41. குடிநலன் குறைந்தால்..

மக்களிடம் இருந்து வரி வசூல் விஷயத்தில் அரசு சற்று கவனம் செலுத்தி குறைவாக வரி வசூலித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.
41. குடிநலன் குறைந்தால்..
Published on
Updated on
1 min read

நாட்டில் சில சமயங்களில் குழப்பங்கள் நிகழ்வது வழக்கம். அந்தச் சமயங்களில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதாவது, பெரும்பாலான மக்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு வருவாய்க் குறைபாடு ஏற்படும். அப்போது, மக்களிடம் இருந்து வரி வசூல் விஷயத்தில் அரசு சற்று கவனம் செலுத்தி குறைவாக வரி வசூலித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும். ஏற்கெனவே வருவாய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வழக்கமான வரி வசூல் செய்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசுக்கு அதிகாரிகள் எடுத்துச் சொல்லி மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க உதவுவார்கள். இதற்கான சாட்சியம், வரலாற்றின் வண்ணங்களில் காணப்படுகிறது.

ஆறகளூரில் உள்ள திருக்காமீசுவரமுடைய நாயனார் திருக்கோயிலில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு தியாகண நாயக்கர் என்னும் பகுதி தலைவன் நாட்டாருக்கு செய்து கொடுத்த உடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. நாட்டில் நிகழ்ந்த பல்வேறு இடையூறுகளால் குடிகளின் நலன் குலைந்தமையால் தியாகண நாயக்கர் புதிய அடைவோலை அதாவது வரிகளை வசூலிக்கும் முறைகளை மீண்டும் நிர்ணயித்து வரிச்சுமை சுமத்தாது செய்து காப்பதாக செய்த உறுதிமொழி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.

தியாகண நாயகர் மகதை மண்டல நாட்டவற்கு கல்வெட்டி குடுத்தபடி மகதை மண்டலம் பல உபதுரோகத்தாலும் குடிக்குலைந்து என்று நாட்டார்கள் சொன்னபடியாலே இந்த மண்டலத்துக்கு நாளாவது முதல் நாம் குடுத்த அடைஓலை படி ஒழந்து அடந்தேற்றம் கொள்ளக்கடவது அல்ல ஒருகுடி சேதம் பண்ணக்கடவோம் அல்ல அன்னியாயம் அடந்தேற்றம் பண்ணாமல் நியாயமான மரியாதி கொள்ளுற..

என்பவை கல்வெட்டு வரிகள்.

மகதை மண்டலத்தில் பல்வேறு உபதிரவங்களால் குடி குலையும் அளவிற்கு வந்தமையால் அற்றை நாள் முதல் வரிகளை அநியாயமாக கொள்ளாமல் ஒருகுடியும் சேதமுறாமல் பார்க்கும்படி தலைவன் செய்த ஆணை பதிவாகியுள்ளது.

ஆக, குடி நலிந்தபோது வரிவகைகளை மீட்டமைத்து அந்தப் பகுதி மட்டும் வாழும் வண்ணம் வசதிகளைச் செய்து கொடுக்கும் அரசாங்கமே மீச்சிறந்த அரசாகும். ஆகவே இத்தகைய முறையில் ஆட்சி செய்தால் மட்டுமே அரசின் நடவடிக்கை குடிமக்களைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றால் மிகையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com