சென்ற முறை தமிழகத்திற்கு கர்நாடகம் நீரை திறந்துவிடாததால் ஆய்விற்காக வந்த மத்தியக்குழுவும் கடலூர் மாவட்டத்தை பார்க்காமல் புறக்கணித்துவிட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் டெல்டா அல்லாத பிற வட்டங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் நடைபெறுகிறது. இந்த வயல்கள் கரும்பு, மணிலா, எள் உள்ளிட்ட பணப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடுமையான வறட்சியை தாங்கக்கூடிய சவுக்கை போன்ற பயிர்கள் கூட நீரின்றி காயத்தொடங்கியுள்ளது. மின்சாரம் ஒருநாளைக்கு 3 மணி முதல் 6 மணி நேரம் தான் வழங்கப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. இதனால் மணிலா, எள், கரும்பு போன்ற பயிர்கள் நீரின்றி காயத்தொடங்கியுள்ளதால் உற்பத்தி செய்யும் பொருளை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். கடும் மின்வெட்டால் கிராமங்களில் உள்ள மேல்நிலைத்தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீருக்காக மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் நேரில் ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு பார்க்க வராதது கண்டனத்திற்குரியது என வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.