/

தினமணி ஆசிரியருக்கு கோலாகல வரவேற்பு அளிக்க விழுப்புரம் மாவட்ட தமிழ்ச் சங்க கூட்டமைப்பு முடிவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு வருகைதரும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கோலாகல வரவேற்பு அளிக்க மாவட்டத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:53 am

ச. மயில்வாகனன்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூருக்கு வருகைதரும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கோலாகல வரவேற்பு அளிக்க மாவட்டத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

திருக்கோவிலூரில் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா வரும் 17-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 4 நாள்கள் நடைபெறுகிறது.  விழாவின் 3-ம் நாளான வரும் 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில், பணி நிறைவுபெற்ற இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானி முனைவர் நெல்லை சு.முத்துவுக்கு கபிலவாணர் விருதும், பொற்கிழி ரூ.1 லட்சமும் வழங்கி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பாராட்டிப் பேசுகின்றார்.

 இதையடுத்து அறிஞர் ஊர்வலத்தில் பங்கேற்கவும், கபிலவாணர் விருது வழங்கவும் வருகைதரும் தினமணி ஆசிரியருக்கு கோலாகல வரவேற்பு அளிப்பது குறித்து, மாவட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புத் தலைவருமான கோமுகிமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் கவிமாமணி சிங்கார.உதியன், அரகண்டநல்லூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தே.சுந்தரவடிவேல், திருக்கோவிலூர் தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவர் கவிஞர் பெண்ணைவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கவிஞர் இரா.துரைமுருகன்  வரவேற்றார்.

 அறிஞர் உலா ஊர்வலத்தில் நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், பணி நிறைவுபெற்ற விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து ஆகியோரை கீழையூர் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருந்து விழா அரங்கம் வரை அலங்கார வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வருவது,

 40 ஆண்டுகளாக தொடர்ந்து கபிலருக்கு விழா நடத்தி வரும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகளை சிறப்பித்து சான்று வழங்குவது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஊர்வலத்தை நடத்துவது, பங்குபெறும் ஒவ்வொரு அமைப்பும் குறைந்தது 20 பேர் வீதம், அமைப்பு முகவரி கொண்ட பதாகையுடன் ஊர்வலத்தில் கலந்துகொள்வது, குறைந்தது சுமார் 1000  பேரை ஊர்வலத்தில் பங்குபெற வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.