/

கூண்டு காவடி எடுத்து முதுகில் அலகு குத்தி வேனை இழுத்து சென்னை பக்தர்கள் நேர்ச்சை

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சென்னையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, அலகு, கூண்டு காவடி எடுத்தும், முதுகில் அலகு குத்தி வேன் இழுத்தும் நேர்ச்சை.செலுத்தினர்

News image
Updated On :12 பிப்ரவரி 2015, 8:55 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சென்னையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, அலகு, கூண்டு காவடி எடுத்தும், முதுகில் அலகு குத்தி வேன் இழுத்தும் நேர்ச்சை.செலுத்தினர்.

பழனியில் தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையிலும் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசம் முடிந்த பிறகு வரும் கூட்டத்தில்  சென்னையை சேர்ந்த தென்பழனி பாதயாத்திரைக்குழுவும் ஒன்றாகும்.  கடந்த பல வருடங்களாக சுமார் 450 கி.மீ தூரம் பழனிக்கு பாதயாத்திரை வரும் இந்த பக்தர்கள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி குருசாமி பன்னீர் செல்வம் தலைமையில் தங்கள் பாதயாத்திரையை துவங்கி பிப்ரவரி மாதம் 11ம் தேதி பழனி வந்து நிறைவு செய்தனர்.  வியாழக்கிழமை பழனி சண்முகநதியில் நீராடிய பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் மொட்டையடித்து தங்கள் நேர்ச்சையை செலுத்தினர். 

வந்த பக்தர்கள் கூட்டத்தில் சுமார் 51 பேர் பால்காவடி எடுத்தும், 21 பேர் புஷ்பக்காவடி எடுத்தும், 25க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கன்னம், நாக்கில் அலகு குத்தியும் நேர்ச்சை மேற்கொண்டனர்.  அலகு குத்தும் சாமி கந்தகுமார் ஒவ்வொருவருக்கும் அலகு குத்தும் போது பக்தர்கள் மேற்கொண்ட சாமியாட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  மேள, தாளம் முழங்க நடைபெற்ற அலகு குத்தும் நிகழ்ச்சியில் சென்னை எண்ணூரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உடலில் 108 இடங்களில் ஊசியில் நூலை கோர்த்து அதில் எலுமிச்சையை இணைத்து எலுமிச்சை நேர்த்தி செலுத்தியது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.  இவர் தனது 15 வயது முதலே இந்த நேர்ச்சையை செய்து வருவதாக தெரிவித்தார். 

சென்னை கல்மண்டபம் வெங்கடேஷ், திருவொற்றியூர் மணிகண்டன் ஆகியோர் 108 அலகு குத்தி கூண்டு காவடியும், உத்திரமேரூர் ஓங்காரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் 208 இடங்களில் அலகுகுத்தி பாசியுடன் கூடிய கூண்டு காவடியும் எடுத்தனர்.  தவிர இந்த மூன்று பேரும் முதுகில் இரண்டு கொக்கிகளை அலகாக குத்தி அதன் கடைசியில் மாருதி வேனை கட்டி இழுத்து சென்று நேர்ச்சை செலுத்தினர்.  அனைத்து பக்தர்களும் சண்முகநதியில் இருந்து கிளம்பி கிரிசுற்றி பின் மலையேறி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு, பூஜைகள் அபிஷேகம் செய்தனர். 

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, புஷ்பக்காவடி, நாவலகு, அன்ன அலகு, கூண்டு காவடியுடன் வேனை இழுத்து சென்றது என சென்றதை பொதுமக்கள் பலரும் வியப்புடன் பார்த்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.