கண்டது
(பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே கடை ஒன்றில் கண்ட வாசகம்)
'உலகத்தில் சிறந்த ஜோடி செருப்புதான். ஒன்றைப் பிரிந்தால் மற்றொன்னு வாழாது!'
-க.சரவணகுமார், திருநெல்வேலி.
(குன்றத்தூரில் ஆட்டோ ஒன்றில் நான் கண்ட வாசகம்)
'வெட்டிய மரம் துளிர்த்துவிடும்...
உடைந்த மனம் ஒட்டுவது சிரமம்!'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(கரூரில் தனியார் அலுவலகத்தில் எழுதிவைத்திருந்த வாசகம்)
'வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக்கொள்...
உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்!'
-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
கேட்டது
(திண்டுக்கல் சூப்பர் மார்க்கெட்டில் இரண்டு ஆண்கள்)
'நீ எந்த தைரியத்துல பர்ûஸ கிச்சன்ல வைப்பேன்னு சொல்றே?'
'என் மனைவி அதிகமா புழங்காத இடம் அதுதான்!'
-வெ.கார்த்திகா, திண்டுக்கல்.
(தென்காசி மருத்துவமனையில் நோயாளியும், நர்ஸூம்)
'டாக்டர் இருக்கிறாரா?'
'ஒரு காரியமா பெங்களூரு போயிருக்கிறார்...'
'அவர் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவார்னு நினைச்சேன்... இப்போ காரியம்கூடப் பண்ண ஆரம்பிச்சிட்டாரா?'
-பே.சண்முகம், செங்கோட்டை.
(திருச்சி கடைவீதியில் இரு பெண்கள்)
'அட்சய திருதியை வருதே... என்ன வாங்கப்போறே?'
'வீட்டுல இருக்கிற பழசைப் போட்டுட்டு செலவுக்குப் பணம் வாங்கப்போறேன்!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
'மதிக்காத இடத்தில் மன்னிப்புக்கூட கேட்காதே...
மதிக்கும் இடத்தில் மண்டியிடக்கூட தயங்காதே!'
- க. பூமலை, நமசிவாயபுரம்.
மைக்ரோ கதை
கோயில் வாசலில் புத்தம் புது பைக் ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட வாசு, 'அட... அடிச்சது இன்னைக்கு ஜாக்பாட்!' என்று மனதுக்குள் நினைத்தவனாய் பைக்கை ஸ்டார்ட் செய்து சிட்டாகப் பறந்தான்.
திருட்டு பைக்கை வாங்குபவரிடம் அதை விற்றுவிட்டு குஷியோடு வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
ஹாலில் தேம்பி அழுதுகொண்டிருக்கும் மகனைப் பார்த்து, 'என்ன ஆச்சு, ராஜா?' என்றான்.
'அப்பா... வரப்போற என் பத்தொன்பதாவது பிறந்தநாளுக்காக, நான் ரொம்ப நாளா ஆசைப்பட்ட பைக்கை வாங்க, உங்களுக்கே தெரியாம அம்மா சேர்த்து வச்சிருந்த பணத்தைக் கொடுத்து ஏற்கெனவே பைக்கை புக் பண்ணியிருந்தாங்க.
'நான் காலையில புது பைக்கை வாங்கிக்கிட்டு பூஜை போட முனீஸ்வரன் கோயிலுக்குப் போனேன். அவசரத்துல வண்டியை லாக் பண்ணலை. திரும்பி வந்து பாத்தா அதைக் காணோம்...' என்று மீண்டும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.
அதிர்ச்சியடைந்த வாசு, குடும்பத்துக்கே தெரியாமல் இதுவரை பார்ட் டைமாகச் செய்துவந்த திருட்டுத் தொழிலைவிடத் தீர்மானித்தான்.
-சிவம், திருவள்ளூர்.
எஸ்.எம்.எஸ்.
சிலர் அதிபுத்திசாலி போலப் பேசும்போது...
நாம் முட்டாள்போல் இருப்பதுதான் நல்லது!
-த.பாலசுப்பிரமணியன், கோவை.
அப்படீங்களா!
வாட்ஸ்ஆப்பில் புதிய சேவையாக 'கார்பிளே அப்டேட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரை ஓட்டிக்கொண்டே மெசேஜைப் படிப்பதும், தொலைபேசி எண்களைத் தேடிப் பிடித்து அழைப்பதும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதும் ஆபத்தை உணராமல் பெரும்பாலான ஓட்டுநர்கள் செய்யும் செயல்.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வாட்ஸ்ஆப் 'கார்பிளே' வை புதிதாகத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் அறிதிறன் பேசியின் திரையை காரில் உள்ள விடியோ திரையில் இணைத்துப் பயன்படுத்தலாம்.
இதில், சமீபத்திய சாட்கள், படிக்காத தகவல்கள், அடிக்கடிப் பேசியவர்கள் ஆகியோரின் தகவல்கள் கார் விடியோ திரையில் வெளியாகும்.
தொலைபேசி அழைப்புகள், துண்டிக்கப்பட்ட அழைப்புகள் ஆகியவற்றையும் காரின் விடியோ திரையில் காணலாம்.
மேலும், கட்டளையிட்டு கைப்பேசியைத் தொடாமல் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது உள்படத் தேவையான பணியை மேற்கொள்ளவும் முடியும். ஆனால், கார் திரையில் எதையும் டைப் செய்து அனுப்ப முடியாது.
இந்தச் சேவையைப் பெற வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும். பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இந்தச் சேவை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.
அதிகமான சாலை விபத்துகள் நடைபெறும் இந்தியாவில் இந்தப் புதிய சேவை வாகன ஓட்டிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

