சுடச்சுட

  

  24. நிலத்தை அடகு வைத்த ஏழைகளின் நலன் காக்க..

  By முனைவர் க. சங்கரநாராயணன்  |   Published on : 09th April 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  temple24

   

  காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். விவசாயிகளின் வாழ்வுத் துயரம் சொல்லி முடியாது. விளைந்தாலும் விளையாவிட்டாலும் ஏற்படும் செலவுகளால் நொந்துகொள்ளும் விவசாயிகளே அதிகம். பண்டைக் காலத்திலும் இந்த நிலை ஏற்படாமல் இல்லை.

  கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகில் உள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில் பூதலிங்க சுவாமியின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கல்வெட்டு ஒன்று, அப்போது நிலவிய சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது பொ.நூ. 1658-ல் நிகழ்ந்த நிகழ்வாகும். பூதப்பாண்டீச்வரமுடைய நாயனாரின் கோயிலில், அதாவது பூதலிங்க சுவாமியின் கோயிலில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ஒற்றி வைத்தனர். அதாவது, அடகு வைத்திருந்தனர். சிலர், மேல்வாரத்தை மட்டும் ஒற்றி வைத்திருந்தனர். அப்போது அவர்கள் தங்கள் இயலாமை காரணமாக, தாங்கள் ஒற்றி வைத்ததில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோயில் அதிகாரிகளை மறித்துக் கேட்டனர்.

  அப்போது அதிகாரிகள், அரசனாக இருந்த சிறைவாய் மூத்தவரான இரவிவர்மன் என்னும் அரசனிடம் சென்று கூறினர். அப்போது அரசன் இறைவனைத் தொழவந்து வீற்றிருந்தான். விவசாயிகளின் நிலத்தை மீட்டளித்தால் கோயிலுக்கு நேரும் குறைவு என்ன என்பதை கோயில் அதிகாரிகளிடம் அரசன் கேட்டறிந்தான். அப்போது அதிகாரிகள், அவற்றை மீட்டளிப்பதால் நேரும் சேதத்தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட மன்னவன் ஒரு முடிவெடுத்தான். ஒற்றி வைத்ததை மீட்கக் கேட்பவர்களில் யார் யாருக்கு மிகவும் அவசியம், அதாவது அதற்கான உண்மையான தேவை உடையவர்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களுடைய நிலத்தை மட்டும் திருப்பி அளிக்க ஆணை பிறப்பித்தான். இதற்கான ஆணையைப் பிறப்பித்து அதைக் கல்வெட்டாகவும் செப்பேடாகவும் பதிக்கவும் ஆணையிட்டான். இதற்கான கல்வெட்டுதான் அந்தக் கோயிலில் அமைந்துள்ளது.

  பூதப்பாண்டியில் தம்பிரானாரை திங்கள் வசனஞ்சேவிக்க நயினார் இரவிவன்மராய சிறைவாய் மூத்த தம்பிரான் எழுந்தருளிப் புதிய கோயிக்கலில் இருந்தருளிய இடத்தில் தம்பிரானார் சீபண்டாரக் காரியஞ் செய்யிற தானத்தாரும் பிள்ளைமாரும் கூடிச் சென்று தம்பிரானார் சீபண்டாரத்துக்கு கொண்ட ஒற்றி நிலங்களும் மேல்வாரங்களும் மீட்சை குடுக்கும்போது உள்ள சேதத்தை திருமுன்னே விண்ணப்பஞ் செய்ததின் பிறகு காரியஞ் செய்யிற பேர்கள் கூடவும் தமுதாரிச்சு நம்முடைய கருவுகாத்தில் நின்றும் ஆவச்யமுண்டாய் வைச்ச ஒற்றி மீளிந்நதல்லாதே மற்றுள்ள பேர்கள் வச்ச ஒற்றி மீச்சை கொடுக்கரது என்று திருவுள்ளம் பற்றி கற்பிக்கவுஞ் செய்து..

  - இதுதான் கல்வெட்டு வரிகள்.

  விவசாயிகளின் துயரை உணர்ந்து அவற்றை மீட்டளித்ததோடு மட்டுமின்றி அதனால் ஏற்படும் இழப்பையும் கேட்டு, அதிலும் தகுதியும் தேவையும் உள்ளவர்களின் நிலங்களைத் திருப்பி அளிக்க உத்தரவிட்ட அரசனின் திறமை போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது. இத்தகைய திறம்கொண்டு ஆளும் மன்னவனுக்குத்தான் மீக்கூறும் மன்னன் நிலம் என்று வள்ளுவப்பெருந்தகை கூறியதைப்போல புகழ் கிடைக்கும் என்பதை வரலாற்றின் வண்ணமொன்று காட்டி நிற்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai