ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலை கருவூலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்து சீலிடப்பட்ட 12 பெட்டிகளை வெளியே


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சார்நிலைக் கருவூலத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்து சீலிடப்பட்ட 12 பெட்டிகளை வெளியே தூக்கிச் சென்று அதிலிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடுத்துத் சென்றுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டி சார்நிலைக் கருவூலம் உள்ளது. இங்கு துணை கருவூல அதிகாரியாக சாந்தி உள்ளார்.வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டிச் சென்றுள்ளார்கள். சனிக்கிழமை காலை அலுவலகத்தை துப்புரவு செய்ய, பணியாளர் வந்தபோது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அலுவலர்களுக்கு துப்புரவு பணியாளர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீஸார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கொள்ளையர்கள் அலுவலகத்தின் பிரதான மரக்கதவை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டக அறையை உடைத்துள்ளனர். அங்கிருந்த நீதிமன்றங்களிலிருந்து கொண்டு வந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைத்திருந்த 6 பெட்டிகள், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பாதுகாப்பாக சீலிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் மற்றும் சார்நிலை கருவூலத்திற்குச் சொந்தமான ஒரு பெட்டி ஆகியவற்றை, அலுவலகத்தின் சுற்றுச் சுவருக்குப் பின்னால் தூக்கிச் சென்று உடைத்துள்ளார்கள். அதிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணம் முதலியவற்றை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளார்கள்.
சம்பவம் பற்றி அறிந்ததும் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அலுவலகத்தில் நீண்ட நாள் விடுப்பில் உள்ளவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் அலுவலர்களின் தகவல்களை சேகரித்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், கொள்ளையர்கள் சுமார் 3 மணி நேரம் இங்கிருந்து இச் சம்பவத்தை நடத்தியுள்ளனர். மேலும் அலுவலகத்தின் கதவை உடைத்து நேரடியாக பாதுகாப்பு பெட்டக அறைக்குத்தான் சென்றுள்ளார்கள். கருவூலத்தில், நீதிமன்றங்களில் இருந்து கொண்டுவரப்படும் நகைகள், பணம் உள்ளிட்டவை, வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் சமயத்தில் பறிமுதல் செய்யப்பட்டும் உரிமை கோரப்படாத பணம் உள்ளிட்டவை இருக்கும் என்று தெரிந்த நபர்களே இக் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்க முடியும். இக் கருவூலத்திற்கு கடந்த 15 ஆண்டுகளாகவே காவலாளி கிடையாது என்றனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின், நீதித்துறை நடுவர் கே.கவிதா ஆகியோர் வந்திருந்து, நீதிமன்ற நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்து உடைக்கப்பட்ட பெட்டிகளை பார்வையிட்டனர்.சம்பவ இடத்தில் விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் அலெக்ஸாண்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் அது ரயில் நிலையம் வரை ஓடிச் சென்றது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில், துணை கருவூல அதிகாரி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.கொள்ளையர்களைப் பிடிக்க காவல் துணை கண்காணிப்பாளர்கள் அ.சி.வெள்ளையன் (சிவகாசி), கே.முரளிதரன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகேசன் (ஸ்ரீவிலி. மதுவிலக்கு) ஆகியோர் தலைமையில் தனி குற்றப்பிரிவு போலீஸார் அடங்கிய படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பார்வையிட்டார். பின்னர் அவர் கருவூலத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் சார்நிலை கருவூலத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கும் உத்தரவிட்டார்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாய் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...