வைகை அணையில் அவசர காலங்களில் எவ்வளவு தண்ணீர் தேங்கமுடியும்?: ஐவர் குழு ஜூலை 28 நேரில் ஆய்வு நடத்த முடிவு


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அவசரகாலங்களில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால், வைகை அணையில் எவ்வளவு தண்ணீர் தேக்கமுடியும் என்று வரும் ஜூலை 28-ல் ஐவர் குழு ஆய்வு நடத்த செவ்வாய்கிழமை நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக அணையின் சீப்பேஜ் நீரின் அளவை கணக்கிடுவது, அணையில் ஏற்படும் புதிய மாற்றங்கள் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிப்பதற்காக, மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் ஐவர் கொண்ட துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த துணை குழுவில் தமிழகம் சார்பாக, பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரமும், கேரள அரசின் பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல், உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் ஆகியோரும் உள்ளனர்.இந்த ஐவர் கொண்ட துணைக்குழு, முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வழக்கமாக செய்யும் நீர்வரத்து, வெளியேற்றம், அணையிலுள்ள 45, 10 அடி கேலரியில் கசிவு நீர்(ஜீபேஸ் அளவு) அளவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அணையிலிருந்து கேரளாவுக்கு திறந்து விடப்படும் 13 மதகுகளில் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. துணைக்குழுவின் ஆய்வு பணி மாலை நிறைவடைந்தது.
பின்னர், செவ்வாய்கிழமை மாலை குமுளி 1-ம் மைல் மூவர் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அவசர காலங்களில் வழக்கமாக திறந்துவிடப்படும் தண்ணீரிலிருந்து எவ்வளவு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படும். திறக்கப்படும் தண்ணீரில் எவ்வளவு அளவுவரை வைகை அணையில் தேக்கப்படும் என்று கணக்கிட முடிவு செய்யப்பட்டது. இதற்காக வரும் ஜூலை 28-ல் ஐவர் குழு வைகை அணையில் ஆய்வு நடத்த உள்ளது.
மேலும், பேபி அணை பலப்படுத்தும் பணி உட்பட பரமரிப்பு பணிக்காக 23 மரங்களை வனப்பகுதியில் வெட்ட நடவடிக்கைக்கான பணிகள் குறித்தும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 20 இடங்களில் மழைமானி அமைக்கவும் எந்த பகுதியில் அதிகளவு அணைக்கு நீர்வரத்து ஏற்படும் என்றும் ஆய்வு நடத்தவுள்ளதாக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்ட முடிவினை என்.ஏ.வி நாதன் தலைமையிலான தலைமை மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.
தமிழக அதிகாரிகளை மறித்து போராட்டம்: முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வு சென்ற தமிழக அதிகாரிகளை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கூடலுர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழக அதிகாரிகள் ஆய்வுக்கு குறிப்பிட்ட அதிகாரிகள் மட்டும் செல்கின்றனர். கேரளாவில் கூடுதலாக குழுவில் இல்லாத பலர் கலந்து கொள்வதாகவும் இதை கண்டித்து கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாதென தமிழக அதிகாரி மாதவன் சென்ற வாகனத்தை மறித்து கோசங்கள் எழுப்பினர். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் செய்தவர்களை கைவிடச்செய்தனர். இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரம் தமிழக அதிகாரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...