Enable Javscript for better performance
ரோஜா மலரே - 13- Dinamani

சுடச்சுட

  
  actress_sachu

   

  என்னைப் பாராட்டியவர் யார் தெரியுமா? அவர்தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரும் நானும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். சிறுவயதிலிருந்து என் மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்தார். அவரே எப்பவும் துறுதுறு என்று இருப்பார். நானும் அவரைப்போல் இருந்ததனால், என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

  ‘தேவதாஸ்’ படத்திலும் சரி, பிறகு வந்த படங்களிலும் சரி, நாங்கள் நடித்ததைவிட பழகியது அதிகம். ‘மாயாபஜார்’ என்ற படத்தில் வரும் ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற பாட்டு அன்று மட்டும் அல்ல; இன்றும் மிகவும் பிரபலமான பாடல்தான். அந்தப் படத்தில் சாவித்திரி அம்மா நடித்திருந்தார். அவரது சிறுவயது கதாபாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அவருக்கும் எனக்கும் ஒரே மாதிரி உடையை தைத்திருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் நான் அவரைப்போல காதுக்கு, கழுத்துக்கு என்ன அணிய வேண்டும் என்று ஓவியம் வரைந்து கொண்டுவந்து, எனக்கு அதே மாதிரி உடை, அந்த அணிகலன்கள் எல்லாம் செய்து எனக்கு மாட்டிவிட்டார்கள்.

  சாவித்திரி அம்மாவின் மகள் விஜயசாமுண்டேஸ்வரி என்னிடம் ஒருமுறை சொன்னார். ‘எப்படி அம்மாவைப்போல நீங்களும் நடித்து உள்ளீர்கள்’ என்று ஆச்சரியமாகக் கேட்டார்கள். அது சாவித்திரி அம்மா கேட்டது போலவே இருந்தது. காரணம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சாவித்திரி அம்மா என்னை மிகவும் பாராட்டினார். அந்தப் படத்தில் அவர் கைகளை வீசி, ஒருவிதமான ஸ்டைலான நடையை நடந்திருப்பார்கள். அதே மாதிரி நானும் படத்தில் நடந்ததால்தான் விஜயசாமுண்டேஸ்வரி என்னைப் பாராட்டினார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  சாவித்திரி அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். கேமராவிற்கு முன்னால் வரும் வரை எங்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் கேமிராவிற்கு முன்பாக வந்துவிட்டாலோ அவரது உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் மாறிவிடும். இயக்குநர் ‘கட்’ என்று சொன்னால் மட்டுமே நிறுத்துவார். கேமராவுக்கு முன்னால் அவர் விஸ்வரூபம் எடுப்பார் என்று சொன்னால் அது மிகை இல்லை.

  ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம். அதை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அதில் என் அக்கா மாடி லட்சுமி ஒரு நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். பாட்டி மட்டும்தான் இருந்தார் என்பதனால், அவர் என்னுடனும் வர வேண்டும், எங்கள் அக்காவுடனும் துணைக்குச் செல்ல வேண்டும். அக்காவுடன் செல்லும்போது எனக்கு சூட்டிங் இல்லை என்றால், என்னை வீட்டில் தனியாக விட்டுச் செல்ல முடியாது. அதனால் நானும் அவர்களுடன் செல்வேன். அதுபோல அன்றும் அக்காவுக்கு சூட்டிங் என்பதனால் அவருடன் நானும் சென்றேன். அந்தப் படப்பிடிப்பில் சாவித்திரி அம்மா இருந்தார்.

  எப்பொழுதுமே அவர் இருந்தால், அவருடன்தான் நான் உட்கார்ந்து இருப்பேன். நான் என்ன குறும்புத்தனம் செய்தாலும் என்னைக் கோபித்துக்கொள்ளமாட்டார்கள். என் பாட்டியிடமும் சொல்வார்கள், ‘சச்சு சிறு குழந்தைதானே, என்ன செய்தாலும் அவளைத் திட்டாதீர்கள். கோபித்துக்கொள்ளாதீர்கள்’ என்று எனக்குப் பரிந்துதான் பேசுவார்கள். நான் என்ன கேட்டாலும், அவர் எப்படியாவது எனக்கு வாங்கிக் கொடுத்துவிடுவார். இதற்கும் நான் உதாரணம் சொல்ல முடியும்.

  தமிழில் ‘மரகதம்’ என்று ஒரு படம். அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் பத்மினி நடித்தார்கள். அதே படம் தெலுங்கில் தயாரானபோது என்.டி.ராமராவ், சாவித்திரி அம்மா நடித்தார்கள். அந்தத் தெலுங்குப் படத்திற்கு பெயர் ‘விமலா’. இரு படங்களிலும் நான் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடினேன். அந்த ஷெட்யூல் அன்றுடன் முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்த நாள் எனக்கு பிறந்த நாள். நான் என் பாட்டியிடம் சில விஷயங்களைச் சொல்லி, அதை இங்கு வாங்கிவிடலாம் என்று சொன்னேன்.

  அதற்கு என் பாட்டி, ‘இன்றே கிளம்பப்போகிறோம். சென்னையில் கிடைக்காதது என்ன? எல்லாம் நாங்கள் வாங்கி வைத்திருக்கிறோம்’ என்று சொன்னார். நான் விடாமல் கேட்க, இதை சாவித்திரி அம்மா பார்த்துவிட்டு ‘என்ன’ என்று கேட்டார்கள். ‘இங்கு ஷாப்பிங் போக வேண்டும் என்கிறாள். நாளைக்கு இவளுக்குப் பிறந்த நாள்’ என்ற விஷயத்தை கூறினார். என்னைப் பார்த்து ‘நீ கவலைப்படாதே, உன் பிறந்தநாளை ஜாம் ஜாம் என்று சென்னையில் நாளை கொண்டாடுவோம்’ என்றார். அன்று இரவே புறப்பட்டு அடுத்த நாள் விடியற்காலை நாங்கள் எல்லாரும் சென்னை வந்து சேர்ந்தோம்.

  நான் காலையில் எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று வந்தேன். பகல் பன்னிரண்டு மணிக்கு எங்கள் மயிலாப்பூர் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து சாவித்திரியம்மா இறங்கி உள்ளே வந்தார். என்னை அழைத்து என் கையில் நல்லி ஜவுளிக் கடையில் இருந்து வாங்கிவந்த ஒரு பட்டுப் பாவாடையை என் கையில் கொடுத்தார்கள். அதற்கு ஏற்றாற்போல் சட்டையும் இருந்தது. காலையில் தான் எல்லோரும் சென்னைக்கே வந்தோம். எப்பொழுது வாங்கினார்கள், எப்பொழுது தைத்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. எனக்காக ஓய்வுகூட எடுக்காமல், வீடு தேடி வந்தார் என்றால் என் மீது அவருக்குள்ள பாசம் என்ன என்று எனக்கு மட்டும் இல்லை, என் வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்தது.

  அந்தப் பட்டுப் பாவாடையில் பெரிய ஜரிகை பார்டர், அதற்கு ஏற்றாற்போல் ஒரு பட்டுச்சட்டையும் இருந்தது. சந்தோஷ மிகுதியால் ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. வீட்டில் வாங்கியிருந்த இனிப்பை எல்லாம் எடுத்துவந்து அவரிடம் நீட்டினேன். ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டார். ‘நேற்று பாட்டியோடு சண்டை போட்டாய், அதனால் நானே உனக்குக் கொண்டுவந்து கொடுக்கிறேன்’ என்று சொன்னவுடன் நான் அவர் காலில் விழுந்து வணங்கினேன். ‘நீ நல்லா வருவே, எல்லா திறமையும் உன்னிடம் இருக்கு. ஆனா குறும்புத்தனத்தை மட்டும் விட்டுவிடு’ என்றார். திரும்பவும் சொல்கிறேன், இப்படிப்பட்ட சாதனையாளர்களின் ஆசியினால்தான் என்னால் இன்றுவரை எல்லாவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கமுடிகிறது என்று நான் நினைக்கிறேன்.

  அன்று இருந்த கலைஞர்கள் எல்லோரும் ஒரு குடும்பமாகப் பழகினார்கள். அதற்கு அவர்களின் பழகும் தன்மை மட்டும் காரணமில்லை. பட்சிராஜா ஸ்டுடியோவில் ஒரு பெரிய ஹால், அதை ஒட்டி ஒரு படுக்கை அறை. வேறு பக்கம் இரண்டு மூன்று படுக்கை அறைகள் இருக்கும். இதில் சிறப்பு என்னவென்றால் இந்தப் படுக்கை அறைகள் எல்லாமே படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காக அமைக்கப்பட்டவை. ஆண் நடிகர்கள் எல்லாரும் வெளியே தங்கி இருப்பார்கள். சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா அவரது தாயார் சந்தியா போன்றவர்களும் அந்த இடத்தில்தான் தங்குவார்கள்.

  உங்களுக்கு வெளியே சென்று வேறு ஏதாவது ஓட்டலில் தங்க வேண்டும் என்றால் ஒரே ஒரு ஓட்டல்தான் இருந்தது. அது உட்லண்ட்ஸ் ஓட்டல்தான். நான் ‘ராணி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அந்த ஓட்டலில்தான் தங்கி நடித்தேன். இதை விட்டால் அன்று கோவையில் வேறு பெரிய ஓட்டல்களே இல்லை என்று சொல்லலாம். எல்லோரும் அறையை விட்டு வெளியே வந்தால் ஹாலில்தான் உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். சாப்பிட வேண்டும்.

  சீட்டு கச்சேரி நடக்கும். சாவித்திரி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மற்றவரின் சீட்டையும் பார்த்து, அவருக்குச் சொல்லிக் கொடுப்பேன். அப்படி விளையாடும்போது நான்தான் அவருக்கு அசிஸ்டண்ட். அன்று எல்லோரும் ஒன்றாக வித்தியாசம் பார்க்காமல் பழகுவார்கள். நான் கதாநாயகி என்றோ அல்லது, நீ சிறு வேடம்தான் செய்கிறாய் என்ற பாகுபாடில்லாமல் பழகும் தன்மை அன்று இருந்தது. ஒருவருக்கொருவர் உதவி, உடல் நிலை சரியல்லாமல் இருந்தால் உடனே மாத்திரை கொடுத்து உதவுவோம்.

  சாவித்திரி அம்மாவுக்கு கால் வலி என்றால், படப்பிடிப்பில் இருந்தால், என்னைதான் கூப்பிட்டு காலை அமுக்கிவிடச் சொல்வார்கள். குட்டி கால்கள் என்னுடையது என்பதால் அவருக்கு இதமாக இருக்கும். இப்படி நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாகப் பழகினோம். இது ஸ்டுடியோ என்று இருந்தாலும் சரி, வெளிபுறப் படப்பிடிப்பு என்றாலும் சரி, எல்லோரும் ஒன்றாகத்தான் இருப்போம். நாங்கள் எல்லோரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம். சிரித்து, அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் அக்கா, அத்தை, மாமி, அண்ணா, தங்கை, என எல்லோரும் எப்படி இருப்பார்களோ, அப்படி அன்று பழகினோம். இதற்கு முதல் காரணம் எங்களுக்குப் படப்பிடிப்பு என்றாலே தொழிலுடன், பக்தியும் கலந்துவிடும். வேலையையும் செய்வோம், அதேசமயம் மற்றவர்களுக்கு உதவுவதில் முதல் ஆளாக இருப்போம்.

  எங்களைப் பொறுத்தவரை ‘ஆளுக்கொரு வீடு’ படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. அதாவது, ‘செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் திறமைதான் நமது செல்வம். கையும் காலும்தான் உதவி, கொண்ட கடமைதான் நமக்குப் பதவி’. இந்தப் பாடல் வரிகள்தான் எங்கள் எல்லோருக்கும் பாடமாக அன்றும் இன்றும் என்றும் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. இப்படிச் சிறுமியாக நடித்த பின்னர், அதே சாவித்திரி அம்மாவுடன் பெரியவளாகவும் நான் பல படங்களில் நான் நடித்தேன். நான் கதாநாயகியாக நடித்த முதல் படத்தைப் பார்த்துவிட்டு அவர் என்ன சொன்னார் தெரியுமா? அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

  (தொடரும்)

  சந்திப்பு: சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai