விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 126 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்றாம் பருவம் தொடங்கிய அன்றே 10,503 மாணவ மாணவியருக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டது.
2014-15-ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவம் தொடக்கக் கல்வித் துறையின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. மாணவர்கள் விடுமுறை முடித்து வந்த அன்றே அரசின் விலையில்லா புத்தகங்களை வழங்க கல்வித் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. இதன்படி விடுமுறை நாட்களில் புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் பெற்று பள்ளிகளில் இருப்பு வைத்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில், நரையன்குளம் ஒத்தப்பட்டி நடுநிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில் சரகத்தில் உள்ள 126 பள்ளிகளில் படிக்கும் 10,503 மாணவ மாணவியருக்கு 3-ம் பருவம் தொடங்கிய அன்றை அரசின் விலையில்லா புத்ககங்கள் வழங்கப்பட்டுவிட்டது என்றார். நிகழ்ச்சியில் கிராம கல்விக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அ.கனியம்மாள், தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.