கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போலீஸ் கட்டுபாட்டில் கோபாலசமுத்திரம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கோபாலசமுத்திரம் காவல்துறையின் முழு கட்டுபாட்டில் உள்ளது. 4 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2013, 9:39 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கோபாலசமுத்திரம் காவல்துறையின் முழு கட்டுபாட்டில் உள்ளது. 4 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோபாலசமுத்திரத்தில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு அங்கு சமுதாயக் கொடி ஏற்றப்பட்டது. இக்கொடி கம்பத்தை சிலர் அவமரியாதை செய்தனர். இதை கண்டித்து அச்சமூகத்தினர் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி மாணவி ஒருவர் தாக்கப்பட்டார். இதில் எழுந்த பிரச்னையில் மேலபச்சேரியை சேர்ந்த லட்சுமணன் மகன் தர்மராஜ் (27) தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.

இதனிடையே இடம் தொடர்பான பிரச்னையில் கோபாலசமுத்திரம் அருகே மேலஓமநல்லூரில் விவசாயித் தொழிலாளி ஆ. முருகன் (40) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தடுத்து அவரது மனைவி வசந்தா, மகள் கலா, மருமகன் வடிவேல் ஆகியோரும் காயமடைந்து மருத்துமனையில் உள்ளனர்.

தர்மராஜ், முருகன் ஆகியோரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். தொடர்ந்து கோபாலசமுத்திரத்தில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கடைகள் 4 வது நாளாக திங்கள்கிழமையும் திறக்கவில்லை. பிரான்சேரி பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வாழையை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு தரப்பினர் போலீஸார் மீது கல்வீசி தாக்கினர். இதில் அதிரடிபடை காவலர் சங்கரநாராயணன் காயமடைந்தார். தூத்துக்குடி எஸ்.பி. துரை, கார் உள்பட 3 காவல்துறை வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் கோபாலசமுத்திரத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திங்கள்கிழமை கோபாலமுத்திரத்தில் டி.ஐ.ஜி. சுமித்சரண், எஸ்.பி. க்கள் விஜேந்திரபிதரி (திருநெல்வேலி), துரை (தூத்துக்குடி), மணிவண்ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில் 1,000 க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோபாலசமுத்திரம் ஊரை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் செல்லும் 3 நுழைவாயில் பகுதியான பிரான்சேரி, சுத்தமல்லி, சுப்பிரமணியபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையை மீறி யாரும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பை கண்டு கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மராஜ், முருகன் ஆகியோரது இறுதி சடங்கு நடைபெற்றது. 2 வது நாளாக பத்தமடை, மேலச்செவல் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கோபாலசமுத்திரம், சுத்தமல்லி வழியாக 4 வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.