அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். பின்னர் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.