திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக மழை பெய்து வருவதால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆ வது நாளாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சம் 73 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 38 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 62.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 6 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 39.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 76 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1483.49 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1227 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இதனை தொடர்ந்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.30 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையில் இருந்து தாமிரவருணி ஆற்றில் 903.50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 20 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு 45 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.