/

மத்திய கொள்கை குழுவில் புதுவை முதல்வருக்கு இடமில்லை ஏன்?: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

மத்திய அரசு புதிதாக உருவாக்கி உள்ள (நிடி ஆயோக்) மத்திய கொள்கை குழுவில் புதுவை முதல்வருக்கு ஏன் இடமில்லை என இந்திய கமயூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அதன் மாநில செயலாளர்

News image
Updated On :3 ஜனவரி 2015, 10:42 am

சுஜித்குமார்

மத்திய அரசு புதிதாக உருவாக்கி உள்ள (நிடி ஆயோக்) மத்திய கொள்கை குழுவில் புதுவை முதல்வருக்கு ஏன் இடமில்லை என இந்திய கமயூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அதன் மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி தலைமையிலான அரசு, மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு புதிதாக மத்திய கொள்கை குழுவை உருவாக்கி உள்ளது. மாநில முதல்வர்களை கலந்தாலோசித்தபின் இக்குழு உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு கூறி உள்ளது. புதுவையிந் நிலைப்பாடு என என்பது குறித்து முதல்வர் ரங்கசாமி இதுவரை தெரிவிக்கவில்லை.அக்குழுவில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் இடம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம் புதுவை தான். இங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் உள்ளார்.

ஆனால் அவரை உறுப்பினராக சேர்க்காமல் துணைநிலை ஆளுநரை உறுப்பினராக சேர்த்துள்ளனர். இது மத்திய பா.ஜ.க. அரசு புதுவை மக்களுக்கு இழைத்த துரோகமாகும். இதற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி தனது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அமைச்சரவை, சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும்.பின்னர் மத்திய அரசுக்கு என்.ஆர். காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். அப்படியும் மத்திய அரசு செவிசாய்க்கா விட்டால் முதல்வரும், அமைச்சர்களும் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும். தனி மாநில அந்தஸ்து கோரும் முதல்வர் இதில் உறுதியான நிலையை எடுக்க வேண்டும்.

பா.ஜ.க. அரசு தனது மதவாத கொள்கைகளை மெதுவாக புகுத்தி வருகிறது.குஜராத் மாநிலம் சூரத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் குல்லா அணிந்தவர்களை இடம் பெறச்செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

முந்தைய காங்கிரஸ் அரசு அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்த போது எதிர்த்த பா.ஜ.க. தற்போது தானும் அதே வழியைப் பின்பற்றி அவசரச் சட்டங்களை கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மூலம் விவசாயிகளின் சீரழிவுக்கு வழிவகுத்துள்ளது.

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைகள் வைக்கப்போவதாக மதவாத அமைப்புகள் கூறி வருகின்றன. புதுவையில் இதுபோன்ற நிலையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மாநிலத்தில் இருந்து ஆலைகள் வெளியேறுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.

நிர்வாகிகள் நாரா.கலைநாதன், வி.எஸ்.அபிஷேகம், சலீம், முருகன் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.