/

விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பழனியில் பாலாறு–பொருந்தலாறு அணை உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை தவறியதால் இந்த

News image
Updated On :9 பிப்ரவரி 2015, 1:23 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபிரதான வாய்க்காலில் தண்ணீர் திறப்பை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பழனியில் பாலாறு–பொருந்தலாறு அணை உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை தவறியதால் இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததன் பலனாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதுமட்டுமின்றி பழனி பகுதியில் உள்ள குதிரையாறு, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட அணைகளும், குளங்கள், கண்மாய்களும் நிரம்பியது. இதனால் விவசாயிகள் தங்களது பணியை தொடங்கினர். பாலாறு–பொருந்தலாறு அணையின் இடது பிரதான வாய்க்கால் பாசனம் மூலமாக கலையமுத்தூர், நெய்க்காரபட்டி, சித்திரைக்குளம், தாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு பாசனத்துக்காக வினாடிக்கு 75 கனஅடி நீர் வீதம் 130 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக கூறி தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் அளவை குறைத்து மார்ச் 10ம் தேதி வரை மட்டுமே திறந்து விடப்படும் என தெரிவித்ததாக கூறி திங்கள்கிழமை ஏராளமான விவசாயிகள் பழனி தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொறியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த 3 ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் விவசாய பணிகளுக்கு கடன்வாங்கி  செலவு செய்துள்ளோம்.  நிலக்கடலை, மக்காச்சோளம், தட்டை போன்றவை பயிரிட்டுள்ளோம். 130 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 60 நாட்களே திறந்து விடமுடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். குளங்கள் நிரம்பி உள்ள நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் செல்கிறது.  ஆற்றோர பாசன விவசாயிகள் ஒரு போகம் விவசாயத்தை முடித்து அடுத்த போக விவசாயத்துக்கு தயாராகிவிட்டனர்.  ஆனால் நாங்கள் ஒருபோகம் கூட எடுக்கவில்லை என்றனர்.  இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் முருகன் தெரிவித்ததாவது, அணைக்கு எதிர்பார்த்த நீர்வரத்து வரவில்லை. 

இந்நிலையில் தண்ணீரை குறைத்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் தண்ணீரின் அளவை அதிகரிக்கலாம்.  பழனிக்கு குடிநீருக்கும் தண்ணீர் சேமித்து வைக்கும் கட்டாயத்தில் உள்ளோம். அதனால்தான் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.