/

தேர்தலுக்கு நாட்கள் உள்ளதால் கட்சிகள் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்

பழனி ரயில் நிலையத்தில் பழனியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை

News image
Updated On :16 பிப்ரவரி 2014, 11:22 am

என்.​ அங்​கு​பாபு

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால் கட்சிகள் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பழனி ரயில் நிலையத்தில் பழனியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை வகித்தார்.  திண்டுக்கல் எம்பி., சித்தன், பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,  மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வருவாயில் முதன்மைக் கோயிலாக விளங்கும் பழனி தினமும் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.  இதனால் இங்கு அதிகஅளவில் மக்கள் வருகின்றனர்.

பாதயாத்திரை காலத்தில் ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது.  இதை தவிர்க்க மூலச்சத்திரம் முதல் பழனி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக சுமார் 14 கோடி மதிப்பில் தனிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தனிப்பெரும் நிறுவனமாக ரயில்வே விளங்குகிறது.  இதில் பல்லாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர் என பேசினார்.  பின்னர் அவர் அளித்த பேட்டியில்,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழகத்துக்கு தொடர்ந்து கூடுதல் ரயில் திட்டங்களை வழங்கி வருகிறது.  சமீபத்திய ரயில்வே பட்ஜெட்டில் 2 பிரீமியர் ரயில், 3பயணிகள் ரயில் உள்ளிட்ட 9 புதிய ரயில்களை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 95சதம் ரயில்பாதைகள் அகலரயில் பாதைகளாக மாற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழனி-திருச்செந்தூர் ரயில் நேரடியாக இரு அறுபடை வீடுகளையும், முறைமுகமாக நான்கு அறுபடை வீடுகளையும் இணைக்கிறது.  பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் நாட்கள் இருப்பதால் எந்த கட்சிகளும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை.  பல கட்சிகள் பழைய கூட்டணியுடனும், சில கட்சிகள் புதிய கூட்டணியையும் அறிவுத்துள்ளன.  காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணியை அமைக்க ஏற்பாடுகள் நடத்தி வருகிறது.  

தமிழகத்தில்   கச்சத்தீவு தனிப்பட்ட பிரச்னையாகும்.  இதை மீட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.  தமிழகத்தில் கடந்த சிலமாத காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  கூட்டணி பற்றி மேலிடம் அறிவித்த பின் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடைப்பிடிக்கும் என பேசினார். 

நிகழ்ச்சியில் பழனி நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ராசியப்பன், ராமதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் திருஞானசம்பந்தம், காங்கிரஸ் நகர தலைவர் சண்முகநாதன், ஒன்றியகமிட்டி தலைவர் கனகசபாபதி, கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர், டெலிபோன் கமிட்டி முருகானந்தம், மூப்பனார் பேரவை பழனிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பழனி-திருச்செந்தூர் ரயில்:  பழனியில் மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்றியபின் பழனி-திண்டுக்கல் ரயில் முதலிலும், பழனி-மதுரை ரயில் இரண்டாவதாகவும், பழனி-சென்னை ரயில் மூன்றாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  பழனி-திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் துவக்கப்பட்டது. 

முதல் நாளன்றே ரூ.22 ஆயிரத்து 385 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானது.  பழனி-திருச்செந்தூர் ரயில் கட்டணம் ரூ.60 ஆகும்.  பயணிகள் ரயில் என்பதால் முன்பதிவு இல்லை. இந்த ரயில் பழனியில் தினமும் காலை 7.20க்கு கிளம்பி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி மார்க்கமாக மாலை 4 மணியளவில் திருச்செந்தூரை அடைகிறது.  அதே போல திருச்செந்தூரிலும் காலை 10 மணிக்கு இதே எதிர் மார்க்கமாக 10 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு 7.20க்கு பழனியை வந்தடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.