/

புதுச்சேரியில் சரக்கு சேவை வரியை அமுல்படுத்த திட்டம்: துணைநிலை ஆளநர் சிங்

புதுவையில் சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 மார்ச் 2015, 3:40 pm

சுஜித்குமார்

புதுவையில் சரக்கு மற்றும் சேவை வரி அமுல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்த துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங்கை பேரவைத் தலைவர் வ.சபாபதி, முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். துணைநிலை ஆளுநர் சிங் ஆற்றிய உரை: மத்திய அரசு திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளது.

இதில் முதல் நிர்வாகக் கூட்டத்துக்கு பின் புதுவை முதல்வரையும் ஒரு உறுப்பினராக சேர்த்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2015-16 திட்ட ஒதுக்கீடாக ரூ.2800 கோடிக்கு மாநில திட்டக்குழு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு திருத்திய மதிப்பீடான ரூ.2290 கோடியை விட இது 22.27 சதம் ஆகும். சமூக பொருளாதார நிலை கணிசமாக உயர்ந்துள்ளதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.26,432 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டின் ரூ.21,500 கோடியை விட 24 சதவீதம் கூடுதலாகும். தனிநபர் வருவாய் ரூ.1.75 லட்சமாக இருக்கும். இது கடந்த ஆண்டின் ரூ.1.52 லட்சத்தை விட 20 சதம் அதிகமாகும்.

வேளாண்மை

வேளாண் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20,347 விவசாயிகளுக்கு ரூ.6.34 கோடி  முதலீட்டு மானியமாக தரப்பட்டுள்ளது. தேசிய கால்நடை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற மாநில கால்நடைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை காப்பீடு, தீவன மேம்பாடு, கோழி இனப்பெருக்க உள்கட்டமைப்பு, வசதிகள் செய்யப்படும். 47600 மெ.டன் பாலும், 11 மில்லிட் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டன. குடிமைப் பொருள், கூட்டுறவு குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ஆதார் அட்டையுடன் இணைந்த ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பணி நடந்து வருகிறது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலவச அரிசிக்கு பதிலாக ரூ.300 ரொக்கம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வணிகரித்துறையின் கீழ் கடந்த 2014-15-ல் ரூ.1320 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டுக்கு ரூ.10.53 கோடி நிதி வழங்கப்பட்டது. பால் பதனிடும் திறனை அதிகப்படுத்த ரூ.3.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மின்துறை மின்துறையில் முன்னோடித் திட்டமாக ரூ.46.11 கோடி செலவில் 87075 எலக்ட்ரோ

மெக்கானிக்கல் மீட்டர்கள், விரைவில் ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றப்படும். மாதிரியாக 1600 மின் நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின் இழப்பான 12.5 சதவீதத்தை 9.21 ஆக குறைக்கும் வகையில் ஜப்பான் கூட்டுறவு முகவாண்மைடயிடம் ரூ.743 கடன் பெற திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, விளையாட்டு

கல்வித்துறையில் 1.28 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் இலவசமாக தரப்படுகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 240 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதற்கான பயிற்சி தரப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தாகூர் கல்லூரி அருகே ரூ.6 கோடி செலவில் பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வருகிறது. 50 கிராம பஞ்சாயத்துக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

சுகாதாரம்

திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 150 ஏக்கரில் நன்னீர் மீன் வளர்க்கும் மீனவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் நிதி தரப்பட்டுள்ளது. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலில் சேர்ந்து தற்போது இறுதியாண்டில் தேர்ச்சி பெற்ற 103 மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக உள்ளனர். தாய் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 90 ஆக உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் தேசிய அளவில் 42 சதமாகவும், புதுவையில் 17 சதமாகவும் உள்ளது. தொழில்துறை இந்தியாவில் உற்பத்தி செய் என்ற திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தொழில்வழிகாட்டி அமைப்பு ஒன்று ஒற்றைச்சாளர முறையாக செயல்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகள் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையை அமுல்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. புதுவையில் 77 பெரிய ஆலைகளும், 8863 குறு, சிறு, நடுóத்தர ஆலைகளும் உள்ளன. இவற்றின் முதலீடு ரூ.2859 கோடியாகும். இவற்றில் 1 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறனர். தகவல் தொழில்நுட்பம் புதுவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஈ-பிஎம்எஸ் மின் ஆளுமை திட்ட மேலாண்மை முறை மூலம் 25 உள்கட்டமைப்பு திட்டங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3184 மாணவர்களுக்கு இலவச தகவல் தொழில்நுட்பப் பயிறங்சி தரப்பட்டுள்ளது. 98 கிராமப்பஞ்சாயத்துகளில் இணையதள வசதி ஏற்படுத்த ஆப்டிக்கல் பைபர் இழை அமைக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6000, மடிக்கணினி வாங்க ரூ.15,000 கடனுதவி வழங்கப்படுகிறது. நகரங்களைத் தூய்மையாக்கும் திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை எரித்து சாம்பலாக்க விரிவான திட்டம் தயாரிக்கப்படும். புதுவை நகராட்சி இறைச்சிக் கொட்டிலை சீர்படுத்தரூ.5.1 கோடி செலவில் நவீனப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகளுக்கு காலத்தோடு நிதியை வழங்க சுழல்நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதியில் 17000 கழிப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  அனைவருக்குó வங்கிக் கணக்கு திட்டத்தின் கீழ் புதுவையில் 70 ஆயிரத்துக்கு

மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 93.87 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அரசு தனியார் பங்கெடுப்பு திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. புதுவை காவல்துறையில் குற்றம் மற்றும குற்றக் கண்காணிப்பு வலைப்பின்னல் மற்றும் அமைப்புமுறை திட்டத்தை செயல்படுத்த ரூ.5.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை

காரைக்காலில் நல்லம்பல் ஏரியை சுற்றுலா மையமாக்க பணி நடந்துள்ளது. ரூ.3 கோடி செலவில் லாஸ்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணி முடிந்துள்ளது. ரூ.282 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடை திட்டம் நடப்பாண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தேசிய நிலப்பதிவேடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிலப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கிராமத்தை தூய்மையாக்கும் திட்டத்தின் கீழ் 45403

குடியிருப்புகள் கழிப்பறை இன்றி உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 10000 தனிநபர் கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனாம் பிராந்தியத்துக்கு குடிநீர் வழங்கல் விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.46 கோடி செலவில் கோதாவரி ஆற்றில் இருந்து குடிநீர் பெறப்படும்.

புதுவை நகரை குடிசைகள் இல்லா நகர் செயல் திட்டம் தயாரிக்க குடிசை மாற்று வாரியம் இதற்கான பணியை கலந்தாய்வுனரிடம் அளித்துள்ளது. மே மாதம் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். காரைக்கால் பகுதியில் போக்குவரத்துத் துறை வளாகம் மற்றும் ஓட்டுநர் சோதனை மையம் அமைக்கப்படும். தொழிற்சாலைகளில் இணையவழி கண்காணிப்பு முறையை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்தில் ரூ.400 கோடி செலவில் ஒருங்கிணைந்த கடற்கரை பகுதி மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

7 அம்சங்களைக் கொண்ட பருவகால நிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்த செலவான ரூ.463 கோடி உலக வங்கியிடம் பெறப்படும் என்றார் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.