புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 63 வணிக வளாகங்களுக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
பேரவையில் கேள்விநேரத்தின்போது இதுகுறித்து நடந்த விவாதம்:
உறுப்பினர் விஎம்சி.சிவக்குமார்: நகர அமைப்பு குழுமம் கடந்த 2012-13ம் ஆண்டில் எத்தனை வணிக வளாகங்கள் கட்ட அனுமதி வழங்கியது? அனுமதி வழங்கப்பட்ட அனைத்து வணிக வளாகங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படுகிறதா? விதிமுறையை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள் எத்தனை? அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
முதல்வர் ரங்கசாமி: கடந்த ஆண்டில் 97 வணிக வளாகங்கள் கட்ட நகர குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. சில கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இதுவரை 63 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களின் உரிமையாளர்கள் மீது நகர மற்றும் கிராம அமைப்பு சட்டம், கட்டட விதிமுறை ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமீறல் இடிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் மேல்முறையீட்டிற்கு விண்ணப்பித்துள்ளனர். எஞ்சிய 56 விண்ணப்பங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.