கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆந்திரா சம்பவத்தில் அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: திருமாவளவன்

ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

News image
Updated On :16 ஏப்ரல் 2015, 12:33 pm

ஜி.சுந்தரராஜன்

ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டு காவல்துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் ஹோட்டல் அக்சயாவில் அவர், செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எனது பெயரில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அம்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும்

மத்தியஅரசு மெளனமாக இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தமிழகஅரசும் இச்சம்பவம் தொடர்பாக முனைப்பு காட்டவில்லை. இறந்தவர்கள் வாழும் பகுதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்றுகூட பார்க்கவில்லை. சென்னையில் வருகிற ஏப்.28-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் தமிழர்நீதி பேரணி நடைபெறுகிறது. கருத்து ஒற்றுமையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்பினரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டுகோள்விடுக்கிறேன். தருமபுரியில் 8-ம் வகுப்பு பயிலும் தலித் சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். பள்ளி முடித்து வீடு திரும்பிய சிறுமியை தலித் அல்லாத இரு கல்லூரி மாணவர்கள் கட்டாயப்படுத்தி வல்லுறவு செய்து கைபேசி மூலம் படம் எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். அதை கொண்டு அச்சுறுத்தி 2-ம் முறையாக பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை குழந்தைகள் பாலியல் துண்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அச்சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோடு, அவரது மேல்படிப்பு வரை கல்வி பயில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.க அலுவலகம் உள்ள பெரியார்திடல் எதிரே, சென்னை மாநகர கமிஷனர் அலுவலகமும் உள்ளது. அங்கு மதவாத சக்திகள் நாட்டு வெடிகுண்டுடன் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திகவினர், மதவாதசக்திகளிடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் திகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். இதில் காயமுற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற்று, விடுதலை செய்ய வேண்டும். குடியாத்தம் பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவம் பெருகி வருகிறது. அதனை தடுக்க தவறிய தமிழகஅரசு, இரும்பு கூண்டு போட்டு அவமதித்து வருகிறது. கூண்டுகளை அகற்றாவிடில், தமிழகம் தழுவிய கூண்டுகளை அகற்றும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும்.

மதுரையில் 1990-ம் ஆண்டு ஏப்.14-ல் முதல் கொடி ஏற்று கட்சி தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு மதுரையில் ஏப்.25-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெள்ளிவிழா நடைபெறுகிறது. வெள்ளிவிழாவை முன்னிட்டு கட்சியினரின் சுவர்விளம்பரம், விளம்பர தட்டிகளை தார்பூசி அழித்து அழித்து வருகின்றனர். இதனை விடுதலைச் சிறு்தைகள் கட்சி கண்டிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் கேள்விக்குறி நிலையில் உள்ளது. தென் மாவட்டங்களில் தொடர் கொலைகள், வட மாவட்டங்களில் சாதியவாதி சக்திகளினால் அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவங்கள், வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் மீது நேரடியாக ஊழல் புகார்கள் ஊடகங்கள் மூலம் வெளி வந்து கொண்டிருக்கிறது. விழுப்புரம் முண்டியபாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 8 பிறந்த குழந்தைகள் இறந்துள்ளன. போதிய கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தரமான மருந்துகள் பயன்படுத்தாதால் குழந்தைகள் இறந்துள்ளன. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழகஅரசு தொடர்புடைய அமைச்சரை மாற்ற வேண்டும்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரில் மிக மோசமாக உள்ள சாலைகளை போக்கால அடிப்படையில் மீதமுள்ள 2 வாரத்திற்குள் மேம்படுத்த வேண்டும். கிடப்பில் போட்டப்பட்டுள்ள புதிய பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். வீராணம் ஏரி தூர் வார நிதிஒதுக்கி பல ஆண்டுகளாகியும், தூர்வாரப்படாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நந்தனார் பள்ளி மற்றும் விடுதி கட்டடங்கள் சிதலமடைந்துள்ளன. எனவே அவற்றை அரசு சீரமைக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்கள், பள்ளி கட்டடங்கள் எந்த அளவிற்கு உறுதி தன்மையுடன் உள்ளது என்பதை கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். சிதம்பரத்தில் அரசு அறிவிப்பின்படி சுவாமி சகஜானந்தா மணி மண்டபம் உடன் அமைக்க வேண்டும். தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ளன. தேர்தல் கூட்டணி குறித்து அப்போதுதான் முடிவு செய்யப்படும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்தடைந்தும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்கள் நிரத்தரம் செய்யப்படவில்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல்கலைக்கழகத்தில் அரசு பொறுப்பேற்ற பின்னரும், பழைய கல்வி கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எனவே அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசாணை 92-ன் படி கல்வி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதியை அரசு வழங்க வேண்டும். அரசு இந்த நிதியை வழங்காததால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் சேர்க்க தயாராக இல்லை என தனியார் கல்லூரிகள் அறிவித்துள்ளன. எனவே தனியார் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

பேட்டியின் போது கடலூர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.