள்வதிலும், வலிகளைத் தாங்கி, உறுதியுடன் மேலே செல்வதிலும் இருக்கிறது. ஆனால், தற்புகழ்ச்சி சிந்தனை என்பது, சிறு சிறு வெற்றிகளில் அதிகமாகத் தன்னைப் பாராட்டிக்கொள்வதில் வரும் களிப்பு. அது தரும் எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும் நேரத்தில், அதிர்ச்சியும் கோபமும் விரக்தியும் ஒருங்கே பொங்குகின்றன. இதன் வெளிப்பாடு - புகார்.

  மிக நிதானமாக, நமது உணர்ச்சிகளை அகற்றி, நாம் என்ன நினைக்கிறோம் என்பதை எழுதிவிட்டு, சில மணி நேரம் கழித்து வாசித்துப் பார்த்தால், பல கோணங்களில் சிந்தை புறப்படும். அதில் உணர்வற்ற, தர்க்கரீதியான சிந்தனையை, சுயஉணர்வோடு பிடித்து அதில் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைக்கு குவியம் மட்டுமல்ல, உணர்வுக் குப்பைகளை அகற்றும், சுயஉணர்வும் அவசியம்.

  நண்பர்களிடம் ஆற்றாமையைச் சொல்லிப் புலம்பும்போது, புகார்களே மிஞ்சி இருப்பதைப் பார்க்கலாம். அதில் இயலாமை, கோபம், பொறாமை போன்றவை முன் நிற்கும். புகார் செய்யும் முன், ஒருமுறை ‘‘இதைச் சொல்லத்தான் வேண்டுமா?” என்று நினைப்பது நல்லது. என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல, யாரிடம் சொல்கிறோம் என்பதும் முக்கியம். ‘இவனிடம், இதனைச் சொல்வதால் என்ன பயன்?’ என்ற ஒரு கேள்வி போதும். புகார்கள் சொல்வது பெருமளவில் நின்றுவிடும்.

  ‘என் மனக்குறையைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாதா?’ என்று கேட்கலாம். தாராளமாகச் செய்யலாம். மேலே சொன்ன அந்த ஒரே கேள்வியை நம்மிடம் கேட்டுக்கொண்டு, அதற்குச் சாதகமான பதில் என்றால், குறையைப் பகிர்வதில் தவறே இல்லை. இதனால்தான், நிபுணர்களிடம் கவுன்சிலிங் செல்வது அவசியம். வீட்டில், பெரியவர்களிடம் குறைகளைச் சொல்வது நல்ல பழக்கம். அவர்களால் உங்களது தொழில்ரீதியான புகார்களுக்குப் பதில் சொல்ல முடியாததாக இருக்கலாம். நம்முடைய பெரும்பாலான புகார்கள் மனித உறவுகள் சார்ந்தவையே. அதனால், அவற்றை அவர்களால் தெளிவாக அடையாளம் கண்டு ஒரு தீர்வை, அல்லது தீர்வுக்கான வழிமுறையை நிச்சயம் சொல்லமுடியும்.

  புகார்களில் 90 சதவீதம் உண்மை இல்லை. ஏனெனில், புகார்களுக்கு ஒரு நிகழ்வு என்பது சாக்கு மட்டுமே. அதன்பின் நிற்பது மனத்தின் விகார எண்ணங்களே. புகார் செய்யும்போது, மனது நாம் சொல்வதை நம்புகிறது. மீண்டும் மீண்டும் அதுபோன்ற நிகழ்வுகளில்தான் நம்பியதைப் பொருத்திப் பார்க்கிறது. அது கொஞ்சம்போல உண்மையாக இருக்கும் என்று தோன்றினாலும் போதும்; தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்கிறது. “அந்த ஆளு ஷில்பாவோட சிரிச்சி சிரிச்சிப் பேசும்போதே நினைச்சேன்டி. இது இப்படித்தான் வந்து முடியும்னு. அவளுக்கும் வெக்கம் இருக்கா பாரு” - இறுக்கமடைந்த மனம், மென்மேலும் புகார்களைச் சொல்லவைக்கிறது.

  இந்த, புகார் – சிந்தனை – புகார் என்ற விஷச் சுழற்சியை அறுத்துவிடுவது எளிதல்ல.

  தவறான பாதையில் செல்லும் வண்டி, மிக விரைவாகச் செல்வதால் மட்டும் இலக்கை அடைந்துவிட முடியாது.

  நான் நன்கு ஓடுகிறேன் என்று மட்டும் சிந்தித்துவிட்டால், குழப்பமே மிஞ்சும். எங்கே ஓடுகிறேன் என்ற கேள்வி முதலிலும், எப்படி ஓடுகிறேன் என்பது இரண்டாவதாகவும் இருக்க வேண்டும்.

  நேரத்தில் முடித்துக்கொடுக்க வேண்டிய ஒரு வேலையை எடுத்துக்கொள்வோம். வேலையில் முக்கியமானது, உற்பத்தித் திறன் (productivity) மற்றும் தரம் (quality). இரு நாட்களுக்குள் செய்ய வேண்டிய ஒன்றை நான்கு நாட்களுக்கு இழுத்தடித்துச் செய்வதிலும், இரு நாட்களுக்குள் செய்துகொடுத்த பணியில் இன்னும் இரு நாட்கள் தவறுகளைச் சரிசெய்ய வைப்பதும் கம்பெனிகளுக்கு உதறல் கொடுக்கும்.

  ‘நான் நல்லாத்தான் வேலை செய்கிறேன், செய்வேன்’ என்ற சுயஅனுமானத்தைவிட, ‘இந்த வேலைக்கு எது தேவை, எப்போது தேவை’ என்பது குறித்த தெளிவு நம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

  இதற்கு சுயஉணர்வு அவசியம். மனக் குவியத்தின் ஒரு அங்கமாக சுயஉணர்வைச் சொல்லலாம். சுயஉணர்வும், வெளி நிகழ்வுகளைத் தெளிவாக அறிதலும்; புகார்களை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல, தெளிவாகச் சிந்திக்கவும் உதவும். இதற்குப் பின்னூட்டம் என்பது கைகொடுக்கிறது.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai