/

புதுச்சேரியில் பா.ம.க வேட்பாளருக்கு தேமுதிக ஆதரவு

புதுச்சேரியில் தேமுதிக-பா.ம.க.-மதிமுக, ஐஜேகி கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை திடீரென கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 11:32 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் தேமுதிக-பா.ம.க.-மதிமுக, ஐஜேகி கட்சி நிர்வாகிகள் வியாழக்கிழமை திடீரென கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதியான முடிவு எட்டப்படாமல் குழப்ப நிலை நீடிக்கிறது. பா.ம.க. வேட்பாளர் ஆர்கே.அனந்தராமன் மோடி படத்துடன் பிரசாரம் செய்து வருகிறார்.

அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் மோடி படத்துடனும், பா.ஜ.க மாநில நிர்வாகிகள் ஆதரவுடன் பிரசாரம் செய்து வருகிறார்.

புதுவையில் இரு தரப்பும் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறி வாக்கு சேகரிக்கிறார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் விஸ்வேரன் கூறுகையில், மோடி படம், பாஜக சின்னம் மற்றும் கொடியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தான் பயன்படுத்த உரிமையுள்ளது. பாஜக கூட்டணியில் புதுவை தொகுதி வேட்பாளர் என்.ஆர்.காங்கிரஸ்தான். தலைமையிடம் அதிகாரபூர்வ கடிதம் கேட்டுள்ளோம். பாமகவினர் பாஜக சின்னம், கொடி, மோடி படத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேசிய தலைமைக்கு புகார் தந்துள்ளோம். ஓரிரு நாளில் இப்பிரச்சினை தீர்ந்து விடும் என்றார்.

இதற்கிடையே வியாழக்கிழமை காலை தேமுதிக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளதாக தகவல் தரப்பட்டது. கட்சித் தலைமை பா.ம.கவுக்கு ஆதரவு தருமாறு கூறியுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாலையில் தான் இதுகுறித்து கட்சித் தலைமை தெரிவிக்கும். அதன் பின்னர் நாங்கள் தெரிவிக்கிறோம் எனக் கூறிவிட்டனர்.

ஆனால், தேமுதிக அலுவலகத்துக்கு பா.ம.க வேட்பாளர் அனந்தராமன் தனது ஆதரவாளர்களுடன் நண்பகலில் சென்றார்.  அவரை தேமுதிக மாநில பொறுப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். இதையடுத்து 4 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

அதையடுத்து செய்தியாளர்களிடம் தேமுதிக  பொறுப்பாளர் செல்வராஜ்  கூறியது: புதுச்சேரியில் பா.ம.கவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவை தேமுதிக தலைமை விரைவில் தெரிவிக்கும். கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்படுவோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இணைந்து பணியாற்றி ஆட்சியை பிடிப்போம் என்றார்.

பா.ம.க வேட்பாளர் அனந்தராமன் கூறியதாவது: பா.ஜ.க தலைமையிடம் பேசியுள்ளோம். ஓரிரு நாளில் அதிகாரபூர்வ வேட்பாளரை அவர்கள் தெரிவிப்பார்கள். பா.ஜ.க. கூட்டணிக்காக தமிழகத்தில் பாமக பாடுபடுகிறது. தற்போது புதுச்சேரியில் பாமகவை தேமுதிக, மதிமுக, ஐஜேகே ஆகிய அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது. விரைவில் பாஜகவும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

நரேந்திர மோடி படத்தை பயன்படுத்தக்கூடாது என மாநில தலைவர் விஸ்வேஸ்வரன்கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்பிரதமர் வேட்பாளர். அதனால் நாங்கள் மோடி படத்தை பயன்படுத்துவோம்என்றார்.

மதிமுக செயலாளர் ஹேமா பாண்டுரங்கன், ஐஜேகே அமைப்பாளர் சத்தியவேல், தேமுதிக மாநில பொறுப்பாளர் அசோக்பாபு ஆகியோரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.