/

புதுவை துணை நிலை ஆளுநர்-முதல்வர் பிரச்னை தொடர்பாக உயர்நிலை விசாரணை: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

புதுவையில் துணைநிலை ஆளுநர்- முதல்வர் இடையிலான பிரச்னை தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.அதன் மாநில

News image
Updated On :17 ஜூலை 2014, 9:19 am

சுஜித்குமார்

புதுவையில் துணைநிலை ஆளுநர்- முதல்வர் இடையிலான பிரச்னை தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த மத்திய உள்துறை உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.அதன் மாநில செயலர் ஆர்.விசுவநாதன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் அண்மைக்காலமாக விரும்பத் தகாத சம்பவங்கள் நடத்து வருகின்றன. மக்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அவர்களுக்கு என கடமைகள், உரிமைகள் உள்ளன. உரிமைகளை கேட்டுப் பெறுவதற்காக அவர்கள் கையாளும் வழிமுறைகள் அதிகாரிகள், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தடை உத்தரவு இருந்தும் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் நில அளவைத் துறை இயக்குநரிடம் அராஜக முறையில் நடந்துள்ளனர்.

தங்கள் தொகுதியில் பொதுமக்களுக்கு பட்டா தரப்படுவது குறித்து அமைச்சர் மூலம் பேசி இருக்கலாம். ஆனால் அரசு அதிகாரிகளை பணிய வைக்கும் போக்கில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இது வருங்காலத்தில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். முதல்வர் முன்னிலையிலேயே பிஆர்டிசி தலைவரை ஆளும் கட்சியினர் தாக்கினர். இதனால் ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்கள் சீர்குலைந்து விட்டன.

முன்னாள் துணை நிலை ஆளுநர் கட்டாரியா முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதே போல் ஆளும் கட்சித் தரப்பும் ஆளுநர் மீது புகார்களை கூறி உள்ளது.இதுகுறித்து உண்மையை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக இதில் தலையிட்டு உயர்நிலைக் குழுவை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும். கட்டாரியா உள்பட அனைத்து தரப்பினரையும் விசாரித்து உண்மை அறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி அநாகரீகமாக நடத்துள்ளனர். துணைநிலை ஆளுநர் கட்டாரியாவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சாணி, முட்டை வீசி போராட்டம் நடத்தி உள்ளனர். இது தவறான முன்னுதாராணத்தையே ஏற்படுத்தும்.நாங்கள் மக்கள் பிரச்னைகளுக்காக 3 கோரிக்கைகளை துணைநிலை ஆளுநரிடம் தந்தோம்.தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக கோட்டாவில் மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையாக நடக்க வேண்டும், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தோம்.

சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீடு பிரச்னையில் குற்றம் சாட்டப்பட்டவர் அப்பாவி என கட்டாரியா கூறுவது ஏற்புடையதல்ல. புதுச்சேரியில் நிதி மேலாண்மை, திட்டங்கள் செயலாக்கம், குறித்து மத்திய உள்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தமிழ் வழிக்கல்வியில் தொடங்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.