/

கீரனூர் குருகுல குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய ஆங்கிலக்கல்வி: அமெரிக்க பெண் தன்னார்வலர் முயற்சி

பழனி அருகே கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் உள்ள குழந்தைகளுக்கு அமெரிக்க பெண் தன்னார்வலரால் விளையாட்டுடன் கூடிய ஆங்கிலக்கல்வி பயிற்சியால் பலரும் ஆங்கில இலக்கணத்தில்

News image
Updated On :2 மார்ச் 2014, 11:05 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் உள்ள குழந்தைகளுக்கு அமெரிக்க பெண் தன்னார்வலரால் விளையாட்டுடன் கூடிய ஆங்கிலக்கல்வி பயிற்சியால் பலரும் ஆங்கில இலக்கணத்தில் நல்ல தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

பழனியை அடுத்தது கீரனூர்.  கிராமப்பகுதியான இங்கு சண்முகநதி ஆற்றின் கரையில் அழகுற அமைந்துள்ளது கீரனூர் சன்மார்க்க குருகுலம்.  இதை 90வயதை தாண்டிய குலபதி குப்புசாமி நிர்வகித்து வருகிறார்.  இந்த குருகுல வளாகத்தில் அருள்ஜோதி மருத்துவமனை, அருள்ஜோதி திக்கற்றோர் சரணாலயம், அருள்ஜோதி முதியோர் தர்மசாலை, சத்யஞானசபை, நடமாடும் கிராமிய மருத்துவமனை, அருள்ஜோதி ஊமை,செவிடர், விழியிழந்தோர் தர்மசாலை, தையற்பள்ளி மற்றும் குருகுலம் நடுநிலைப் பள்ளி ஆகியன உள்ளது.  இங்கு நூற்றுக்கணக்கான ஆதரவற்றோர் தங்கி பயின்று வருகின்றனர். 

இவர்களுக்கு உணவு, உறைவிடம், உடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.  இங்குள்ள குருகுலம் நடுநிலைப் பள்ளியில் கீரனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியில் தமிழக அரசின் அனைத்து கல்விப்பயன்களும் வழங்கப்பட்டு சிறப்புற நடைபெற்று வருகிறது.  கடந்த வருடம் இப்பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அமெரிக்காவை சேர்ந்த வேர்ல்டு டெக் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஜொனார்த்தன் என்பவரை அனுப்பி பயிற்சி வழங்கியது. 

இந்நிலையில் இந்த ஆண்டு ஸ்டெப்னி என்ற பெண்மணி இந்த குருகுலத்தில் பயிலும் குழந்தைகளுக்கு ஆங்கில அடிப்படை அறிவு, இலக்கணம், ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆகியவற்றை விளையாட்டுடன் கூடிய கல்வியாக கற்றுத்தருகிறார்.  இவரது அணுகுமுறையால் மாணவ, மாணவியர் ஈர்ப்புடன் ஆங்கிலம் பயின்று வருகின்றனர்.  பலரும் தற்போது பேசும் அளவு புலமை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை சுப்புலட்சுமி சந்திரா கூறுகையில், ஸ்டெப்னி அவர்கள் நாட்டில் இருந்து மாணவர்களுக்காக தனியே புத்தகங்களை வரவழைத்து அதன்படி கற்றுத்தருகிறார்.  இதற்காக தனிப்பாடவேளையும் அவருக்கு ஒதுக்கியுள்ளோம்.  விளையாட்டுடன் கூடிய அவரது சிலபஸ் நல்ல முன்னேற்றத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.  கிராமப்பகுதியில் உள்ள இப்பள்ளியில் உள்ள இந்த மாணவர்கள் ஆங்கிலக் கேள்விகளுக்கு திறமையாக பதிலளிக்கின்றனர்.  இவரைப் போலவே திருச்சி, கூடலூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களிலும் தன்னார்வலர்கள் தங்கியிருந்து கல்வி பயிற்றுவிப்பதாகவும் தெரிவித்தார். 

பள்ளி செயலர் திருப்பதி கூறுகையில், பள்ளியில் தங்கி ஆங்கிலம் கற்றுத்தரும் ஸ்டெப்னிக்கு எந்த ஊதியமும் கிடையாது.  அவருக்கு தங்க கொடுத்துள்ளதும் சிறிய இடமே.  போதுமென்று தங்கியுள்ளார்.  அவர் வந்தபோது மற்றவர்களுடன் தரையில் அமர்ந்து இலையில் சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.  உணவை பிசைந்து வாயிற்கு கொண்டு செல்லவே அதிக பயிற்சி தேவைப்பட்டது. இதுகுறித்து அவர் எந்த சிரமமும் காட்டாமல் நாளடைவில் நமது நாட்டு பழக்கவழக்கத்துக்கு வந்ததோடு நமது உணவு வகைகளை சாப்பிட்டும் படியும் பழகி விட்டார்.   பள்ளி நேரம் மட்டுமன்றி அதிகாலை, மாலை வேளைகளிலும் மாணவர்கள் அவரிடம் வந்து ஆங்கிலம் கேட்டு பழகுகின்றனர்.  இது அவருக்கும், எங்களுக்கும் பெருமையாக உள்ளது. இவர் ஒரு ஆண்டுகாலம் தங்கியிருந்து குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கவுள்ளார் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.