Enable Javscript for better performance
122. மூன்று மாதங்கள்- Dinamani

சுடச்சுட

  

   

  அந்தப் பெண் துறவி மறுநாள் காலை குகையை விட்டுப் புறப்பட்டாள். முந்தைய இரவு அடித்த பனிப்புயலும் பேய்க்காற்றும் எங்கு போயின என்றே தெரியாத அளவுக்கு பர்வதம் தியானத்தில் ஆழ்ந்திருந்தாற்போல இருந்தது. கிளம்பும்போது, சாஜிதா அவளுக்குப் பத்து ரொட்டிகள் சுட்டுக் கொடுத்து அன்போடு அனுப்பிவைத்தாள்.

  ‘இது வேண்டாமே. நான் ஒரு துறவி. அடுத்த வேளைக்கு உணவைச் சுமந்து செல்லக் கூடாது’.

  ‘வழியில் யாராவது பசிக்கிறது என்றால் அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று அந்தப் பெண் சொன்னாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளம் யோகி வெறுமனே சிரித்துக்கொண்டே நின்றார்.

  அந்தப் பெண் துறவி விடைபெற்றுச் சென்ற ஒரு வார காலத்தில் மீண்டும் அந்த யோகியைச் சந்திக்கும்படி நேர்ந்தது. அதே இமயம். அதே காஷ்மீரப் பகுதி. ஆனால் இது வேறு இடம். வேறு குகை. இம்முறை பெண் துறவியை சாஜிதாதான் முதலில் பார்த்தாள். பார்த்ததும் புன்னகை செய்து, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள். பெண் துறவி புன்னகை செய்தாள். ‘உன் குருநாதர் எப்படி இருக்கிறார்?’

  ‘குருநாதரா? அப்படி என்றால்?’

  பெண் துறவி அதற்குப் பதில் சொல்லவில்லை. சட்டென்று தன் பையில் கைவிட்டு ஒரு பொட்டலத்தை எடுத்தாள். சாஜிதா ஒரு வாரம் முன்னர் கட்டிக் கொடுத்து அனுப்பிய ரொட்டிகளில் சில மிச்சம் இருந்தது. அதை அவளிடமே கொடுத்து, ‘எனக்கு இது செலவாகவில்லை. நீயே வைத்துக்கொள்’ என்று சொன்னாள்.

  சாஜிதா மறுக்கவில்லை. அதை வாங்கி வைத்துக்கொண்டு, ‘நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டாள்.

  ‘எனக்கெல்லாம் செய்வதற்கு என்ன இருக்கிறது? வெறுமனே சுற்றிக்கொண்டிருக்கிறேன்’.

  ‘நீங்கள் அவரைப்போல ஒரு யோகியா?’'

  ‘அவரளவு முன்னேறியவள் இல்லை. ஆனாலும் அந்த வழியில் செல்பவள்தான்’.

  ‘உங்களை ஒன்று கேட்டால் தவறாக நினைக்காமல் இருப்பீர்களா?’

  ‘கேள் சாஜிதா’.

  'ஒரு பெண் யோகியை நான் சந்திப்பது இது முதல்முறை. உங்கள் வீட்டார் உங்களை எப்படி வெளியே அனுப்பினார்கள்? சொல்லாமல் ஓடிவந்துவிட்டீர்களா?’

  பெண் துறவிக்குச் சிரிப்பு வந்தது. ‘அது அவ்வளவு முக்கியமா?’

  ‘எனக்கு முக்கியம்’ என்று அந்தப் பெண் சொன்னாள். ‘ஹிந்து மதத்தில் நிறையப் பெண் சன்னியாசிகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை’.

  ‘இஸ்லாத்திலும் உண்டே? அஜ்மீரில் நானே ஒரு பெண் சூஃபி சன்னியாசியைச் சந்தித்திருக்கிறேன்’.

  அந்தப் பெண் உடனே, ‘சூஃபிகளில் உண்டு. இஸ்லாத்தில் இல்லை’ என்றாள். அந்தப் பெண் துறவி அடக்கமாட்டாமல் விழுந்து விழுந்து சிரித்தாள். இவளை வைத்துக்கொண்டு அந்த இளம் யோகி எப்படி சமாளித்துக்கொண்டிருக்கிறார் என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. இதை அவளிடம் வேறு விதமாக வெளிப்படுத்தியபோது, ‘அவர் அன்பே வடிவானவர். என்னை என் ஊருக்கு அழைத்துச் சென்று சேர்க்கும் பொறுப்பை ஏற்றதில் இருந்து என்னைக் கவனித்துக்கொள்வதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறார். ஒன்று தெரியுமா? என் பெற்றோர்கூட என்னிடம் அவ்வளவு அன்பு செலுத்தியதில்லை’.

  ‘அப்படியா? மிகவும் நல்லது. அவர் இங்கேதான் இப்போது இருக்கிறாரா?’

  ‘ஆம். நான்கு நாள்களாக இந்தக் குகையில்தான் வசிக்கிறோம். இது அவரது நண்பர் ஒருவரின் இருப்பிடம் என்று சொன்னார்’.

  ‘ஓ. அந்த நண்பரும் இங்கே இருக்கிறாரா?’

  ‘இல்லை. அவர் இவரிடம் குகையை ஒப்படைத்துவிட்டு சுற்றுப்பயணம் கிளம்பிச் சென்றுவிட்டார்’.

  ‘நல்லது சாஜிதா. அவர் உள்ளே இருந்தால் நான் வந்திருக்கிறேன் என்று சொல். வணங்கிவிட்டுச் செல்கிறேன்’.

  ‘அவர் சாதகத்துக்குச் சென்றிருக்கிறார். திரும்பி வர இன்னும் சிறிது நேரமாகும். நீங்கள் உள்ளே வந்து தங்கலாமே?’

  பெண் துறவி யோசித்தாள். அது அத்தனை அவசியமா என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. இருப்பினும், சாஜிதா மிகவும் வற்புறுத்தியதால் அந்தக் குகைக்குள் சென்றாள். முதலில் பார்த்த குகையைக் காட்டிலும் இது சிறியது. தவிர பாறை இடுக்குகளில் ஓட்டைகள் அதிகம் தென்பட்டன. இரவுப் பொழுதுகளில் குளிர் இங்கு அதிகம் இருக்கும் என்று தோன்றியது. அந்தப் பெண் ஓடிச்சென்று ஒரு பாயை எடுத்துவந்து விரித்து, உட்காரச் சொன்னாள். பிறகு ஒரு துணி மூட்டையை எடுத்துவந்து அவிழ்த்து, ‘இதெல்லாம் எனக்கு அவர் வாங்கி வந்து கொடுத்தார்’ என்று காட்டினாள். உள்ளே நான்கு சல்வார் கம்மீஸ்களும் ஒரு பர்தாவும் இருந்தன. எல்லாமே புதிய துணிகள்.

  ‘அவர் வாங்கிவந்து கொடுத்தாரா? எங்கே போய் வாங்கிவந்தார்?’

  ‘அது தெரியவில்லை. அவர் சொல்லவில்லை. ஆனால் நான் மாற்று உடை இல்லாமல் கஷ்டப்படுவதைக் கண்டு நேற்றுத்தான் இந்தப் புதிய துணிகளை வாங்கிவந்தார். நன்றாக இருக்கிறதா?’

  அந்தப் பெண் துறவிக்கு வியப்பாக இருந்தது. எழுபத்து இரண்டு தினங்கள் யோக சாதனைக்காக காஷ்மீரத்துக்கு வந்ததாக அந்த இளம் யோகி சொல்லியிருந்தார். சாதனை தினங்களில் இதெல்லாம் சாத்தியமா? அவளுக்குப் புரியவில்லை. இதைக் கேட்டறிந்துகொள்வதற்காகவேனும் அவர் வரும்வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தாள்.

  யோகி குகைக்குத் திரும்ப வெகுநேரமானது. வந்ததும் அந்தப் பெண் துறவியைக் கண்டு புன்னகை செய்தார். ‘வாருங்கள்’ என்று சொன்னார்.

  பெண் துறவி அவருக்கு வணக்கம் சொல்லி சம்பிரதாயமாகச் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு அதைக் கேட்டாள். ‘இந்தப் பொறுப்பு உங்களை அலைக்கழிப்பதில்லையா?’

  அவர் சிரித்தார். ‘யோகினீ! நான் ஒரு யோக சாதனையைக் குறிக்கோளாக வைத்துத்தான் இங்கே வந்தேன். இந்த இடமும் சூழலும் அதற்குப் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பெண் பாவம் அல்லவா? இவளுக்கு இங்கு யாருமில்லை. சமவெளிப் பகுதிக்குள் செல்லவே முடியவில்லை. விடாமல் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள். இந்தச் சூழ்நிலையில் இவளைப் பராமரிக்க வேண்டியது எனக்குக் கட்டாயமாகிவிட்டது’.

  ‘பெரிய இழப்பு உங்களுக்கு’.

  அவர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு சொன்னார், ‘ஆம். இழப்புத்தான். என் சக்தியில் கால்வாசியை நான் இழந்துவிட்டேன். திரும்பப் பெற ஓராண்டு வரைகூட ஆகலாம்’.

  ‘ஐயோ!’ என்றாள் அந்தப் பெண் துறவி.

  ‘ஆனால் பிறகு யோசித்தேன். ஆதரவற்ற இவளுக்கு உதவி செய்வதே எனது இந்தத் தவத்தின் நோக்கமாக ஏன் இருக்கக் கூடாது? எங்கள் ஊர்க் கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார். அன்பிற் சிறந்த தவமில்லை’.

  அந்தப் பெண் துறவி, வினோத்துக்கு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபோது, ‘மன்னித்துவிடுங்கள் அம்மா. நீங்கள் சொன்ன கதையின் தன்மை வேறு. என் பிரச்னையின் பரிமாணம் வேறு. நான் காதலில் சிக்கியவன். அன்பல்ல அதன் ஆதாரப் புள்ளி. காதல். காமத்தில் தோய்த்தது’.

  பெண் துறவி சிரித்துக்கொண்டே சொன்னாள், ‘உனக்குத் தெரியுமா? அந்தப் பெண் சாஜிதாவுக்கு ஒருநாள் குளிர்க்காய்ச்சல் வந்துவிட்டது. உடம்பெல்லாம் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது. வேறு வழியின்றி, அந்த யோகி அவள் உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டுத்தான் அதை அடக்கவேண்டி இருந்தது’.

  ‘ஐயோ!’

  ‘மருத்துவமாகச் செய்ததுதான். ஆனால் அன்று அத்தவறு அங்கே நிகழ்ந்தேவிட்டது என்று அவரே என்னிடம் சொன்னார்’.

  அண்ணாவா, அண்ணாவா என்று வினோத் மனத்துக்குள் கூக்குரலிட்டான். அவனால் அதை நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டான்.

  ‘நடந்ததை விடு மகனே. நடந்ததை எண்ணி அவர் சிறிதும் குற்ற உணர்ச்சி கொள்ளவில்லை என்பதுதான் நான் சொல்ல வந்தது’.

  ‘அது எப்படி முடியும்?’

  ‘அதைத்தான் அவர் சொன்னார். ஒரு பெண்ணின் மீது காட்டும் நேசத்துக்கு நிகரான ஆன்மிகம் வேறில்லை’.

  வினோத் பேச்சற்றுப் போனான். அதன்பின் மூன்று மாத காலம் அந்த இளம் யோகியும் அந்த முஸ்லிம் பெண் சாஜிதாவும் காதல் ஜோடிகளைப்போல இமயத்தின் சரிவுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார்கள். ஒருநாள் அந்தப் பெண்ணுக்கே ஏதோ தோன்றி, ‘போதும், என்னைக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள்’ என்று கேட்டிருக்கிறாள். யோகி மறுசிந்தனையே இல்லாமல் அவளை முசஃபராபாத் வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு நேரே காசிக்குப் போனார். கங்கையில் குளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிக் கால் போன போக்கில் எங்கெங்கோ சுற்றித் திரிந்தார். இறுதியில் அருணாசல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் கரையில் ஒரு வனத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். மூன்று மாதங்களில் இழந்ததைப் பதினொரு வருடங்களில் திரும்பப் பெற்றார் என்று அந்தப் பெண் சன்னியாசி சொன்னாள்.

  வினோத் வாயடைத்துப் போயிருந்தான். நெடுநேரம் அவன் தன்னுணர்வு எய்தவேயில்லை. அவன் மீளும்வரை அந்தப் பெண் காத்திருந்தாள். பிறகு, ‘சிவன் உனக்கு ஏற்றவன் இல்லை மகனே. இறையின் அந்த வடிவத்தை அணுகுவதும் ஆராதிப்பதும் தியானிப்பதும் அதன்மூலம் பலன் பெறுவதும் பெரும் சாதனை. கஷ்டங்கள் நிறைந்த பாதை அது. எளிய மனங்களுக்கு ஏற்றவன் கிருஷ்ணன்தான். இதை உன் அண்ணன் உன்னிடம் சொல்லச் சொன்னான்’ என்று சொன்னாள்.

  வினோத் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். வெகு நேரம் கழித்து, கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்தான். ‘ஒரு வினாவுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். நான் கண்ட ஒளி சத்தியம். அது என்னை சிவன் கோயிலுக்கு இட்டுச் சென்றது சத்தியம். அங்கிருந்து நான் திருவண்ணாமலைக்கு வந்தது சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்தது. இதெல்லாம் எதனால் நடந்தது?’

  அவள் புன்னகை செய்தாள். ‘என்ன சொன்னால் நீ திருப்தியடைவாய்? நீ படிக்காத உன் மனத்தின் மறுபக்கம்தான் காரணம் என்று சொன்னால் உனக்குப் புரியுமா?’

  ‘என் மனமா?’

  ‘ஆம். அதுதான். அதன் ஊசலாட்டம்தான் ஒளியின் வடிவில் உன்னை அலைக்கழித்தது’.

  ‘அப்படியானால், நான் கண்ட ஒளி என் கிருஷ்ணன் இல்லையா?’

  அவள் அன்போடு நெருங்கி அவன் கன்னத்தை வருடினாள். ‘வளர்ந்துவிட்டாலும் நீ குழந்தை. ஒன்று புரிந்துகொள். கிருஷ்ணன் என்பது ஓர் உருவமல்ல. நபரல்ல. தெய்வமும் அல்ல. அது ஒரு தத்துவம். சாமானியர்களின் தத்துவம்’.

  ‘அந்த விதத்தில் சிவமும் அதுதானே?’

  ‘ஆனால் சிடுக்குகளை விரும்பாத மனத்துக்குக் கிருஷ்ணனே சரி. சிவனை அண்டுவதற்கு சவமாவது தவிர வேறு வழியில்லை. நான் மரணத்தைச் சொல்லவில்லை என்பது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்’.

  வினோத் அந்த யோகினியின் பாதம் பணிந்து எழுந்தான். கண்ணைத் துடைத்துக்கொண்டான்.

  ‘கிளம்பிவிட்டாயா?’

  ‘ஆம் தாயே’.

  ‘நல்லது. எங்கே போக நினைக்கிறாய்?’

  ‘எங்கே போனால் எனக்குச் சரி?’

  ‘மாயாபூருக்குப் போ’ என்று அவள் சொன்னாள்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai