ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு

Updated on
1 min read

ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்பு

ஆம்பூர், ஜூன் 27 : ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேரை வருவாய் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமைகள் இருப்பதாக திருப்பத்தூர் சார்-ஆட்சியருக்கு புகார் செய்யப்பட்டிருந்தது.  அதன்பேரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செங்கல் சூளையில் சார்-ஆட்சியர் ஷில்பா பிரபாகர் விசாரணை நடத்தினார்.  விசாரணையில் 7 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் வெளியூரிலிருந்து வந்து முன்பணம் பெற்றுக் கொண்டு அங்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.  ஆனால் அதே நேரத்தில் செங்கல் சூளை உரிமையாளர் தங்களை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லையெனவும் விசாரணையின்போது தொழிலாளர்கள் கூறினார்களாம்.

சார்-ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆம்பூர் வட்டாட்சியர் கஸ்தூரி, கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் ஆகியோர் வியாழக்கிழமை செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த 14 பேரை மீட்டு அவர்களுடைய ஊருக்கு அனுப்பினர்.

மீட்கப்பட்டவர்கள் வாணியம்பாடி அருகே லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (53), கோவிந்தம்மாள் (51), மணி (49), அம்சா (47), நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (51), கமலா (49), கணேசன் (49), தேவகி (47), அனுமுத்துராயன் (53), அல்லிராணி (51), சாமு (47), லட்சுமி (45), நாச்சார்குப்பம் கிராமத்தை சேர்ந்த சம்பத் (47), சாலா (45).

சட்டப்படி ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமாக முன்பணமாக பெற்றுக் கொண்டு வேலை செய்தால் அது கொத்தடிமை முறை என்று சட்டப்படி கருதப்படுகிறது.    விண்ணமங்கலம் கிராமத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்கள் ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமான ரொக்கத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டு பணி புரிந்ததால் சார்-ஆட்சியரின் உத்தரவின் பேரில் அங்கு பணிபுரிந்த 14 பேரும் அங்கிருந்து மீட்டு விடுவிக்கப்பட்டதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com