Enable Javscript for better performance
13. தலைவர்கள் இறந்துபட்டால்..- Dinamani

சுடச்சுட

  
  Rajendra-Cholan

   

  பொதுவாக, தலைவர் என்று வந்துவிட்டாலே தொண்டர்களின் இதயத்தில் தனியிடம்தான். அதென்னவோ நமது நாட்டில் தலைவர்களை உயிருக்கும் மேலாக மதித்து அவர்களுக்காகவே வாழ்வது என்பது ஒரு மரபாகவே ஆகிவிட்டது. தலைவர்கள் இறந்துபட்டால் சோகத்தை வெளிக்காட்டுகிறேன் என்று பொதுச்சொத்துகளைச் சேதம் செய்வதும் வன்முறைகளில் ஈடுபடுவதும் எழுதாத விதியாகிவிட்டது. ஆனால், வரலாற்றில் அரசர்களே இறந்துபட்டாலும் அதற்காகத் தொடர்புடையோர் அவர்களுக்கு நன்மைவேண்டி அறச்செயல்களில் ஈடுபட்ட செய்தி பழைய வழக்கத்தைக் காட்டிநிற்கிறது.

  அரசர்கள் இறந்துபட்டால் அவர்களுடைய ஆன்ம சாந்திக்காக பல்வேறு நீர்நிலைகளையும் எடுப்பித்தனர். அரசனது குடும்பத்தினரும் அதிகாரிகளும் இத்தகைய நீர்நிலைகளை எடுப்பித்தனர். இதனை ஸ்ரீமதாஹத்துக்காக என்று சாசனங்கள் கூறுகின்றன. திருச்செங்கோட்டில் கிடைத்த சோழர் காலத்திய ஒரு செப்பேடு, இராசகேசரிவர்மனின் ஆட்சியாண்டைக் குறிப்பது. இந்த இராசகேசரி, சுந்தர சோழனென்றும் இராசராசனென்றும் இருவேறு கருத்துகள் உள. இந்தச் செப்பேடு, கொல்லிமழவன் ஈழத்துப்பட்டதனால் ஆன்ம சாந்திக்காக நீர்நிலை எடுப்பித்ததைக் குறிப்பிடுகிறது. தந்தைக்காக மகன் எடுப்பித்த நீர்நிலை அது. இதைக் குறிப்பிடும் செப்பேடு பின்வருமாறு கூறுகிறது.

  கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழனேன் எங்களாச்சர் ஈழத்துப்பட அவர் ஸ்ரீமதாகஹத்துக்கு சிறுபாடு கல்லொடு குழிக்குத் தென்மேற்கு தூசியூர் திருக்கற்றளி பரமேஸ்வரருக்கு செய்து குடுத்தேன் பிரதிகண்டன் சுந்தர சோழனேன்.

  இவ்விதம் செப்பேடு கூறுகிறது.

  இதனைப் போலவே, உடையார்குடி கல்வெட்டு மிகவும் புகழ்பெற்றது. ஆதித்த கரிகாலனைக் கொன்றதாகக் கருதப்பெறும் அந்தணர்களைப் பற்றிய தகவல்களைத் தருவது. இந்தக் கல்வெட்டு அந்த அந்தணர்களின் நிலத்தை, நக்கன் அரவணையானான பல்லவ முத்தரையரின் மகனான பரதன் வியாளிகஜமல்லப் பல்லவரையன் என்பவர் விலைக்கு வாங்கி தண்ணீரட்டும் அந்தணருக்குத் தானமாக வழங்கிய செய்தியைத் தருகிறது. இது ஆதித்த கரிகாலனின் ஆன்ம சாந்திக்காக ஆகலாம்.

  பரதனான வியாழ கஜமல்லப் பல்லவரையனேன் இந்நிலமும் இம்மனையும் நூற்றொருபத்திரு கழஞ்சு பொன்குடுத்து விலை கொண்டு இவ்வூர் திருவனந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயிலிலே இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை பெற்ற பூரட்டாதி ஞான்று சந்திராதித்தவர் ஆழ்வார் முன்பு மூவாயிரத்து அறுநூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீர் அட்டும் பிராமணன் ஒருவனுக்கு நிசதம் படி நாழி நெல்லும் ஆட்டை வட்டம் ஒரு காசும், நிசதம் மதினைவர் பிராமணர் உண்பதற்கும், ஆக பதினாறு இவறுள் ஐவர் சிவயோகிகள் உண்ணவும் வைத்தேன்..

  என்பது கல்வெட்டு வரிகள்.

  முதலாம் இராசேந்திர சோழனின் வசிட்டபுரத்துக் கல்வெட்டு, சோழகேரள தேவருக்கு ஸ்ரீமதாஹத்துக்காக உணவுச்சாலையை அமைத்த விதத்தைக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்பெற்ற சோழகேரளன் இளவரசனாக இருந்திருத்தல் வேண்டும். இப்படி இளவரசருக்காக அரசனான இராசேந்திரன் அளித்த உணவுச்சாலையையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

  முதலாம் இராசாதிராசனின் பிரம்மதேச கல்வெட்டு, முதலாம் இராசேந்திர சோழன் இறந்து வீரமாதேவியும் உடன்கட்டை ஏறிய செய்தியைத் தருவது. இந்தக் கல்வெட்டு, மதுராந்தகனான பரகேசரிவேளான் என்னும் பெயருடைய வீரமாதேவியின் உடன்பிறந்தான் ஸ்ரீமதாத்துக்காக நீர்நிலை எடுப்பித்த செய்தியைத் தருகிறது. இந்தக் கல்வெட்டை வைத்துத்தான் அந்தக் கோயிலே பள்ளிப்படை என்னும் பொருளில் பல்வேறு பொருந்தாக் கருத்துகள் உலவுகின்றன.

  ஆக, தலைவர்கள் இறந்துபட்டால் அதற்காகப் பொதுச்சொத்தைச் சேதம் செய்யாமல், ஊருக்கும் தனக்கும் புகழ்சேர்க்கும் வகையில் பொதுப்பணிகளைச் செய்து வந்திருப்பது தெளிவாகிறது. உலகுக்கும் பயன் சேர்க்க வேண்டும்; உற்றோருக்கும் ஆன்மசாந்தி நிலைக்க வேண்டும்; தனக்கும் புகழ் நேர வேண்டும் என்று மக்களும் மன்னர் குலமும் இயங்கி வந்திருப்பது புலனாகிறது.

  இப்போதும் தலைவர்கள் மறைந்தால், அவர்கள் நினைவாகப் பல்வேறு அறப்பணிகளில் ஈடுபட்டால், அவர்களுக்கும் நன்மை; உலகுக்கும் நன்மை. செய்வார்களா..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai