திருநெல்வேலி மண்டலத்தில் கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 297.45 கோடிக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மண்டல மேலாளர் நீ. கார்த்திகேயன்நாயர் தெரிவித்தார்.
மக்களின் ரசனைக்கு ஏற்ப புதிய கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தி செய்து, கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கைத்தறி துணி ரகங்களுக்கு அரசு பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்களில் பெருமளவில் ஆசிரியர்கள் கைத்தறி துணிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கைத்தறி துணி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி செப். 5 முதல் 14 ஆம் தேதி வரை ஆசிரியர் தின சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி காந்திமதி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர் தின சிறப்பு விற்பனையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விற்பனை மேலாளர் எஸ். வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, கோஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நீ. கார்த்திகேயன்நாயர் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதிய புதிய ரகங்கள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கைத்தறி துணிகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், ஆழப்புழை, திருவல்லா ஆகிய விற்பனை நிலையங்கள் அடங்கிய திருநெல்வேலி மண்டலத்தில் ரூ. 297.45 கோடிக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.