
துறையூர் அருகே பாலக்கிருஷ்ணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி செவ்வாய்க்கிழமை வீடுகளிலும் தெருக்களிலும் கறுப்புக் கொடி கட்டியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ளது பாலக்கிருஷ்ணம்பட்டி பேரூராட்சி. பெயர்தான் பாலக்கிருஷ்ணம்பட்டி பேரூராட்சி தவிர அரசு அலுவலகங்கள் அனைத்தும் பி. மேட்டூரில் தான் உள்ளது. இதனால் இந்தக் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவதில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வந்தனர்.
அண்மையில் இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி நேரத்தில் பி.மேட்டூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறி பிப். 21ம் தேதி சுமார் 7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். அன்று இந்த சுகாதார நிலையம் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இதனைக் காண நேரில்சென்ற எம்எல்ஏ த. இந்திராகாந்தி மற்றும் மறியலை நிறுத்தச் சென்ற காவல், வருவாய், மருத்துவத் துறை அதிகாரிகள் முதல்வர் திறந்து வைத்துள்ளதால் இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தவேண்டாம் என்றும், தேவையான அடிப்படை வசதிகளை செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தனர்.
இந்நிலையில் ஏப். 1ம் தேதி பாலக்கிருஷ்ணம்பட்டி கிராம மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விளம்பரப் பதாகை கிராமத்தின் மையப்பகுதியில் வைத்துள்ளனர். மேலும் வீடுகளிலும், முக்கிய தெருக்களில் உள்ள மின் கம்பங்களிலும் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.