சுடச்சுட

  
  tirumalai_nayakkar

   

  முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. மக்களின் குறைகளை அறிந்து உடனுக்குடன் தீர்த்துவைக்கும் மன்னவன் மக்களுக்கு இறைவனாகவே தெரிவான் என்பது இப்போதைய அரசியலிலும் இதனைப் போலவே காப்பாற்றும் தலைவர்களைக் கடவுளாகவே பார்க்கும் நிலையைக் காணலாம். இத்தகைய நிகழ்வுகள் வரலாற்றின் பக்கங்களிலும் உண்டு.

  திருமலைநாயக்கர், மதுரை நாயக்கர்களில் சிறப்பான இடத்தைப் பெற்றவர். அவருடைய காலத்தில் நிகழ்ந்த ஒரு செய்தி அவருடைய செப்பேட்டில் பதிவாகியிருக்கிறது. அவர் திருவில்லிப்புத்தூரிலுள்ள ஆண்டாளைக் காணச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள குலையப்பாறை என்னுமிடத்தில் ஒரு பெண் தலைவிரி கோலமாக பெருத்த குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். அதைப் பார்த்த நாயக்கர் தனது அரசில் இப்படி ஒரு அவலமா என்று அங்கிருந்த சீரங்கநாயக்கர் என்னும் பாளையக்காரரைக் கேட்டார். அவர் அந்தப் பெண்ணை விசாரித்து காரணம் கேட்க, அவளுடைய கணவனை ஒரு புலி கொன்றதைத் தெரிவித்தார். மேலும் இத்தகைய கொடுமை நிகழாவண்ணம் தடுப்பதற்காக நாயக்கர் வெற்றிலைபாக்கை வைத்து இந்தப் புலியைக் கொல்ல வருபவர்களை அழைத்தார். அப்போது மூவரையத் தேவன் என்பான் முன்வந்து உறவினர்களோடும் சேர்ந்து புலியைக் கொன்றான். அவனுக்குத் திருமலை மூவரைய தேவன் என்ற பட்டத்தையும் அளித்துப் போற்றி நிலக்கொடை அளித்தார். இதற்கான ஆவணமாக இந்தச் செப்பேடு வழங்கப்பெற்றிருக்கிறது.

  பெண்சாதி பிள்ளைகளும் தலைவிரிகோலமாக அளுது அபையம் போட்டுப் போரது ராசா காதிலே அபையக்குரல் கேட்டு திடுக்க முளித்து நாமும் வந்திருக்க இந்த அநியாய்யம் வேறேயின்னம் உண்டோவென்று கோவாக்கினி தலை மண்டை கொண்டு வெள்ளிக்குறிச்சி சீமை கற்த்தராகிய சீரங்கனாக்கரை வரவழைத்து அளுகுரதென்ன வென்று கேள்க்கும் படிக்கு உத்தறவு அவற் பதறி அளுகையமத்தி றாசா உத்தாரமாகுது என்று கேள்க்க..

  சீரங்கநாயக்கன் ஆணையின் பேரில் எழுந்தருளினாற் ரதகெசதுரக பதாதி சேனையும் குவலையப்பாரை பருவதத்தை துப்பாக்கி மனைமளைமாரி பொளிந்து வரும்போது...

  திருமலையிந்த ஏளுபேரையும் திருக்கரத்தினாலே அணைத்து உச்சி முகந்து திருமலைமூவராயரென்று மூணுதரம் நாமகிரணம் ராசா உத்தாரமாச்சிது.

  இவை செப்பேட்டு வரிகள்.

  செல்லும் வழியில் அழுதுகொண்டிருந்த பெண்ணைக் காரணம் கேட்டு அவ்வூர் பாளையக்காரரை அழைத்துகேட்டு புலிதான் காரணம் என்று தெரிந்து அதைக் கொல்ல உடனடியாக ஏற்பாடு செய்து, கொன்றவருக்கும் நிலக்கொடையும் அளித்து உடனடியாக ஏற்பாடு செய்தார் திருமலை நாயக்கர்.

  புலியைக் கொல்லாது பிடிக்கும் இந்நாளைய நுட்பங்கள் இல்லாமையால் அன்றைய முறைப்படி நிகழ்த்திக் காட்டினார். ஆக ஆள்வோருக்கான தகுதி உடனடியாக மக்களின் குறைகளைக் கண்ட மாத்திரத்தில் தீர்ப்பதற்கான செயலில் இறங்குவதே என்பதுதான் வரலாற்றின் இந்த வண்ணம் கூறும் தகவல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai