முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கூடுவாஞ்சேரி அருகே இளைஞர் வெட்டிக் கொலை

கூடுவாஞ்சேரியை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளைக் கைது

Updated On :2 மே 2013, 12:57 pm IST

கூடுவாஞ்சேரியை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபடடனர்.

 இது குறித்துப் போலீஸார் தரப்பில் தெரிவித்தது:

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூரைச் சேர்ந்தவர் சுந்தர் மகன் சுபாஷ்(19). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். அவரது நண்பர் அய்யாவு மகன் கலைவாணன்(18). இவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக காயரம்பேடு சென்று விட்டு மொபெட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 அப்போது  அவர்களை மொபெட் மற்றும் காரில் சிலர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த இருவரும் கன்னிவாக்கம் அண்ணாநகர் ரெட்டைமலை சீனுவாசன் தெருவில் மொபெட்டைக் கீழே போட்டு விட்டு தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுக் கொண்டே ஓடியுள்ளனர்.

இதற்கிடையே கலைவாணன் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால், வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு சுபாஷை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சுபாஷ் அதே இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிமாறன், மற்றும் போலீஸார் சென்று சுபாஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், கலைவாணனிடம் போலீஸார் விசாரித்ததில், உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பல் தான் சுபாஷைக் கொலை செய்திருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பெருமாட்டு நல்லூரில் வசிக்கும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சத்யா வீட்டை செவ்வாய்க்கிழமை இரவு சிலர் உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் புதன்கிழமை பிரபு என்பவரின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த துணிகளையும் தீ எரித்தனர். இதனால் வீடும் தீப்பிடித்துக் கொண்டது. தகவல் அறிந்த மறைமலை நகர் தீயணைப்புப்படை வீரர்கள் வந்து மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்: இதனிடையே, கொலையாளிகளை பிடிக்கக் கோரி சுபாஷின் உறவினர்கள், பொதுமக்கள் புதன்கிழமை காலை கருப்பு பேட்ஜ் அணிந்து, சுபாஷ் உடலுடன் வந்த ஆம்புலன்ஸை வழியில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.